Popular Posts

Saturday 23 April 2016

ஹழ்ரத் தப்லேஆலம் பாதுஷா நாயகம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்ந்த சம்பவங்கள்.:


ஹழ்ரத் தப்லேஆலம் பாதுஷா நாயகம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்பு:
அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குலவழியிற் தோன்றிய ஹழ்ரத் அஹமது கபீர் (ரஹ்) அவர்களுக்கும் அன்னை ஃபத்ஹுன்னிஸா (ரஹ்) அவர்களுக்கும் மகனாக பிறந்தார்கள் ஹழ்ரத் தப்லேஆலம் பாதுஷா அவர்கள், (இவர்கள் தந்தை மற்றும் தாய் இருவரின் வழியிலும் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கிளையைச் சேர்ந்தவர்கள்)
இஸ்தான்புல் நாட்டில் பஹனஸா என்ற நகரின் அரசராக இருந்த பாதுஷா நாயகத்தின் தந்தை அஹமது கபீர் (ரஹ்) அவர்கள் நாற்பத்தைந்து வயது வரை பிள்ளைச் செல்வம் இல்லாமல் பெருந் துயரத்தில் ஆழ்ந்திருந்தனர், அதற்காக அவர்கள் செய்த வைத்தியங்களும் பலனளிக்கத் தவறியது. அச்சமயத்தில் தமது பாட்டானார் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரவ்லா ஷரீஃபிற்கு சென்று தனது உள்ளக் குமுறலை சொல்லி முறையிடலாம் என்ற எண்ணம் ஏற்படவே உடனே மதினாவிற்கு விரைந்தார்கள், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லா ஷரீஃபின் முன்னே கண்ணீரினால் முறையீட்டை முன்வைத்தார்கள்.
அன்றிரவு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஹழ்ரத் அஹமது கபீர் (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றி ஒரு மாதுளங் கனியை தந்து அதனை உண்ணப் பணித்து, "ஒன்றிற்கும் கவலையுறாதீர், இறையருளால் உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறக்கும் அப்பிள்ளை இறைநேசர்களின் உயர்ந்த அந்தஸ்தான "குத்பு" எனும் பதவியை பெறும், இந்த மாதுளையில் எத்தனை சுனைகள் உள்ளனவோ அத்தனை சீடர்களை அவர் பெற்றிருப்பார், அவர்களுக்கு விலாயத் உடையவராக திகழ்வார்" என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபச் செய்தி அருளிய சில நாட்களில் அன்னை ஃபத்ஹுன்னிஸா கருவுற்றார்கள், பின்னர் பத்து மாதங்கள் பறந்தோடவே ஹிஜ்ரி 347ஆம் ஆண்டு துல்ஹஜ் திங்கள் இரண்டாம் நாள் (14/02/952) சனிக்கிழமை அன்று, அழகிய ஆண்பிள்ளையை ஈன்றெடுத்தார்கள் அன்னை ஃபத்ஹுன்னிஸா அவர்கள். தவமிருந்து பெற்ற செல்வத்திற்கு "முதஹ்ஹருத்தீன்" என்று ஏழாம் நாள் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்..!
 ஹழ்ரத் தப்லேஆலம் பாதுஷா நாயகமவர்கள் ஞானகுருவைத் தேடிச் சென்று (பைஅத்) தீட்சைப் பெறுதல்:
தமது 21ஆம் வயதிலே அரசவாழ்க்கையைத் துறந்து அல்லாஹ்வை அடைய வேண்டுமென்ற எண்ணத்தில் ஞானகுருவைத் தேடி பஹனஸா நகரிலிருந்து தொள்ளாயிரம் மக்களுடன் புறப்பட்ட பாதுஷா நாயகமவர்கள், காடு மலையென்று கால் போனபோக்கில் நீண்ட பயணத்தை மேற்கொண்டார்கள், கற்களும் முட்களும் தைத்து அவர்களோடு நடந்தவர்களின் பாதமெல்லாம் குருதி சிந்த தொடங்கியது, அவர்களுக்கு மட்டும் இதயத்தினில் குருதி சிந்தியது காமிலான ஞானகுருவை எங்ஙனம் காண்போம் என்று.
பல நாட்கள் பயணம் தொடர்ந்தது திக்கு திசைத் தெரியாமல் சென்று கொண்டே இருந்தார்கள், இந்நிலையில் இளைப்பாறுவதற்காக வனாந்தரத்தின் நடுவே ஓரிடத்தில் இரவினில் கண்ணயர்ந்த வேளையில், காத்தமுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமர்கள் கனவினில் திருக்காட்சி வழங்கி, "கவலையுறாதீர், நாளை நாம் கிள்ரை உம்மிடம் அனுப்பி வைப்போம் அவர் உமக்கு காமிலான ஷைகை காட்டித்தருவார்" என்று நற்செய்தி நவின்று மறைந்தார்கள்.
பொழுதும் புலர்ந்தது, வெண்ணிற ஆடையுடுத்தி அழகிய உருவத்தில் ஒருவர் வந்து ஸலாம் கூறி நின்றார், ஸலாத்திற்கு பதிலளித்துவிட்டு தாங்கள் யாரென்று பாதுஷா நாயகம் வினவ, "நான் கிள்ர் ஆவேன், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமர்களின் ஆணைக்கிணங்க உம்மை காமிலான ஷைகிடம் அழைத்துச் செல்ல வந்துள்ளேன், அவரின் பெயர் ஷைகு அலீ ஆகும், ஹுஸைன் (ரலி) அவர்களின் வழியில் உதித்தவர், இக்காலத்தின் குத்பாக ஹுர்முஸ் நகரில் வாழ்ந்து வருகிறார்" என்று பதிலுரைத்தார்.
பின்னர் ஹுர்முஸ் நகரை நோக்கி மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர், ஷைகு அலீயவர்களின் இடத்தை அடைந்தவுடன் கிள்ர் (அலை) அவர்கள், "இதுவே உமது ஷைகின் இடமாகும் இவ்விடம் வரையில் மட்டுமே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்கள், நீர் உள்ளே செல்லும்" என்று கூறி விடைபெற்றார்கள்.
ஷைகு அலீயவர்கள் உள்ளே நித்திரையில் இருந்த வேளையில், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கனவினில் தரிசனம் தந்து, "உம்மிடம் நம் திருப்பேரர் முதஹ்ஹருத்தீனை அனுப்பியுள்ளோம், அவர் உமது வாசலில் நின்று கொண்டிருக்கிறார், அவரை உள்ளே அழைத்து வந்து தீட்சை வழங்குவீர்" என்று அமுதவாயருளி மறைந்தார்கள்.
திடுக்கிட்டு விழித்த ஷைகு அலீயவர்கள், வாசலை நோக்கி விரைந்தார்கள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமர்கள் அருளியதைப் போன்றே, அருளே வடிவான அழகிய இளைஞராக முதஹ்ஹருத்தீன் (பாதுஷா நாயகம்) நின்றார்கள், அவர்களை ஆரத்தழுவி வரவேற்றி வாழ்த்தினார்கள், உம் வருகைக்கான நோக்கத்தையும் அறிவேன் என்றார்கள்.ஷைகு அலீ(ரஹ்) அவர்கள், அன்றிலிருந்து "நத்ஹர்" என்று பாதுஷா நாயகமவர்களின் திருப்பெயர் பரவலாயிற்று.
(அல் மதத் யா தப்லேஆலம் பாதுஷா..!)
 ஹழ்ரத் தப்லேஆலம் பாதுஷா நாயகமவர்களின் அரசாட்சியும் ஆன்மீகத் தேடலும்:
பாதுஷா நாயகம் அவர்களுக்கு ஏழு வயதான போது, அவர்களின் தந்தை அஹமது கபீர் (ரஹ்) அவர்கள் இப்பூவுலகை விட்டு மறைந்தார்கள். இதனால் பஹனஸா நகரை பாதுஷா நாயகமவர்கள் "ஸையித் அலீ" என்பவரின் துணையுடன் பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்கள், பின்னர் ஸையித் அலீயும் மரணிக்கவே பஹனஸா நகரின் முழு ஆட்சி அதிகாரமும் பாதுஷா நாயகம் அவர்களின் கரங்களுக்கு வந்தது, சையித் அலீ என்பவரின் இரண்டு மகன்கள் ஷம்சுத்தீன் மற்றும் ஷம்ஷுல்லாஹ் ஆகியோரை அமைச்சர்களாக நியமித்து நான்கு வருடங்கள் சீரிய ஆட்சி செய்து வந்தார்கள்.
இந்நிலையில் தமது இருபத்தொன்றாம் வயதில் பாதுஷா நாயகமவர்கள் நித்திரையில் கனவொன்று காணுகிறார்கள்: "நரகத்தில் ஒருவர் கடும் வேதனைகளை அனுபவித்து அலறித் துடிக்கின்றார், இவர்கள் அவரிடம் ஏன் இத்தனை துன்பங்களை நீ அனுபவிக்கின்றாய் என்று வினவ: "உலகில் வாழும் போது நிறைய அநீதங்கள் புரிந்தேன், செங்கோல் ஆட்சி செலுத்தாமல் கொடுங்கோல் ஆட்சி செலுத்தி பல கொடுமைகள் புரிந்தேன் மாடமாளிகைகள் எழுப்பி இன்பங்கள் பல அனுபவித்தேன், அதன் பலனாக இத்தனை துன்பங்களை இன்று நுகர்கின்றேன்" என்று கண்ணீர் சிந்தக் கூறினார்.
அதே கனவில் மற்றொரு காட்சியாக: வண்ணமலர்கள் சுற்றிலும் சூழ்ந்த ஓர் தோட்டம் குளிர்ந்த நறுமணத் தென்றல் நாலாபுறமும் வீசுகின்றது, அதன் மையத்தில் இரத்திணங்களினாலான மணிமண்டபத்தில் ஒரு பெரியார் இன்புற்ற நிலையில் இறைதியானத்தில் லயித்துள்ளார்கள். அதனுள் இவர்கள் நுழைய பெரியாரின் தியானம் கலைகின்றது. "தாங்கள் இத்தனை இன்பங்களை நுகர காரணமென்ன என்று வினவுகிறார்கள்?" அதற்கு அப்பெரியார் "நான் ஒரு ஃபக்கீர் உலகில் வாழ்ந்த காலமெல்லாம் உணவிற்காக உழைக்கும் நேரம் போக மற்ற நேரம் முழுவதும் இறைதியானத்தில் வீற்றிருப்பேன், அதன் பலனாக இத்தனை இன்பங்களை அனுபவிக்கின்றேன்" என்று பெருமகிழ்ச்சியுடன் கூறினார், நித்திரையும் நிறைவுற்றது.
இந்த கனவை கண்டதிலிருந்து பாதுஷா நாயகம் அவர்களின் மனதில் ஏதோ ஓர் மாற்றம் ஏற்பட்டது, சில நாட்களில் அரச வாழ்க்கையையும் அதிகாரத்தையும் வெறுக்கத் தொடங்கினார்கள், ஆன்மீகச் சிந்தனை துளிர்விட்டது இறைதேட்டம் இதயத்தை ஆட்கொண்டது, பஹனஸா நகரின் அரசராக வாழ்ந்தது போதும் இனி ஃபக்கீராக வாழ்ந்து இறைவனை அடைய முயற்சிக்கலாம் என்று முடிவெடுத்தார்கள், அந்த முடிவை அன்னை ஃபத்ஹுன்னிஸா அவர்களிடம் கூறவே அவர்கள் அதிர்ச்சியுற்று அழுதார்கள், தவமிருந்து பெற்ற உன்னைப் பிரிந்து எப்படி வாழ்வேனென்று வினா தொடுத்தார்கள், அதற்கு பாதுஷா நாயகமவர்கள் "அல்லாஹ்வின் பாதையில் என்னை மகிழ்ச்சியுடன் அனுப்பி வையுங்கள் அன்னையே" என்று பணிவுடன் கேட்டுக் கொள்ள, அவர்களும் பின்னர் சம்மதிக்கவே புதிய அரசரை நியமித்துவிட்டு மக்களிடமிருந்து விடைபெற்றார்கள், துறவிகளின் ஆடை தரித்து அரசவையை விட்டு வெளியேறுகையில் நாங்களும் தங்களோடு வருகிறோம் என்று இரு அமைச்சர்களும் அனுமதி பெற மொத்தம் தொள்ளாயிரம் மக்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர், தமது 21ஆம் வயதில் அல்லாஹ்வை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஞானகுருவைத் தேடி தமது பயணத்தை தொடங்கினார்கள்.

No comments:

Post a Comment