Popular Posts

Saturday 23 April 2016

சுந்தர நபியின் பெற்றோர்கள் காபிர்களா?

சுந்தர நபியின் பெற்றோர்கள் காபிர்களா?

 “நுபுவ்வத்” என்பது முயற்சியால் கிட்டுவதல்ல.
 இறைவனின் அருளால் கிடைப்பது.
 அதனால் மனிதர்களில் பரிசுத்தமானவர்களை தேர்ந்தெடுத்தே நுபுவ்வத்தை வழங்குகின்றான் வல்ல நாயன்.
 அதனால், நுபுவ்வத்தின் நிபந்தனைகளுள் “ஷிர்க்” போன்ற அசுத்தமில்லாத பரம்பரையும் ஒன்று என்று பிரபலமான அகீதா நூல் “முஸாயிறா” கோடிட்டுக் காட்டுகின்றது.

 அல்லாஹ{த்தஆலா பரிசுத்தமான முள்ளந்தண்டிலிருந்தும், தூய்மையான கருவறையிலிருந்தும் எப்போதும் என்னை திருப்பி வந்துள்ளான்.
 ஒரு கோத்திரத்தில் இரு கிளை வந்தால் அதில் மேலான கிளையிலிருந்தே வந்துள்ளேன் என்றும், “என்னை என் பெற்றோரிலிருந்து வெளிப்படுத்தும் வரை கண்ணியமான முள்ளந்தண்டிலிருந்தும், பரிசுத்தமான கருவறையிலிருந்தும் நான் திருப்பப்பட்டு வந்துள்ளேன் என்றும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.
 இப்படியான ஹதீதுகள் அநேகம் உண்டு.
 இதனை இமாம் ஸுயூத்தி, இமாம் ஸர்கானி, இமாம் காழி இயாழ் உள்ளிட்டோர் முறையே மஸாலிகுல் ஹுபைபா பீவாலிதில் முஸ்தபா, ஷரஹுஸ்ஷர் கானி அலல் மவாஹிபி, அஷ்ஷிபா போன்ற நூற்களில் எழுதியுள்ளனர்.

 பெருமானார் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களின் பெற்றோர் சொர்க்கவாதிகள் என்பதனை ஹாபிழ் இமாம் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தக்க ஆதாரங்களுடன் ஆறு நூற்கள் எழுதியுள்ளனர்.
 நபிகள் நாயகத்தின் பெற்றோர் செர்க்கவாதிகள் என்பதற்குரிய தக்க நியாயங்களுடனான சில ஆதாரங்களை கீழே தருகின்றோம்.
 சிந்திப்போருக்கு அது தெளிவையும் திருப்தியையும் கொடுக்கும் என்பது நமது நம்பிக்கை.

 1.நிச்சயமாக முஃமினான ஓர் அடிமை ஒரு முஷ்ரிக்கை விட மேலானவன்.
 அல்குர்ஆன்- 2 : 221

 றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் நவின்றார்கள்.
 ஆதத்தின் மக்களில் ஒவ்வொரு நூற்றாண்டிலிருந்தும் நான் பிறக்கும் நூற்றாண்டு வரை சிறந்த நூற்றாண்டிலிருந்தே அனுப்பப்பட்டுள்ளேன்.
 புகாரி ஷரீப்

 மேலும், புவியில் ஏழு முஸ்லிம்கள் தொடர்ந்தும் இருப்பர். இவர்கள் இல்லாவிட்டால் பூமியும் அதிலிருப்போரும் அழிந்துவிடுவர்.
 அறிவிப்பவர்: அலி ரழியல்லாஹு அன்ஹு
 நூல்: ஷறஹுஷ் ஷர்கானி, பாகம்- 1,பக்கம்- 172

 ஹளரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
 நூஹ் அலைஹிஸ்ஸலாமவர்களுக்குப் பின் பூமியில் ஏழு நல்லடியார்கள் தொடர்ந்து வந்துள்ளனர்.
 அவர்கள் பொருட்டால்தான் பூமியில் உள்ளோர் இறை தண்டனையிலிருந்து தடுக்கப்படுகின்றனர்.
 ஆதார நூல்: ஷறஹு ஷர்கானி பாகம்- 1,பக்கம்- 174

 றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பிறந்த நூற்றாண்டில் உள்ளோர் ஏனைய நூற்றாண்டில் உள்ளோரை விட மேலானவர்கள் என்று நபியவர்கள் நவின்றது புகாரீ ஷரீபில் பதிவாகியுள்ளது.

 முஸ்லிம் அல்லாத ஒரு காபிர் எவ்வளவு உயர் குடிமகனாக இருப்பினும் முஸ்லிமான அடிமையைவிட தரம் தாழ்ந்தவராகும் என்று திருமறை கூறுகின்றது.
 இவ்விரண்டையும் தொகுத்து நோக்கின் பூமான் நபியின் பெற்றோர் முஃமீன் என்பது உறுதியாகிவிடும்.

 மேலும், “நான் சங்கையான முதுகந்தண்டிலிருந்தும் தூய்மையான கருவறையிலிருந்தும் தொடர்ந்து வந்துள்ளேன் என்ற நபிமொழியையும், “அல்லாஹ்விடத்தில் சங்கையானவர் உங்களில் தக்வா உள்ளவரே” அல்குர்ஆன்
 நிச்சயமாக முஷ்ரிக்குகள் நஜீஸ்-அசுத்தமானவர்கள்(அல்குர்ஆன்) போன்ற திருமறை வசனத்தையும் ஒப்புநோக்கின் தாஹா நபியின் பெற்றோர் இறையச்சமுள்ள பெற்றோர் என்பது தெளிவாகின்றது.

 அபூதாலிப் விடயத்தில் இவ்வாறு நபியவர்கள் இயம்பினார்கள்.
 அவரை(அபூதாலிபை)நரகத்தின் ஆழத்தில் கண்டேன். அவரை அதன் கரைக்கு அப்புறப் படுத்தினேன்.
 ஆதாரம்:புகாரீ, முஸ்லிம்

 மற்றுமொரு அறிவிப்பில், நான் இல்லாவிட்டால் அவர் நரகத்தின் அடித்தட்டிலேயே இருப்பார்.
 ஆதாரம்:முஸ்லிம்

 இன்னுமொரு அறிவிப்பில், “நரகில் மிகவும் இலகுவான தண்டனை அபூதாலிபுக்குரியதாகும்.
 ஆதாரம்: முஸ்லிம்

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அவர்களின் பெற்றோராகும்.
 அபூதாலிப் அவர்கள் நபிகள் நாயகத்தின் நுபுவ்வத்தின் காலத்தில் வாழ்ந்தவர்.
 பலமுறை அவருக்கு அழைப்பு விடுத்தார்கள்.
 அவரின் உயிர் பிரியும் வேளையும் நபியவர்கள் அழைப்பு விடுத்தார்கள்.
 அபூதாலிப் மறுத்துவிட்டார்.
 காபிராகவே மரணித்தார்.
 நுபுவ்வத்தின் அழைப்பு கிடைத்து அதனை மறுத்த நிலையில் மரணித்த அபூதாலிபுக்கு நரகில் ஆகக்குறைந்த தண்டனையாயின் நுபுவ்வத்தின் அழைப்பு கிட்டாமல் மரணித்த நபியவர்கள் பெற்றோர்(மஆதல்லா)நரகிலிருந்தால் அதனைவிட குறைந்தளவு தண்டனையல்லவாகிட்ட வேண்டும்!
 அபூதாலிபை விட நெருக்கத்திலும், பாசத்திலும் கூடியவர்கள் கோமான் நபியின் பெற்றோர் அல்லவா? நரகத்தை துளாவி அபூதாலிபைக் கண்டுபிடித்த காருண்ய நபிக்கு தனது பெற்றோர், பாட்டன்கண்ணுக்குப் புலப்படாமல் போனது எப்படி?
 அல்லாஹ்வுக்கும் தனது பெற்றோருக்கும் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும் என்று திருமறை அழுத்தமாகக் கூறும்போது நபியவர்கள் பெற்றோருக்கு நன்றி மறந்தவர்களாக ஆனார்களா? நஊதுபில்லாஹ்,

 அபூதாலிப் பெருமானாருக்காக பல தியாகங்கள் செய்தார்.
 அதனால்தான் அவருக்கு இச்சலுகை கிட்டியது என்று யாராவது நியாயம் கற்பித்தால் அது காபிர்களின் அமல்களை பரத்தப்பட்ட புழுதியாக நாம் ஆக்கினோம் என்ற திருமறை வசனத்திற்கு முரணாகவே அமையும்.
 எனவே, அபூதாலிபின் அமலோ, தியாகமோ அவருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவில்லை.
 தவிர பெருமானார் மீது அவர் வைத்திருந்த உண்மையான பாசமே அவருக்கு துணை நின்றது. அப்படியாயின் பாசத்திற்குரிய பெற்றோரின் நிலை என்ன?

 அல்லாஹுத்தஆலா கூறுகின்றான், கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் முஃமின்களுக்குமாகும். எனினும் முனாபிகுகள் இதனை அறிய மாட்டார்கள்.
 அல்குர்ஆன்- 63 : 8

 மேலும் கூறுகின்றான், மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் உங்களை அறிந்து கொள்வதற்காக கோத்திரங்களாகவும், கிளைகளாகவும் உங்களை ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ் விடத்தில் உங்களில் அதிகம் கண்ணியமுள்ளவர் அல்லாஹ்விடத்தில் உங்களில் அதிகம் தக்வா உள்ளவரேயாகும்.
 அல்குர்ஆன்- 49 : 13
 மேற்கண்ட திருவசனத்தில் கண்ணியம் முஃமின்களுக்கு மட்டுமே என்றும் காபிர்கள் கண்ணியத்திற்குரியவர்கள் அல்ல என்றும் தெளிவாகக் கூறியுள்ளான்.

 நபியவர்கள் நவின்றார்கள். ஒரு மனிதர் கண்ணியத்தையும், கௌரவத்தையும் எதிர்பார்த்து காபிரான தனது மூதாதையர்களில் ஒன்பது தலை முறையைக் கூறுவாராயின் அவர்களில் பத்தாவது தலைமுறையினர். (அதாவது இவரும்)நரகில் இருப்பர்.
 ஆதார நூல்:முஸ்னத் அஹ்மத், பாகம்- 4,பக்கம்- 134

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தங்களது தந்தை, தாய் வழி பரம்பரையைப் பெருமையோடு பலமுறை கூறியுள்ள பல ஹதீதுகள் ஹதீதுப் பெருநூற்களில் பதிவாகியுள்ளன.
 ஹுனைன் யுத்தத்தின்போது ஒரு சந்தர்ப்பத்தில் காபிர்களின் கை ஓங்கியிருந்தது. அப்போது பயகம்பர் நபியவர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டன. நபியவர்கள் சஹிதாக்கப்பட்டதாக ஷைத்தான் களத்தில் வதந்தியைப் பரப்பி ஸஹாபாக்களை கதி கலங்கச் செய்தான். இப்படியான நிலையில் நபியவர்கள் “நான் நபி. பொய்யனல்ல. நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன்” என்று உரத்துக் கூறினார்கள்.
 புகாரி ஷரீப், முஸ்லிம் ஷரீப்

 நபியவர்கள் தனது மூதாதையர்களின் 21பேரின் திருநாமங்களை பெருமையோடு கூறினார்கள்.
 இவர்கள் அனைவரும் குலத்தால் உயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.
 எனின், இவர்கள் அனைவரும் சத்திய முஸ்லிம்கள் என்பது தெளிவாகின்றது.

 நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் கன்ஆன் நூஹ் நபியவர்களை ஈமான் கொள்ளவில்லை. காபிராக இருந்தான். அதனால், அல்லாஹுத் தஆலா அவன்(கன்ஆன்)உமது குடும்பத்தைச் சார்ந்தவனல்ல. நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களைச் செய்துள்ளான்.
 அல்குர்ஆன்- 11 : 46
 மேற்கண்ட திருவசனம் ஒரு முஸ்லிமுக்கும், காபிருக்குமிடையிலான குடும்ப உறவு அற்றுப்போய் விடுகின்றது என்பதை உறுதி செய்கின்றது.
 அதனால் ஒரு முஸ்லிமின் அனந்தரச் சொத்து காபிரான பிள்ளைகளைச் சேராது என்றும் ஷரீஅத் சட்டம் கூறுகின்றது.
 ஆனால், நபியவர்கள் நவின்றார்கள், நாங்கள் நம்றுப்னு கினானாவின் பிள்ளைகள். நாங்கள் எங்களின் மூதாதையரின் பரம்பரையை துண்டித்து வேறுபடுத்துவதில்லை.
 ஆதாரம்:அபூதாவூத் அஹ்மத், இப்னு மாஜா

 காபிர்களுடனான குடும்ப உறவு துண்டிக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது என்றால் பெருமானாரின் மூதாதையர் நஊதுபில்லாஹ் காபிர் என்றால் குடும்ப உறவு எப்படி பேணப்படும். துண்டாக்காமல் போனது எப்படி?

 இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் “அப்ழலுல் குறா” என்ற நூல் பாகம்- 01.பக்கம்-59 இல் இவ்வாறு எழுதுகின்றார்கள்.
 “நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பரம்பரையில் எத்தனை பேர் நபியாக வந்தார்களோ அவர்கள் அனைவரும் நபிமார்கள்தான்.
 நபிமார்கள் அல்லாத அவர்கள் தாய் தந்தையர்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் வரையில் எவரும் காபிராக இருக்கவில்லை.
 ஒரு காபிரை முக்தார்-தேர்ந்தெடுக்கப்பட்டவர், கரீம்-சங்கையானவர், தாஹிர்-பரிசுத்தமானவர் என்று விளிப்பதில்லை.
 காபிர் நஜீஸ் அசுத்தமானவரே சஹீஹான ஹதீதுகளில் பெருமானாரின் பெற்றோரை முக்தாறூன்-தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆபாஉல் கிறாம் சங்கையான பெற்றோர்கள் பரிசுத்தமான தாய்கள் என்றெல்லாம் வந்துள்ளன.
 “ஸ{ஜூது செய்பவர்களின் முள்ளந்தண்டிலிருந்து நீ புரட்டப்பட்டுள்ளீர்” என்று அல்லாஹுத்தஆலா திரு மறையில் குறிப்பிட்டுள்ளான்.
 இத்திருவசனத்திற்கான ஒரு விளக்கமாக பெருமானாரின் ஒளி ஸுஜூது தொழுகையாளிகளின் முள்ளந்தண்டிலிருந்தே மாறி மாறி வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 அப்படியாயின், இக்கூற்று பூமான் நபியவர்களின் பெற்றோரான அன்னை ஆமினா அவர்களும் தந்தை அப்துல்லாஹ் அவர்களும் சொர்க்கவாதிகளாகும்.
 காரணம், அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் மூதாதையர்களில் மிக நெருக்கமானவர்களாகும்.
 இதுதான் உண்மை, சத்தியம்.

 அல்லாஹுத்தஆலா பெருமானாரின் பெற்ரோரை உயிர்ப்பித்து நபியவர்களைக் கொண்டு ஈமான் கொள்ளச் செய்தான் என்று வந்துள்ளது.
 இந்த ஹதீதில் குறை காண்பவனை கவனத்தில் எடுக்க வேண்டாம்.
 ஒரு றஸூலை நாம் அனுப்பும்வரை நாம் தண்டிப்பவனாக இல்லை.
 அல்குர்ஆன்- 17 : 16

 நபிமார்கள் இல்லாத காலம் நபிமார்களின் அழைப்புக் கிட்டாதவர்கள் “பத்றத்துடையவர்கள்” என்று இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது.
 இவர்கள் தண்டனைக்குரியவர்கள் அல்ல. வெற்றி பெற்றோர்கள் என்பதுதான் ஷரீஅத்தின் தீர்மானமாகும்.
 இது பற்றி அகீதா நூற்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

 11ஆம் ஆண்டு இஸ்லாம் பாட நூலிலும் (பழையது)பத்றத்துடையவர்கள் வெற்றியாளர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
 பத்றத்துடைய காலத்திலுள்ளோர் தண்டிக்கப்பட்டால் இவ்வாறு இயம்புவர். இரட்சகா எம்பால் ஒரு தூதரை நீ அனுப்பியிருந்தால் உமது அத்தாட்சிகளை நாம் பின்பற்றியிருப்போம்.
 அதனால் முஃமின்களில் கூட்டத்தில் நாம் ஆகியிருப்போம் என்றுகூறுவர்.
 அல்குர்ஆன்- 28 : 47

 நரகவாசிகள் நரகத்தின் கொடிய வேதனையை அனுபவிக்கின்ற நேரத்தில், தாம் றஸூலுக்கு மாறு செய்தமையால்தான் இக்கொடிய வேதனைக்கு ஆளாக்கப்பட்டோம் என்று எண்ணி வருந்துவர். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான், “அவர்களுடைய முகங்களை புரட்டிப்புரட்டி நெருப்பில் பொசுக்கும் நாளில் எங்களின் கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டிருக்க வேண்டாமா? என கதறுவார்கள்.
 அல்குர்ஆன்- 33 : 66

 மேற்கண்ட திருவசனத்தில் பத்றத்துடையவர்கள் தண்டனைக்கெதிராக காரணம் கூறுவர்.
 ஆனால், காபிரானவர்களோ எதுவித காரணமும் கூற திராணியற்ற நிலையில் ஒலமிட்டு ஒப்பாரி வைப்பர் என்பது புலனாகின்றது.
 பத்றத்துடைய காலம் என்பது இரு நபிமார்களுக்கிடையிலான வெற்றுக் காலமாகும்.
 நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாமவர்களுக்குப் பின் அறபிகளுக்கு நபிமார்கள் அனுப்பப்படவில்லை.
 அதனால் மூவாயிரம் ஆண்டுகள் நபிமார்களின் அழைப்பில்லாத சமூகமாக அறபிகள் வாழ்ந்தனர்.
 அதனால், நபிமார்கள் பற்றிய ஞானம் இல்லாதவர்களாகவே கணிசமான அறபிகள் இருந்துள்ளனர்.
 அதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் நபியாக அனுப்பப்பட்ட போது மக்காவாசிகள் வியப்படைந்தவர்களாக
 “அல்லாஹ் மனிதரையா றஸூலாக அனுப்பினான்.” என்று வியப்பு வினா எழுப்பினர்.
 அல்குர்ஆன்- 17 : 94

 மேலும் கூறினார்கள்.
 அல்லாஹ் நாடியிருந்தால் மலக்குகளை(தூதர்களாக)அனுப்பியிருப்பான்.
 இச்செய்தியை நாம் நமது முன்னோர் களிடமிருந்து கேள்விப் படவில்லையே!என்று கூறுவர்.
 அல்குர்ஆன்- 23 : 24

 நபிமார்கள், றஸூல்மார்கள் பற்றிய ஞானம் அறபிகளிடம் பரவலாகக் காணப்பட்டிருந்தால் இப்படி அவர்கள் பதில் கூறியிருக்கமாட்டார்கள்.
 அதனால்தான் நபிமார்களின் அழைப்பு கிட்டாத அறபுசமூகம் பத்றத்துடைய காலத்தில் வாழ்ந்தவர்களாக கருதி அவர்கள் சொர்க்கவாதிகள் என்று தீர்ப்புக் கூறினர்.
 நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பரம்பரையில்தான் நபியவர்கள் வந்தார்கள் என்பது உறுதி. இப்றாஹீம் நபியின் தந்தை “ஆஸர்” காபிர் என்று திருமறை கூறுகின்றதே என்று கேட்கலாம்.
 நியாயமான கேள்வி. “ஆஸர்” என்பவர் இப்றாஹீம் நபியவர்களின் தந்தை அல்ல.
 இவர்களின் தந்தையின் பெயர் “தாறக்”.இப்றாஹீம் நபியவர்கள் இள வயதினராக இருக்கும்போது வபாத்தாகிவிட்டார்.
 இவரின் சகோதரரான ஆஸர் என்பவர் இப்றாஹீம் நபியவர்களை வளர்த்தார்கள்.
 சிறிய தந்தையை தந்தை என்று கூறுவது அவர்கள் வழக்கம்.
 அவ்வழக்கத்தை ஒட்டியே திருமறை “ஆஸரை” இப்றாஹீம் நபியவர்களின் தந்தை என்று கூறுகின்றது.
 இதற்குத் திருமறையில் பல எடுத்துக்காட்டுக்களை கூறமுடியும்.
 விரிவஞ்சி விடுகின்றோம்.

 நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் இவ்வாறு பிரார்த்தித்தார்கள். “இரட்சகா என்னையும், எனது பிச்சளத்தையும் தொழுகின்றவர்களாக ஆக்கி வைப்பாயாக!
 அல்குர்ஆன்- 14 : 40

 நபி இப்றாஹீம் அலைஹி ஸ்ஸலாம் அவர்களின் துஆவை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான்.
 அதனால் நபியவர்களை ஸூஜூது செய்பவர் களிடமிருந்து உம்மை திரும்பினோம் என்று கூறுகின்றான்.
 இவ்வாறு எண்ணற்ற ஆதாரங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கும்போது வஹ்ஹாபிகள் பெருமானாரின் தாய் நரகத்திலிருப்பதாக எப்படி வாய், மனம் கூசாமல் கூறமுடியும்?
 இப்படிக் கூறுவதால் இவர் எதிர்பார்ப்பது என்ன?
 சிந்திக்க வேண்டும்.
 ஜாமிஆ நளிமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கைறுல் பஷர் என்பவர் தனது “உலுல் அஸ்ம் இறைத்தூதர்கள்” என்ற நூல் பக்கம்- 125இல் முஹம்மது நபியவர்களை முதல் மனிதராகவும் நபிமார்கள் றஸூல்மார்களுள் முதலாமவராகவும், அர்ஷ், குர்ஷி லௌஹுல் மஹ்பூல் முதலானவற்றைப் படைக்க முன்னர் அல்லாஹ் முஹம்மது நபியைப் படைத்து விட்டான் என்பது அற்பமான மனிதர்களின் கூற்றுக்களாகும் என்றும், முஹம்மது நபியவர்கள் பிறப்பிலும், இறப்பிலும் பல விஷேட சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தார்கள் என்றும் இந்த அற்பர்கள் கூறியுள்ளனர்.
 இது நபிகளாரின் மீது கொண்ட அளவு கடந்த நேயத்தின் பலவீனமாக இருக்கலாம்.
 முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனித ஆளுமையை இந்த அறிஞர்கள் என்ன முஸ்லிம் புத்திஜீவிகள்கூட குறைவாக மதிப்பிடுவதற்கு இது வழிகோலும் என்பதை அறியும் ஆற்றல் இந்த அற்பர்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 மேலும், அதே நூல் பக்கம்- 127இல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உம்மத்தின் அமல்கள் தினமும் இருமுறை எடுத்துக் காண்பிக்கப்படுகின்றன என்று நம்புவதையும் இவர் கடுமையாக சாடி எழுதியுள்ளார்.
 அத்துடன் இதே கைறுல் பஷர் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் மரணித்து விட்டதாகவும் எழுதியிருந்தார்.
 இப்படியாக நழீமிய்யாவின் விரிவுரையாளர்கள் மதி மயங்கி சுயமிழந்து எங்கோ யாரிடமோ தங்களைப் பறிகொடுத்த நிலையில் கூறுவது புதியவைகளல்ல.
 குளிக்கப் போய் சேற்றைப் பூசிய கதையாகத்தான் நழீமிய்யாவின் வரலாறு பதியப்படுகின்றதா? என்று கேட்கத் தோன்றுகின்றது.
 நழீமிய்யாவின் பகட்டான தோற்றமும், உலகியல் கல்வியின் கவர்ச்சியும் அவர்களின் மார்க்க விரோதங்களை மறைத்து விட்டது.
 கையளவு கற்றுவிட்டு கல்விக் கடல்களை விமர்சிக்கும் அளவு இறுமாப்புப் பெற்றுவிட்டனர்.
 கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டம் ஏறி வானிலவு பிடிக்கப்போன கதை போன்று இவர்கள் கதையும் அமைந்திருக்கின்றது.
 மின்னுவதைப் பொன்னாகக் கருதும் இவர்கள் மத்ஹபுகளுடைய இமாம்களை புறந்தள்ளிவிட்டு யூஸூப் கர்ளாவி போன்றோரின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுகின்றனர்.
 ஏதோ புதியவைகளை ஆய்வு செய்து புத்திபூர்வமாகச் கூறுவதாக இவர்கள் கூறுவதெல்லாம் பத்தாம் பசலி வாதங்கள்தான்.
 வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தின் வாதங்களையும், மத்ஹபுகளை மறுக்கின்ற வழிகேடர்களின் போதனைகளையும் புதிய முலாமிட்டு தங்கள் லேபலில் சந்தைக்கு விடுகின்றனர்.
 இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாத அப்பாவிகள் ஆஹா! ஓஹோ! என்ன ஆய்வு! என்ன விளக்கம் என்று ஏமாந்து போய் விடுகின்றனர்.

 எனவே,சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளுக்கு மாறாகப் பேசும் விஷக்கிருமிகள் யாராக இருந்தாலும் அவர்களை இனங்கண்டு ஒதுக்கி, ஒதுங்கி வாழ வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்

No comments:

Post a Comment