Popular Posts

Friday 1 July 2016

"வலிமார்கள் என்பவர்கள் யார்?, அவர்களின் சிறப்புகள்

¶"வலிமார்கள் என்பவர்கள் யார்?, அவர்களின் சிறப்புகள் (அந்தஸ்துக்கள்), வணக்கவழிபாடுகள், அவர்களை பின்பற்றுவதன் அவசியம்"¶

♣ வலிமார்கள் என்பவர்கள் யார்?

அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும். இறை அச்சமுள்ள எல்லா முஃமின்களும் அவ்லியாக்களே! "இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும் பாலானவர்கள் (இதனை) புரியாமல் இருக்கிறார்கள்".(அல்குர்ஆன்  8:34)

மேலும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள். நாம் வலிமார்கள் என்று கூறினால் அதில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள் ஏனைய அவ்லியாக்கள் அனைவரும் அடங்குவார்கள்.

என்றாலும் பொதுவாக மக்கள் பேசும்பொழுது, ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள்.வலிமார்களின் அந்தஸ்துஉலகத்திலுள்ள எல்லா அவ்லியாக்களை விடவும் அதி கண்ணியமும், சிறப்பும், அந்தஸ்தும் மிக்கவர்கள்தான் ஸஹாபாக்கள். எனவே நாம் எந்த ஒரு அவ்லியாவையும் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்று கூறக்கூடாது. அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதேபோல் உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது. 

♣ அவ்லியாக்களின் அடையாளம் என்ன?

இறை அச்சமுள்ள எல்லா முஃமின்களும் அவ்லியாக்களே! "இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும் பாலானவர்கள் (இதனை) புரியாமல் இருக்கிறார்கள்".(அல்குர்ஆன்  8:34)

♦ ஒரு முறை ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே அவ்லியாக்கள் என்பவர்கள் யார்?  அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "யாரை நீங்கள் பார்க்கும் போது இறைவனின் ஞாபகம் வருகின்றதோ அவர்கள்தான் அல்லாஹ்வின் இறைநேசர்கள் ஆவார்கள்" என பதிலளித்தார்கள். (நூல் பஸ்சார்)

♦ அல்லாஹ்வின் நினைவை திறந்து விடும் திறவுகோளாக மனிதர்களில் சிலர் உள்ளனர். அவர்களை நீங்கள் கண்டால் அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு வரும் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் தப்றானி 10325)

♦ யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள். "உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா என நபி (ஸல்லல்லாஹுன்ன அலைஹி வஸல்லம்) கேட்டார்கள். ஆம் சொல்லுங்களே என சஹாபாக்கள் சொன்னார்கள் . உங்களில் உன்னதமானவர் யாரெனில் எவர்களை பார்த்தால் மட்டுமே அல்லாஹ்(ஆகிரத்)நினைவு வருமோ அவர் தான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்" என்பதாக அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா)அறிவிக்கிறார்கள் (நூல் அஹ்மத் 27601, இப்னு மாஜஹ் 4109)

♣ வலிமார்களின் அந்தஸ்துக்கள் (படித்தரங்கள்) சிறப்புக்கள்

அவ்லியாக்களைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது: "அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை, அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர், வாழ்விலும், மறுமையிலும் (அந்த அவ்லியாகலான) அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு  அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்".(அல்குர்ஆன் 10: 62, 63, 64)

அவர்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். இதுதான் இதன் பொருள். ஆனால் கியாமத்து நாளைப்பற்றிய கவலை மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அதேபோன்று அல்லாஹ்வுடைய அச்சம், பயம் மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் மிக அதிகமாக இருக்கும். அதேநேரம் இந்த உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் எந்த கவலையும், பயமும் அடையமாட்டார்கள்.

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ, அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 6502)

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.அறிவிப்பவர் உமர் பின் அல் ஹத்தாப்
ரலியல்லாஹு அன்ஹு (நூல் அபூதாவூத் 3060)

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (சஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
(நூல் ஸஹீஹுல் புகாரி - 3651)

♦ அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்” கூறினார்கள். (நூல் புகாரி 2703)

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனத்திற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான (வானவர்கள் நிறைந்த) சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன்.அபுஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)(நூல் புகாரி, முஸ்லிம்)

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும். ஸாலிஹீன்களை நினைவு கூர்வது பாவபரிகாரமாகும்.(நூல் அல் ஜாமிஉஸ் ஸகீர் 2 - 299)

♣ வலிமார்களின் வணக்கவழிப்பாடுகள்

வலிமார்களின் வணக்கவழிப்பாடுகள் மிகவும் சிறப்புமிக்கது. இதை அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறும்போது, "அவர்கள் இரவு வேளைகளில் சிறிது நேரமே தூங்குவார்கள். அதிகமான நேரம் இபாதத்திலே ஈடுபடுவார்கள். ஸஹர் நேரத்தில் எழுந்து பாவமன்னிப்பு தேடுவார்கள். இவர்களே வலிமார்கள்" என்று கூறுகிறான்.

அவர்களின் தொழுகைக்கும் எங்களது தொழுகைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. நாங்கள் தொழுகையில் நின்றால் கிப்லாவை நோக்கியே நிற்போம். ஆனால் வலிமார்களோ தொழுகையில் நின்றுவிட்டால் அல்லாஹ்வை நோக்கியே நிற்பார்கள். அவர்கள் தொழுகையில் தங்களது உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் இறைவனின் பக்கம் நோக்கியே நிற்பார்கள். இத்தகைய பக்குவத்தை அடைந்தவர்களே வலிமார்கள் என அழைக்கிறோம். அதுமட்டுமல்ல, நாமும் நோன்பு நோற்கிறோம், வலிமார்களும் நோன்பு நோற்கிறார்கள். எங்களது நோன்பிற்கும் அவர்களது நோன்பிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு.

நாம் நோன்பு நோற்றால் உண்ணாமலும், குடிக்காமலும்தான் இருக்கிறோம். ஆனால் வலிமார்கள் நோற்கும் நோன்பு அப்படிப்பட்டதல்ல. அவர்கள் உண்ணாமலும், குடிக்காமலும் இருப்பதோடு மட்டுமல்ல, உடல் உறுப்புகளையும் நோன்பு நோற்க வைப்பார்கள். எப்படியென்றால் பார்க்க கூடாததை பார்க்காமல் கண்களை தடுத்தார்கள். கேட்க கூடாததை கேட்காமல் காதுகளை தடுத்தார்கள். பேச கூடாததை பேசாமல் நாவை தடுத்தார்கள். இதைப்போன்று முழு உடலையும் தீமையை விட்டும் தடுத்தார்கள். இவர்களே வலிமார்கள்.

♦ அல்லாஹ் அஸ்ஸவஜல் அல் குர்ஆனில் கூறும்போது, " அல்லாஹ்வின் இறைநேசர்கள் எப்போதும் திக்ரிலே அதாவது அல்லாஹ்வின் தியானத்திலே இருப்பார்கள்." எப்படியென்றால் அவர்கள் நின்றுக்கொண்டு இருந்தாலும், உட்கார்ந்துக்கொண்டு இருந்தாலும், தூங்கினாலும் அல்லாஹ்வின் திக்ரிலே நிலைத்து நிற்பார்கள். இறை தியானத்திலே மூழ்கியிருப்பார்கள்.

♦ அல்லாஹ் அஸ்ஸவஜல் மேலும் கூறும்போது, " நீங்கள் காலையிலும், மாலையிலும் திக்ர் செய்யும் நல்லடியார்களுடன் நட்புக்கொள்ளுங்கள்" என்று எம்மைப்பார்த்து கூறுகிறான். " அல்லாஹ்வுடைய அவ்லியாக்களை யார் முஹப்பத் வைக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை முஹப்பத் வைக்கிறார்கள். எவர்கள் அல்லாஹ்வை நேசிக்கிறார்களோ, அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். இப்படித்தான் ஸாலிஹீன்களும் அவ்லியாக்களை நேசித்து அவர்களும் அவ்லியாக்கள் ஆனார்கள்" என்று குத்பு ஷஃறானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் "தபகாத்துல் குப்ரா" என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்

♣ அவ்லியாக்களை பின்பற்றுவதன் அவசியம்

அல்லாஹ் அஸ்ஸவஜல் தனக்கு சொந்தமான சில பதவிகளை அவ்லியாக்களுக்கு வழங்கி, அவர்களை இந்த உலக மக்களுக்கு தன் பிரதிநிதியாக அதாவது கலீஃபாவாக ஆக்கி வைத்திருக்கிறான். எப்படி எங்கள் இனிய தூதர் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் உலகத்துக்கே ரஹ்மத்துலில் ஆலமீனாக இருக்கிறார்களோ அப்படியே அவ்லியாக்களை அல்லாஹ் அஸ்ஸவஜல் இந்த உலக மக்களுக்கு கிருஃபையுள்ளவர்களாக ஆக்கிவைத்துள்ளான்.

♦ "நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் தெரிந்தவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”என்று கூறுவீராக. (அல்குர்ஆன் : 16:43)

♦ எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் (ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள்) செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் : 4:115)

♦ இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும்  பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான், அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள், அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:100)

♦ அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:26)

♦ அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் ஸூரதுன்னிஸா 59ம் வசனத்தில் கூறும்போது, " மூஃமின்களே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். இன்னும் அவனது ரஸூலுக்கும் வழிப்படுங்கள். மேலும் உங்களில் தீனை பரப்பக்கூடிய உலமாக்களுக்கும், அவ்லியாக்களுக்கும் வழிப்படுங்கள்." என்று கூறியுள்ளான். (நூல் : தப்ஸீர் ரூஹுல் பயான், தப்ஸீர் கபீர்) ஆகவே அல்லாஹ் அந்தக்காலத்தில் நபிமார்களைக்கொண்டு நடத்தியதை இன்று அவ்லியாக்களைக்கொண்டு நடத்துகிறான். அவர்களாலேயே உலகம் நிலைபெற்றிருக்கிறது.

♦ மேலும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். "எனது உம்மத்துக்களில் 40 மனிதர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய இதயத்தைப் போன்ற உள்ளம் படைத்தவர்களாக உலகத்தில் இருந்தே வருவார்கள். அல்லாஹுதஆலா அந்த நபர்களைக்கொண்டு இவ்வுலகத்தில் வாழ்பவர்களின் நோய்களை தீர்த்து வைப்பான். அவர்களுக்காக மழையை பொழிய வைப்பான். அவர்களைக்கொண்டுதான் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு உதவி புரியப்படும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் தபரானியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது

எனவே உலக மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும், குதுபுக்கு கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும் வைத்தால் குதுபுவின் தட்டே பாரமாக இருக்கும். அல்லாஹுதஆலா நபிமார்களுக்கு தனது செய்தியை வஹீ மூலம் அறிவித்தான். அதுபோல் அவ்லியாக்களுக்கு "இல்ஹாம்" என்ற ஞான உதிப்பு மூலம் தெரியப்படுத்துகிறான்

♣ ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகத்தில் அவ்லியாக்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 
உலகத்தில் அவ்லியாக்கள் 440 பேர் இருப்பார்கள்....!!

அதில் நுஜபாக்கள் 300 பேர், 
நுகபாக்கள் 70 பேர், 
அப்தால்கள் 40 பேர், 
அகியார்கள் 10 பேர், 
உறபாக்கள் 7 பேர், 
அன்வார்கள் 5 பேர், 
அவ்தாத்கள் 4 பேர், 
முக்தார்கள் 3 பேர், 
குதுபு ஒருவர்...!!

இவர்களில் குதுபே அனைவருக்கும் தலைவராவார். இவரை கௌஸு என்றும் சொல்வார்கள். இப்படி குதுபுகளாக ஒவ்வொரு காலத்திலும் இருந்தவர்கள்தான்,

காதிரியா தரீக்காவை உருவாக்கிய 
குத்புல் அக்தாப் கௌஸு அஃலம் 
முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அலைஹி) அவர்கள், 

ரிஃபாயி தரீக்காவை உருவாக்கிய 
ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையிது அஹ்மதுல் கபீர் ரிஃபாயீ (ரலியல்லாஹு அலைஹி) அவர்கள், 

ஷாதுலி தரீக்காவை உருவாக்கிய 
இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரலியல்லாஹு அலைஹி) அவர்கள், 

சிஷ்தி தரீக்காவை உருவாக்கிய 
ஸுல்தானுல் அவ்லியா அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலியல்லாஹு அலைஹி) அவர்கள், 

நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு அலைஹி) அவர்கள் ஆவார்கள். இதேபோல் உலகத்தில் பல குதுபுமார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்.இன்ஷா அல்லாஹ் கியாமத்து நாள் வரை வாழ்வார்கள்.  

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அப்தால்கள் என்றால் இறை நேசர்களில் ஒரு பிரிவினராகும். அவர்கள் மூலமே இவ்வுலகை இறைவன் நிலை நிறுத்தாட்டிக் கொண்டிருக்கிறான். அவர்கள் மொத்தம் 70 நபர்களாகும். 40 பேர் சிரியாவிலும், மீதி 30 பேர் ஏனைய பகுதிகளிலும் இருப்பார்கள்.
(நூல் மிஷ்காத் 10 - 176)

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அப்தால்கள் என்ற இறை நெருக்கம் பெற்ற நல்லடியார்கள் ஷாம் (சிரியா) நாட்டில் இருப்பார்கள். அவர்கள் 40 நபர்களாகும். அவர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு பதிலாக வேறொருவரை இறைவன் நியமிப்பான். அவர்கள் மூலம் மழை பொழியச் செய்யப்படும். மேலும் அவர்கள் மூலம் விரோதிகளிடத்தில் வெற்றி அடையப்படும். மேலும் அவர்கள் மூலம் சிரியா நாட்டவர்களை விட்டும் வேதனை திருப்பப்படும். அலி ரலியல்லாஹு அன்ஹு. (நூல் மிஷ்காத் 3- 583)

♦ எனவே இந்த மகத்துவமிக்க அல்லாஹ்வின் வலிமார்களை நேசிப்பவர்களைப் பார்த்து, இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் "ஹுப்பு பாட்டி" என்றும், அவர்களின் துஆ பரக்கத்தை பெற அவர்களின் கப்ரு ஷரீஃபுக்கு செல்பவர்களை பார்த்து "கப்ரு வணங்கி " என்றும் கூறி கேலி செய்து தப்புத் தவறாக பேசி பெரும் பாவத்தை செய்கிறார்கள். அல்லாஹ் கூறியதாக கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்:"எவன் ஒருவன் எனது வலிமார்களை நோவினை செய்வானோ, அவன் என்னுடன் யுத்தம் செய்ய தயாராக இருந்துக்கொள்ளட்டும்" ஆகவே இப்படி அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்திருப்பதால் நாம் மிகக்கவனமாக இருக்கவேண்டும். வலிமார்களை தவறாக பேசினால் பெரும் பாவத்தை சம்பாதிக்க வேண்டிவரும். அல்லாஹ்வுடன் யுத்தம் செய்ய வேண்டி வரும். அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடத்தாட்டுவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

💐💐ஹலாவதுல் ஈமான்💐💐
✳ BY Moulavi 
S.L Abdhur Rahman Ghawsi

No comments:

Post a Comment