Popular Posts

Monday 25 April 2016

பித் அத் என்றால் என்ன? ஒரு விளக்கம்.

பித் அத் என்றால் என்ன?
 ஒரு விளக்கம்.

 அன்று முதல் இன்று வரை நாம் பி்ன்பற்றியொழுகி வருகின்ற எத்தனையோ நல்ல செயல்களை அவை பித்அத் என்று கூறி, அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அழகுறு பாதையிலிருந்து விலகி வழிகெட்டும், வழிகெடுத்தும் வருகின்ற சில அதிபுத்திசாலிகள்!
 திருமறையையும், திருநபி வழி முறைகளையும் மட்டுமே நாங்கள் பின்பற்றுகின்றோம் ஏற்றுக் கொள்கின்றோம் என்று கூறித்திரியும் இவர்கள், திருமறை மூலமாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் நற்செயல்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்ட காரியங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக பித்அத் எனவும் பித்அத்கள் அனைத்தும் வழிகேடே எனவும் பிரசாரம் புரிகின்றனர்.
 சுன்னத் என்றால் என்ன? பித்அத் என்றால் என்ன? என்பது குறித்த அடிப்படை அறிவு இல்லாத காரணத்தினாலேயே அவர்கள் இவ்வாறான தப்புப் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
 “திருமறை, திருநபி வழி முறை ஸஹாபாக்களின் நடைமுறை, இமாம்களின் ஒத்த கருத்துரை ஆகியவற்றுக்கு எதிராக புதிதான ஒன்றைக் கொண்டு வந்தால் அது வழிகெட்ட தவறான பித்அத்!“
 மேற்கூறப்பட்டவைகளுக்கு முரணில்லாமல் ஒரு நற்செயலை உருவாக்கினால் அது ஏற்றுக் கொள்ளப்பட்ட - புகழுக்குரிய பித்அத்! என சட்டமேதை இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றனர்.
 நூல் : பத்ஹுல் முயீன், பக்கம் - 95
 தஹ்புல் அஸ்மாஉவல்லுகாத், பாகம் - 02, பக்கம் - 23
 பித்அத்களை இவ்வாறு இருவகையாகப் பிரித்து எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? “எல்லா பித்அத்களுக்கும் வழிகேடு, எல்லா வழிகேடுகளும் நரகில்!“ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் அவர்கள் கூறுகின்றனரே! என்பது சில அறிவாளிகளின் வினா! விடையைத் தேடும் இந்த வினாவுக்கான பதில் சற்று விரிவாகத்தான் தரவேண்டும்.
 “அல்லாஹ்வை நீங்கள் நேசிப்பீர்களாயின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் என நபியே! கூறுங்கள்“
 (அல்குர்ஆன்)
 நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் அவர்களைப் பின்பற்றுவது என்றால் என்ன? அவர்களின் சுன்னத்துக்களை ஏற்றுக்கொண்டு செயல்படுதல்! (சுன்னத் என்றால், நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் மூன்றும் இடம்பெறும்)
 பித்அத் என்றால் “அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் அவர்களின் காலத்தில் இல்லாத ஒரு புதிய செயல்
 மிர்காத்,பாகம் - 01, பக்கம் - 178
 பெருமானாரின் காலத்தில் இல்லாதவற்றை நாம் செய்யலாமா? கூடாதா? எல்லா பித்அத்துகளுமே வழிகேடுகள்தானா? ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம். இமாம்கள் பித்அத்களை இரண்டாகப் பிரித்து நல்லவை, கெட்டவை எனப் பெயர் சூட்டியது எந்த அடிப்படையில்? இதனையும் ஹதீஸ்கள் மூலமே தெளிவுபடுத்துவோம்.
 ஸெய்து இப்னு தாபித் கூறுகின்றார்கள், யமாமா போர் நடந்து கொண்டிருந்தபோது கலீபா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு என்னை அழைத்துவர ஆளனுப்பினார்கள். நான் சென்றபோது கலீபாவுடன் உமரும் இருந்தார்கள். யமாமாப் போரில் குர்ஆனைப் பாடமிட்டிருந்த பலர் மறைந்து விட்டனர். மீதமுள்ளோரும் இப்படியே கொல்லப்பட்டு விடுவார்களாயின் குர்ஆனைப் பாடமிட்டவர்கள் இல்லாமலாகி விடுவார்களோ என அஞ்சுகின்றேன்.
 எனவே, திருமறையை நூலுருவில் கொண்டுவர வேண்டுமென உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் அவர்கள் செய்திராத ஒரு காரியத்தை நாம் எப்படிச் செய்வது? என்று உமரிடம் கேட்டேன். இறைவன் மீது ஆணையாக! இது நல்லதோர் செயல்! என உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள். அல்லாஹ் இது விஷயத்தில் உமருடைய இதயத்தை விசாலமாக்கி வைத்ததுபோன்று எனது இதயத்தை விசாலமாக்கி வைப்பது வரை என்னிடம் பலமுறை எடுத்துக் கூறினார்கள். தற்போது எனக்கும் உமருடைய அபிப்பிராயம்தான்! எனவே அறிவாளியும், இளைஞரும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் அவர்களின் வஹியை அவ்வப்போது எழுதி வந்தவர்களுமான தாங்கள் குர்ஆனை நூலுருவில் சேர்க்கின்ற பணியினை செய்திட வேண்டும் என கலீபா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
 பெரியதொரு மலையைப் பெயர்த்தெடுக்கக் கூறினால் அது எனக்கு இலேசான காரியமாக இருந்திருக்கும். நபி பிரான் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் அவர்கள் செய்யத் துணியாததை நீங்கள் ஏன் செய்ய வேண்டும் என நான் கேட்டேன். அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள், “இஃதோர் சிறந்த செயல்!“ என இதயத்துக்கு சமாதானம் ஏற்படுவதுவரை பன்முறை இந்தக் காரியத்தைக் குறித்து அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு கூறிக்கொண்டே இருந்தனர். பி்ன்னர் நான் குர்ஆனை சேகரிக்கத் தொடங்கினேன்.
 புகாரி : பாகம் - 01, பக்கம் - 745
 நபிகளாரின் காலத்தில் இல்லாத செயல்கள் எல்லாமே வழிகேடு. நரகத்தில் சேர்ப்பவை என்றிருக்குமாயின் அபூபக்கர், உமர், ஸெய்து போன்ற கண்ணியமிகு நபிமணித் தோழர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செய்யாத ஒரு செயலைச் செய்து “அதற்கு நற்செயல்“ என பெயருமிட்டனர் என்றால் அவர்கள் வழி கேட்டுக்குத் துணை போயினரா? அனாச்சாரத்தின் மீது ஸஹாபாக்களும் ஒத்த கருத்துக் கொண்டிருந்தனரா?
 இந்த அடிப்படையில்தான் இமாம்கள் பித்அத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தனர். நல்லது கெட்டது என வகைப்படுத்தினர்.
 எனவே, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காலத்தில் இல்லாத புதிய செயல்களுக்கு ஷரிஅத்தில் பித்அத் என்று கூறப்படும். இது நல்லது, கெட்டது என இருவகைப்படும் என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.
 நூல் : தஹ்தீபுல் அஸ்மாஉ, பாகம் - 02, பக்கம் - 22
 மிர்காத், பாகம் - 01, பக்கம் - 178
 ரமழானின் ஓர் இரவில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களோடு நான் பள்ளிக்குச் சென்றேன். சிலர் தனித்தும், வேறு சிலர் ஜமாஅத்தாகவும் தொழுது கொண்டிருந்தனர். இதனைக் கண்ட உமர் ரழியல்லாஹு அன்ஹு “இவர்களை ஒரே இமாமின் கீழ் ஜமாஅத்தாக தொழச் செய்வது மிகச் சிறந்தது“ எனக் கூறி உபய் இப்னு கஃபு ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் ஜமாஅத் ஆக்கினார்கள். மற்றொரு நாள் நான் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிக்குச் சென்றபோது மக்கள் ஜமாஅத்தாக தொழுது கொண்டிருந்தனர். இது கண்ட உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் “இஃதோர் நல்ல பித்அத்“ என்றனர். அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்காரி அறிவிக்கின்ற இந்நிகழ்ச்சியை புகாரி (பாகம் - 01, பக்கம் - 269)யில் காணலாம்.
 தராவீஹ் தொழுகையினை ஜமாஅத்தாக தொழச்செய்து அதற்கு நல்ல பித்அத் என்ற பெயரும் சூட்டினர் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்! எனவே எல்லா பித்அத்துகளும் வழிகேடல்ல என்பது தெளிவாகின்றது.
 யாராவது இஸ்லாத்தில் ஒரு நல்லசெயலை அறிமுகப்படுத்தினால் அதனுடைய கூலியும், அதனை செயல்படுத்தியவரின் கூலியும் அறிமுகப்படுத்தியவருக்குக் கிடைக்கும். யாராவது ஒரு தீய செயலைக் கொண்டு வந்தால் அதனுடைய தண்டனையும் கிட்டும்.
 முஸ்லிம், பாகம் - 01, பக்கம் - 241,
 இப்னு மாஜா, பக்கம் - 18,
 மிஷ்காத், பாகம் - 01, பக்கம் - 33
 இறைவனும் இறைத்தூதரும் திருப்தியுறாத வழிதவறிய ஒரு பித்அத்தை கொண்டுவருவோருக்கு அதனுடைய தண்டனையும், அதை செய்பவனுக்குரிய தண்டனையும் கிடைக்கும் (இப்னு மாஜா, பக்கம் - 19, மிஷ்காத், பாகம் - 01, பக்கம் - 30) இந்த நபிமொழிக்கு விளக்கமெழுதிய ஹதீஸ்கலை விற்பன்னர் முல்லா அலீகாரி ரஹ்மத்துல்லாஹி நல்ல பித்அத்கள் தவறானதல்ல என்பதைக் காட்டுவதற்கே தீய பித்அத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தமது மிர்காத், பாகம் - 01, பக்கம் - 202இல் எழுதுகின்றார்கள்.
 இந்த ஹதீஸ்களின் அடிப்படையில்தான் இமாம்கள் பித்அத்களை வகைப்படுத்தினரே தவிர ஆதாரமின்றி வகைப்படுத்தவுமில்லை. புதுக்கொள்கைகாரர்கள் கூறுவதுபோன்று எல்லா பித்அத்களும் வழிகேடுமல்ல! அப்படிக் கூறுபவன்தான் வழிகேட்டின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றான் என்பது மறுக்கமுடியாத உண்மை!
 எனவே, ஹதீஸ்கள், ஸஹாபாக்களின் நடைமுறைகள் ஆகியவற்றின்படி இமாம்கள் வகுத்துத் தந்துள்ள நல்ல பித்அத்களை நாம் செய்தால் அவற்றுக்கு அல்லாஹுவுடையவும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் அவர்களுடையவும் அங்கீகாரம் உண்டு, நற்கூலியும் உண்டு என்பது உறுதி!
 நபிமொழித் தொகுப்பு நூற்களில் “எல்லா பித்அத்களும் தவறானவை“ என்று கூறுகின்ற சில ஹதீஸ்களை காணலாம். இங்கெல்லாம் பித்அத்தே ஸெய்பிஆ- தீய பித்அத் என்றே நபிமொழிக்கலை வல்லுனர்கள் விளக்கம் தந்துள்ளனர்.
 “எல்லா பித்அத்துகளும் வழி கேடானவை“ என மிஷ்காத் பாபுல் இஃதிஸாம் எனும் பாடத்தில் வருகின்ற நபிமொழிக்கு, மிஷ்காத்தின் விளக்கவுரை நூலான அஷிஃஅத்துல்லம் ஆத் இவ்வாறு விளக்கம் கூறுகிறது.
 “எந்தவொரு பித்அத்தும் அடிப்படை விதிகளுக்கும், ஸுன்னத்திற்கும், ஷரீஅத்தின் நடைமுறைகளுக்கும் ஒத்திருந்தால் அதனை பித்அத்தே ஹஸனா - நல்ல பித்அத் எனவும், முரண்பட்டிருந்தால் பித்அத்தே ஸய்யிஆ தீய பித்அத் எனவும் கூறப்படும்“.
 இப்போது பித்அத்களெல்லாம் வழிகேடு என்று கூறப்படுவதின் அர்த்தம் புரிந்திருக்கும். வல்லான் அல்லாஹ் உண்மைகளைப் புரிந்து, அதனை ஏற்றுக்கொண்டு செயல்படும் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அழகிய பாதையில் என்றும் நம்மையும், நம்சந்ததிகளையும் நிலைத்து வாழச் செய்வானாக!

No comments:

Post a Comment