Popular Posts

Saturday 23 April 2016

*** குர்ஆனுக்கு சுய விளக்கம் கூறுதல் ***

*** குர்ஆனுக்கு சுய விளக்கம் கூறுதல் ***
 இப்னு அப்பாஸ் (رضي الله عنهما ) அறிவிகின்றார்கள் :
 உமர் (رضي الله عنه ) பத்ருப்போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர் கோபப்பட்டவர்களாக , 'எங்களுக்கு இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இவரை மட்டும் எங்களுடன் ஏன் அமரச்செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர் (رضي الله عنه ), 'அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (ரஸுல் صلى الله عليه وسلم அவர்களுக்கு நெருக்கமானவராகவும்,அறிவுமிக்க உள்ளம் கொண்டவராகவும் சிறந்த நாவன்மை மிக்கவராகவும் போன்ற அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால் தான்' என்றார்கள். பின்னர் ஒருநாள் (என்னை) உமர் (رضي الله عنه ) அவர்கள் , (அவைக்கு) அழைத்து என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியினை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர் (رضي الله عنه ), 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்..' எனும் (திருக்குர்ஆன் 110:1 வது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்' என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர். அப்போது உமர் (رضي الله عنه ) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?' எனக் கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். 'அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது இறைத்தூதர் (صلى الله عليه وسلم ) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டதைக்) குறித்து (முன்) அறிவிப்புச் செய்ததாகும். 'இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்'.. அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)' என்று பதிலளித்தேன். அப்போது உமர் (صلى الله عليه وسلم ), 'நீங்கள் கூறுகிற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகிறேன்' என்று கூறினார்கள்.
 (புகாரி)
 விளக்கம் சொல்கின்றார்கள் :
 இப்னு அப்பாஸ் (رضي الله عنهما ) அவர்களை இவ்வாறு உமர் (رضي الله عنه ) அவர்கள் பெரும் சஹாபாக்கள் அவையில் அமரச் செய்யும் போது அவர்களுக்கு பத்து வயது கூட பூர்த்தியாகியிருக்க வில்லை. இது அவர்கள் சிறு வயதிலிருந்து ரஸுல் (صلى الله عليه وسلم ) அவர்களுடன் இருந்த பரகத்தினால் கிடைத்த பாக்கியமாகவும்,ரஸுல் (صلى الله عليه وسلم ) அவர்களின் துஆவின் மகிமையுமாகும். ரஸுல் (صلى الله عليه وسلم ) அவர்கள் , இப்னு அப்பாஸ் (رضي الله عنهما ) அவர்களுக்கு குர்ஆனுடைய விளக்கத்தை கொடுக்கும் படி துஆ செய்தார்கள்.
 மேலும், அந்த அவையிலிருந்தவர்கள் அரபிகளாகிய பத்ரில் கலந்து கொண்ட மூத்த சஹாபிகளாகும். அவர்கள் அரபு மொழியில் தேர்ந்தவர்கள். அவர்கள் ஒரு விளக்கத்தைச் சொல்ல , இல்லை அப்படியில்லை இதுவே சரியான விளக்கம் அந்த அத்தியாயத்தின் நாட்டம் இதுவே என்று இப்னு அப்பாஸ் (رضي الله عنهما ) அவர்கள் கூறினார்கள். எனவே இதன் மூலம் வெறுமனே அரபு மொழியை மட்டும் படித்துக் கொண்டு, வெறுமனே தர்ஜுமாவை மட்டும் பார்த்துக் கொண்டு குர்ஆணுக்கு விளக்கம் கூற முடியாதென்பதும்; குர்ஆனுக்கு உள்ரங்க , வெளிரங்க இரு கருத்துக்கள் உண்டென்பதும்,வெறுமனே வெளிரங்கக் கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு குர்ஆனுக்கு விளக்கம் கூற முடியாதென்பதும் அவ்வாறு செய்வது அதன் நாட்டத்திற்கே மாற்றமானதாகும் என்பதும் வெள்ளிடை மழை.
 எனவே குர்ஆனின் சரியான கருத்தை விளங்க வேண்டுமெனில் அதற்குரிய அறிவு படைத்தவர்களிடம் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அவ்வாறு தான் வைத்துள்ளான். ஒருவன் வைத்தியம் செய்ய வேண்டுமெனில் அவன் அதற்குரிய காரணிகளின் அடிப்படையில் வைத்தியரிடம் சென்று கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறின்றி வெறுமனே வைத்தியம் செய்வது பற்றி புத்தகத்தில் படித்து விட்டு வைத்தியம் செய்ய முட்படுவானாயின் அவனும் அழிந்து மற்றவனையும் கொன்று விடுவான். உலகக் கல்விற்கே இந்த நிலையென்றால், மறுமையின் கல்விற்கு , அல்லாஹ்வின் கலாமை புரிவதற்கு எத்தகையை அணுகு முறை , எத்தகைய அறிவு இருக்க வேண்டும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். இதல்லாது அதற்குரிய அறிவுள்ளவர்களிடம் சென்று பெற்றுக் கொள்ளாது வெறுமனே அரபு மொழியை மட்டும் அல்லது தர்ஜுமாவை மட்டும் வைத்துக் கொண்டு குர்ஆனுக்கு விளக்கம் சொல்ல முட்படுவானாயின் அவனும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்து விடுவான்.
 எனவே மேற்கூறிய குர்ஆன் அத்தியாயத்தின் சரியான விளக்கம் அது ரஸுல் (صلى الله عليه وسلم ) அவர்களின் இவ்வுலக வாழ்நாள் முடிவுற நெருங்கி விட்டது என்பதை அல்லாஹ் அறிவித்தான் என்பதாக இப்னு அப்பாஸ் ( رضي الله عنهما ) அவர்கள் விளக்கமளிக்க அதையே உமர் (رضي الله عنه ) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். பாவமன்னிப்புத் தேடும் படி ஏவல் வந்தால் அது வாழ்நாள் முடிவுற நெருங்கி விட்டதென்பதற்கு அடையாளமாகும். இதன் பின் ரஸுல் صلى الله عليه وسلم ) அவர்கள் , " سبحان الله وبحمده استغفر الله واتوب اليه " என்பதை அதிகமாக ஓதிக் கொண்டிருந்தார்கள். by aadil

No comments:

Post a Comment