Popular Posts

Saturday 23 April 2016

குரு கிடைத்துவிட்டார் என்று ஒரு சீடன் எப்போது திருப்தி அடைவது?

குரு கிடைத்துவிட்டார் என்று ஒரு சீடன் எப்போது திருப்தி அடைவது? *** ஆன்மீக குரு இருக்கும் விலாசம் அறிந்துகொள்ளும்போதா?? *** தன் குருவை நேரில் சந்திக்கும்போதா??? *** குருவிடம் தீட்சை பெறும்போதா??? குரு இருக்கிறார்... நாம் சந்திக்காத நிலையிலும், தீட்சை பெறாத நிலையிலும்... ஏன் அவர்களின் விலாசம்கூட நமக்கு தெரியாத நிலையிலும் குரு குருவாகவே இருக்கிறார். நாம் அவரை சந்திக்காவிட்டாலும் அவர் நிலையில் மாற்றம் வரப்போவதில்லை. ஏனென்றால் அவரோ இறை அண்மை என்னும் பேரானந்தக் கடலில் சதாசர்வ காலமும் மூழ்கித் திளைக்கிறார். இறைவன் எப்படி இருக்கிறான் கவனிப்போம்... அவனோ பாரபட்சமின்றி தன் படைப்புகள் அனைத்திற்கும் அவையவைதம் எதார்த்தத்திற்கு ஏற்ப படியளக்கின்றான். அவனை அறிந்து கொண்டவருக்கும் அறியாதவருக்கும், அவனை தேடுபவர்க்கும் தேடாதவர்க்கும்... அவன் பொதுவானவனாக நீதி தவறாதவனாக இருக்கிறான்... இருப்பதை எல்லாம் தகுதி அறிந்து உகந்தோருக்கு உகந்தபடி உவந்து கொடுக்கின்றான்... தந்தையை பார்த்து நடத்தை பழகும் குழந்தைபோல ஞானகுருவானவரும் இறை அண்மையைவிட்டு நீங்காதிருக்க இறைவனின் பண்புகளை ஒத்து தன் செயல்களை அமைத்துக் கொள்கிறார்... அந்த அச்சிலேயே சுற்றிவருகிறார்... தனக்கென்று தனிப்பண்புகள் இல்லாத நிலையை அடைய தீராப் பயிற்சியில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்நாள் எனும் கெடுவை கவனமாக கழிக்கிறார். ஒரு குருவை பின்பற்றும் சீடன் தன் குருவின் இந்த விடாப் பயிற்சியின் நிலையை எய்தப் பெறும் வழியை கற்று அறிந்துகொண்டு... தனக்கென இருக்கும் பண்புகளை என்று விட்டொழித்து விழிப்படைகிறானோ... அன்றுதான் அவனுக்கு மெய்யாகவே குரு கிடைக்கிறார்... மாறாக குருவின் காலடியில் இருந்துகொண்டு தன்மயக்கத்தில் இருக்கும் ஒருவர் குருவின் கரம்பற்றி தீட்சை பெற்றதையே குரு கிடைத்துவிட்டதாய் கருதிக் கொள்வது மடமை அன்றி வேறென்ன??? இறைவன் கிடைக்கப் பெறுவதும் இப்படித்தான்!!

No comments:

Post a Comment