Popular Posts

Thursday 27 April 2017

இஸ்லாத்தின் பார்வையில் பரக்கத் செய்யப்பட்ட ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும், அம்மாத்தில் வைக்க வேண்டிய சுன்னத்தான நோன்பின் அவசியமும்

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்

​எழுதியவர்: மௌலவி S.L . அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

இஸ்லாத்தின் பார்வையில் பரக்கத் செய்யப்பட்ட ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும், அம்மாத்தில் வைக்க வேண்டிய சுன்னத்தான நோன்பின் அவசியமும்
​​
♣  இஸ்லாம் கூறும் ஷஃபான் மாதம்

ஷஃபான் என்ற சொல் ‘ஷிஃபுன்‘ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். கணவாய் என்பது இதன் பொருள். இந்த மாதத்தில் நன்மைகள் அதிகளவில் கிட்டுவதால் இப்பெயர் வழங்கலாயிற்று. கணவாய்கள் மலைக்குச் செல்வதற்கு வழியாக இருப்பது போன்று இந்த மாதம் நன்மைகளையும், இறையருளையும் அதிகளவில் பெறும் வழியாக இருக்கின்றது.

​​ஹளரத் அபூ உமாமா பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள், “ஷஃபான் மாதம் வந்தால் உங்கள் மனங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்! அந்த மாதத்தில் உங்கள் எண்ணங்களையும் அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறிக்கொண்டேயிருப்பார்கள்.

♣  ரமழானுக்காக எமக்கு பயிற்சிப் பாசறையாக பரக்கத் செய்யப்பட்ட ஷஃபான் மாதம் திகழ்கிறது

ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது.

♦ ஆகவே ரமழானுக்கு முந்திய மாதமே ஷஃபான் மாதமாகும். அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ஷஃபான் மாதம் எமக்கு துணைபுரிகிறது. ரமழானை பூரணமாக அடைந்து அதன் சகல பாக்கியங்களையும் பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை தரும்படி பிரார்த்தனை புரிதல். குடும்ப அங்கத்தவர்கள், நாண்பர்கள், முதலியோருக்கு இம்மாதத்தின் சிறப்பைப் பற்றி எடுத்துக்கூறல். ஷஃபான் மாதத்தின் (பராஅத்) நோன்பு நோற்று சுன்னத்களை நிலைநாட்டல்.

​​சென்ற ரமழானில் விடுபட்ட நோன்புகளை ஆண்களும், பெண்களும் கழாச் செய்துகொள்ள இம்மாதத்தைப் பயன்படுத்தல். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீழுடைய பிறை (13, 14, 15) இந்த மூன்று தினங்கள் நோன்பு வைப்பதும் “ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” (நூல் புகாரி: 1979, முஸ்லிம்: 1159) அதேபோன்று ஒவ்வொரு வாரத்திலும் திங்கட்கிழமை, வியாழக்கிழமை நோன்பு வைப்பதும் சுன்னத்தாகும் இதுபற்றி பல ஹதீதுகள் காணப்படுகிறன.

♦ சன்மார்க்க அறிஞர்களில் ஒருவராகிய அபூபகர் அல்-பல்கி (ரஹ்மதுல்லஹி அலைஹி)அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும். ஷஃபான் மாதமாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும். ரமலான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்”

​​நூல்: லதாயிஃபுல் மஆரிஃப்

இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் நமது வணக்க வழிபாட்டுச் செயல்களின் மூலம் ஆன்மீக ரீதியில் நம்மை நாம் தயார் செய்து கொள்வதோடு, அறிவுப்பூர்வமாக முன்னேற்றம் காண்பதற்கு அதிகமானக் கல்வியறிவைத் தேடுவது அவசியமாகும் என்பதையும் உணர வேண்டும். ரமழானுக்கு முந்திய மாதமே ஷஃபான் மாதமாகும். அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ரஜப் மாதம் எமக்கு துணைபுரிகிறது.

♦ ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’என நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்.

​​
♣  ஷஃபான் மாதத்தில் நோன்பு வைப்பதன் சிறப்புகள்

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்தார்கள். (இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ”(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்” என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை, ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!”

நூல் புகாரி 1969

♦ மேலும் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடுத்தடுத்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றதை ஷஃபான், ரமழான் ஆகியவற்றில் தவிர நான் கண்டதில்லை.நாயகமே! ஷஃபான் மாதத்தில் தாங்கள் நோன்பு நோற்றபடி வேறு எந்த மாதத்திலும் தாங்கள் நோன்பு நோற்றதை நான் கண்டதில்லையே என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் இந்த மாதத்தைப் பற்றித்தான் மக்கள் பராமுகமாகிவிட்டனர். இது ரஜபுக்கும், ரமழானுக்கும் இடையிலுள்ளது. இந்த மாதத்தில்தான் (மக்களின்) நடமாட்டங்கள் (செயல்கள்) உலகங்களைப் படைத்து பரிபாலனம் செய்பவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே என்னுடைய செயல்கள் நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

♦ அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஃபானை விடவும் வேறு எந்த எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு வைப்பவராக இருக்கவில்லை. ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பவராக இருந்தார்கள். மற்றொரு அறிவிப்பில் “அவர்கள் சில நாட்கள் தவிர ஷஃபானில் எல்லா நாட்களும் நோன்பு நோற்றார்கள்”.

​​நூல் புஹாரி, முஸ்லிம்

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!” என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.

​நூல் புகாரி 1970

♦ ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பார்கள். “மாதங்களில் ஷஃபான் மட்டும் நீங்கள் நோன்பு பிடிக்க மிகவும் விரும்புவதேன்?” என்று நான் அவர்களிடம் கேட்டேன் அதற்கு அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) “ நிச்சயமாக அதில் தான் அல்லாஹ் அந்த வருடம் மரணிப்பவர்களை தீர்மானிக்கிறான். என்னைப்பற்றிய தீர்மானம் வரும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்.” என எடுத்துரைத்தார்கள்.

​​நூல் அபுயஃலா, அத்தர்கீப்: 1540

ரமழானுக்குத் தயாராகும் நோக்குடன் அமல்கள் அல்லாஹ்வின் பால் உயர்த்தப்படும் ஒரு காலப்பகுதியில் தான் நோன்பாளியாக இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றார்கள் என்பதே மேல் உள்ள ஹதிஸ்கள் தெளிவுபடுத்துகின்றது. -

See more at: http://www.mailofislam.com/tm_article_-_shaban_mathathin_sirappugal.html#sthash.3Et2j8JH.dpuf

Monday 24 April 2017

இஸ்லாத்தின் பார்வையில் புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகளும், அம்மாதத்தில் வைக்க வேண்டிய சுன்னத்தான (பிறை 27) மிஃராஜ் நோன்பின் சிறப்புகளும்.

இஸ்லாத்தின் பார்வையில் புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகளும், அம்மாதத்தில் வைக்க வேண்டிய சுன்னத்தான (பிறை 27) மிஃராஜ் நோன்பின் சிறப்புகளும்.

♣ பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்கும் மிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது. வேந்தர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜ் பயணமாகும்.

♦ (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன், அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான், (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

​​அல்குர்ஆன் : 17:1

♦ மேலும் இந்த சிறப்பான சங்கையான மாதத்தில் அல்லாஹ் தன் வல்லமையை வெளிப்படுத்துவதற்காக நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலாக நிகழ்த்துக் காண்பித்த மகா அற்புத நிகழ்வே 'அல் இஸ்ராஉ வல் மிஃராஜ்' எனும் அதிசய நிகழ்வாகும். ரஜப் பிறை 27 புனித மிஃராஜ் தினமாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க விண்ணுலகப் பயணம் சென்ற நாள். இன்றுதான் நமக்கு ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. இந்த நாளில் சிறப்பு வாய்ந்த ரஜப் பிறை 27 அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அன்றைய தினத்தில் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். ஆகவே புனிதமான நாட்களில் நோன்பு வைப்பதும், குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 'அய்யாமுல் பீல்' என்று சொல்லப்படும் பிறை 13,14,15 ஆகிய மூன்று நாட்களும் அதேபோன்று ஒவ்வொரு திங்கட்கிழமை, வியாழக்கிழமை நோன்பு வைப்பதும் அதேபோன்று அந்நாளில் அதிகமதிகம் ஸலவாத்து ஓதுவது, இபாதத் எனும் வணக்க வழிபாடுகளில் ஈடுபதுவது சிறப்பிற்குரிய சுன்னத்தாகும்.


♣  ரஜப் பிறை 27 (மிஃராஜ்) தினத்தன்று நோன்பு வைப்பது சுன்னத்தா?

மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாம் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் காணக்கிடைக்கிறது. இமாம் பைஹகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷுஃபுல் ஈமானிலும், தைலமி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் முஸ்னதுல் பிர்தவ்ஸிலும், ஸல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக இவ்வாறு அறிவிக்கின்றனர்: ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவாகும். அந்நாளில்தான் அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி வைத்தான்'.

♦ மேலும் அபான் இப்னு ஙயாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கும் மற்றொரு நபிமொழியும் பைஹகியில் காணப்படுகிறது. ரஜபில் ஓர் இரவுண்டு. அவ்விரவில் நல்லமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்லமல் புரிந்த கூலி கிடைக்கும். அது ரஜபு மாதத்தின் 27வது இரவாகும். அவ்விரவில் யாராவது 12 ரக்அத்கள் தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாத்திஹாவும், வேறு ஏதாவது ஸூரத்தும் ஓத வேண்டும். ஒவ்வொர இரண்டு ரக்அத்களும் தொழுது முடித்த பின்னர், 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 100 தடவைகளும், இஸ்திக்பார் 100 தடவைகளும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது 100 தடவை ஸலவாத்துகளும் ஓதிவிட்டு மறுமை, இம்மை சம்பந்தப்பட்டவை குறித்து தேவையானவற்றை துஆச் செய்யலாம். பின்னர் பகலில் நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் அவரது துஆக்களை ஏற்றுக் கொள்வான்.

♦ ரஜப் 27 எனக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டது. அத்தினத்தில் நோன்பு வைத்து நோன்பு திறக்கும் வேளையில் துஆக் கேட்டால், பத்து வருடக் குற்றங்களுக்கு அது பரிகாரமாக அமையும்.' பவாயிது நிஹாத் என்ற நூலில் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

♦ ஆகவே 'யாராவது ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு அல்லாஹ் பல ஆண்டுகள் நோன்பு வைத்த கூலியை கொடுப்பான். அத்தினத்தில்தான் அண்ணல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிப்பட்டத்தை வழங்கினார்கள்.' ஜுஸ்உ அபீ முஆத் என்ற நூலில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே கருத்தில் வந்துள்ள எல்லா ஹதீஸ்களிலும் இந்த ஹதீஸ்தான் மேலானதும், 27வது இரவிலும், பகலிலும் செய்யப்படுகின்ற அமல்களுக்கு அடிப்படை ஆதாரமுமாகும்.

​​நூல்: பதாவா ரிழ்விய்யா, பாகம் 4, பக்கம் 657, 658