Popular Posts

Monday 25 April 2016

தர்ஹா கலாச்சாரம் 02

தர்ஹா கலாச்சாரம் !

 அத்தியாயம் - ஐந்து

 எல்லாம் அவன் செயல் !

 ( இது தனி நூலாகவும் வர வாய்ப்புள்ளதால் சில விஷயங்களைக் கூடுதலாக சொல்ல வேண்டி இருக்கிறது .
 தலைப்புக்கும் இந்த அத்தியாயங்களுக்கும் உள்ள தொடர்பு இறுதி அத்தியாயத்தில் தெரியும் )

 நாலாம் அத்தியாயத்தில் உவைஸுல் கர்னி அவர்களைப் பற்றி சொல்லியிருந்தேன்.
 நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த ஒரு இறைநேசச் செல்வரவர்.
 அவரிடம் முஸ்லிம்களுக்காக துஆ செய்ய சொன்னது நபிகள்.
 அவரை நேரில் சந்தித்து நபிகள் சொன்னதை அவரிடம் சொல்லி துஆ செய்யச் சொன்னவர்கள்
 சஹாபிகளான சொர்க்கத்தின் நன்மாராயம் கூறப்பட்ட உமர்
 ( ரலி ) அவர்களும் அலீ ( ரலி ) அவர்களும்.
 அந்த இறைநேசச் செல்வரின் துஆ ஏற்கப்படும் என்று முன்னறிவிப்பு செய்ததும் நபிகளார்தான்.
 இது ஒரு வலியுல்லாஹ்வை முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வும் ரசூலும் அடையாளம் காட்டிய ஒரு சம்பவம்.
 அல்லாஹ் நாடினால் அவன் நாடியவர்களை தனது நேசர்களாக்குவான்.
 அவர்களது துஆவை ஏற்றுக் கொள்வான்.
 அவர்கள் கேட்கும் உதவிகளை வழங்குவான் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

 அடுத்தது...
 " இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. அவர்களால் எந்த உதவியும் செய்ய முடியாது " என்ற ஒரு
 குர் ஆன் வசனத்தை சொல்லி ...
 இறந்தவர்களை அழைத்தால் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
 இறைவன் நாடினால் இறந்தவர்கள் கேட்பார்கள் , பேசுவார்கள் , உதவியும் செய்வார்கள்.
 அல்லாஹ் நாடினால் ! ( இந்த வாசகம் முக்கியம் )
 எப்படி ?

 நபிமார்கள் அல்லாஹ்வின் தூதர்கள்.
 அவர்கள் மக்களுக்கு பல அற்புதங்களை செய்து காட்டி இஸ்லாத்தை ஏற்கச் சொன்னார்கள்.
 ஒவ்வொரு சமுதாயமும் " உங்களை நபியென்று ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அற்புதங்களை செய்து காட்டுங்கள் " என்றுதான் சொன்னார்கள்.
 அவர்களும் செய்து காட்டினார்கள்.

 காற்றுள்ள காலங்களில் காற்று வேகமாக வீசும் . மரம் செடி கொடிகள் அவற்றில் ஆடும்.
 கோடைக் காலங்களில் காற்று வீசுவது மிகவும் குறைவு.
 அப்போது ஒரு இலைகூட அசையாது.
 அவனன்றி அணுவும் அசையாது என்பார்களே.... அதுதான் இது .

 ஒரு கொசுவிலிருந்து சர்வ வல்லமைப் படைத்த அரசன் வரை இயங்குவது இறைவன் நாட்டப்படியே.
 நான் இங்கே கூறவிருப்பதும் அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தவையே.

 " பொதுவாக செத்தவர்களை செவியுறச் செய்யமுடியாது. அவர்களால் பார்க்கவும் முடியாது . கேட்கவும் முடியாது. பதில் சொல்லவும் முடியாது "
 என்று சொல்கிறோம். அதை இறைவனும் சொல்கிறான்.
 ஆனால் இறைவன் நாடினால் இறந்தவர்கள் பேசுவார்கள்... கேட்பார்கள்...பதிலும் சொல்வார்கள்.

 மூஸா நபி ( அலை ) அவர்கள் அல்லாஹ்வின் தூதர். இறைவனின் தூதை அவர் மக்களிடம் எடுத்துச் சென்றபோது மக்கள் அவரை உதாசீனம் செய்தார்கள்.
 அந்த யூதர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

 அப்போது அவர்களில் ஒரு பணக்கார யூதர் இறந்து விட்டார். அவருடைய சொத்துக்களை அனுபவிப்பதற்காக அவரது உறவினர்கள் யாரோ அவரை கொலை செய்து விட்டார்கள்.
 மூஸா நபியைத் தேடி வந்த அந்த யூதர்கள் ,
 " ஓ.. மூஸாவே ! எங்களில் ஒருவரை யாரோ கொலை செய்து விட்டார்கள். அவரைக் கொலை செய்தது யார் என்பதை கொலை செய்யப்பட்டவரே உயிரோடு வந்து சொன்னால் உங்களை நபியென்று நாங்கள் நம்புகிறோம் " என்றார்கள்.

 அல்லாஹ்வின் நாட்டப்படியும் அவன் அறிவுறுத்தலின் படியும் அங்கே மூஸா நபியவர்கள் நடந்து கொண்டார்கள்.
 " சரி .. அப்படியே செய்கிறேன் . அதற்கு நீங்கள் ஒரு பசுவை அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் ஆணையிடுகிறான் " என்றார் மூஸா.
 யூதர்கள் கேள்வி மேல் கேட்க ஆரம்பித்தார்கள்.
 " அந்தப் பசு எப்படி இருக்க வேண்டும் ?"
 " அது கிழடோ இளங்கன்றோ அல்லாமல் அவற்றுக்கு இடைப்பட்ட நடுத்தரமாக இருக்க வேண்டும் "
 " அது என்ன நிறமாக இருக்க வேண்டும் ?"
 " அதன் நிறம் மஞ்சள் "
 அந்த யூதர்கள் மூஸா நபி சொன்னதில் திருப்தியடையாமல் மேலும் மேலும் கேள்வி கேட்டார்கள்.
 " அந்தப் பசு நிலம் உழக்கூடிய பசுவல்ல. விவசாயப் பயிருக்கு தண்ணீர் இறைக்கும் பசுவுமல்ல.
 எந்த வடுவுமில்லாத சுத்தமான பசு என்று அல்லாஹ் கூறுகிறான் " என்றார் மூஸா நபி.

 அதன்படியே அந்த யூதர்கள் மூஸா நபி குறிப்பிட்ட அடையாளங்கள் உள்ள அந்த பசுமாட்டை தேடித் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.
 பிறகு அதனை அறுத்து அதன் ஒரு பகுதியைக் கொண்டு இறந்தவனின் சடலத்தின் மீது அடித்தார்கள்.
 இறந்துபோனவன் உயிர் பெற்றெழுந்து தன்னைக் கொன்றவர்கள் யார் என்பதை சொல்லி விட்டு மீண்டும் இறந்துபோனான்.

 இது திருமறையில் இறைவன் கூறுகின்ற வரலாறு.
 அவன் நாடினால் அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு துண்டைக் கொண்டு கூட இறந்தவனை உயிர் பெறச் செய்வான் . பேசவும் வைப்பான் .என்பதை இந்த சம்பவம் உலக மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

 இந்த சம்பவம் குறித்து , " இஸ்ரவேலர்கள் ஏதாவது ஒரு பசுமாட்டை அறுத்திருந்தால் அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்திருக்கும்.
 ஆனால் அவர்கள் பல கேள்விகள் கேட்டு பல சிக்கல்களை உண்டாக்கிக் கொண்டார்கள்.. அதனால் அவர்கள் பல சிக்கல்களுக்கு ஆளானார்கள் "
 என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 மூஸா நபி மட்டுமல்ல...
 ஈசா நபியவர்களும் இறந்துபோன பலரை இறையருளால் உயிர்பெறச் செய்திருக்கிறார்கள்.
 " கும்பி இத்னில்லாஹ் "
 ( அல்லாஹ்வின் மீது ஆணையாக எழு ) என்று அவர்கள் சொன்னவுடன் இறந்துபோன சில மையித்துகள் எழுந்திருக்கின்றன.

 இறந்தவர்களை ஈசா ( அலை ) அவர்கள் உயிர் பெற்று எழச் செய்கிறார்கள் என்பதை நம்ப முடியாத யூதர்கள் அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய மருத்துவரான ஜாலினூசிடம் அதுபற்றி கேட்டார்கள்.
 " இறந்தவர்களை உயிர் பிழைக்க வைக்க மருத்துவத்தால் முடியாது. அப்படி அதை ஒருவர் செய்தால் அவர் இறைத் தூதராகத்தான் இருப்பார் " என்றார் அவர்.

 அதைக் கேட்டு ஈசா நபியிடம் வந்தவர்கள் ,
 " உங்களது நண்பர் ஆசர் இறந்து மூன்று நாட்களாகின்றன. நீங்கள் நபிஎன்பது உண்மையானால் ஆசரை உயிர் பெறச் செய்யுங்கள் பார்ப்போம் " என்றார்கள்.

 ஈசா நபியும் அதனை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்வைத் தொழுது ,
 " இறைவா... நீயே வணக்கத்திற்குரியவன் என்பதை இந்த மக்கள் ஏற்றுக் கொள்வதற்காகவும் ...
 இவர்களை நான் இசலாத்தின் பக்கம் அழைப்பதற்காகவும் ... இறந்தவர்களை நான் உயிர்பிப்பேன் என்பதை இவர்கள் நம்புவதற்காகவும் ...
 ஆஸ்ரை உயிரபெற்று எழச் செய்வாய் " என்று பிரார்த்தித்தார்கள்.

 ஆசர் உடனே உயிர் பெற்றெழுந்தார்.
 அதைக் கண்டு யூதர்கள் வியந்தார்கள்.

 இது ...
 இறந்தவர்களை அழைத்தால் கேட்பார்கள் . பேசுவார்கள் என்பதையும் தாண்டி உயிரையும் பெறுவார்கள் என்பதற்கு போதுமான உதாரணங்களாகும்.

 இவை எல்லாமே இறைவன் நாட்டப்படிதான் நடக்கின்றன. அதற்காக நம்மால் இறந்தவர்களை உயிர்பிக்க முடியுமா என்று குதர்க்கமாக கேள்வி கேட்கக் கூடாது.

 மேலும் ..
 " செருப்பின் காலடி ஓசையை வைத்து தன்னை கடந்து போகின்றவர்கள் யார் என்பதை கப்றில் உள்ளவர் அறிந்து கொள்கிறார் " என்பது நபிமொழி .

 " என் மீது சொல்லப்படுகின்ற சலாத்தையும் ஸலாமையும் அமரர்கள் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார்கள். நான் அவற்றுக்கு பதில் சலாம் சொல்கின்றேன் " என்கிறார்கள் நமது முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்கள்.

 தர்க்கம் புரிபவர்கள் ...
 " நபியும் நம்மைப் போன்ற மனிதர்தான் . அவர்களும் இறந்துவிட்டார்கள் . அவர்களிடமும் எதுவும் கேட்கக் கூடாது " என்று கூறுகிறார்கள்.
 இறந்துபோன நபி எப்படி நாம் சொல்லும் சலாத்துக்கும் சலவாத்துக்கும் பதில் சொல்கிறார்கள் ?
 அவர்களை எப்படி எழுபதினாயிரம் மலக்குகள் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை சொல்கிறார்கள் ?

 பெருமானார் ( ஸல் ) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.
 அவர்கள் வாழ்ந்த வீட்டிலேயே அடக்கமும் ஆகி விட்டார்கள்.
 அதன்பிறகு அன்னை ஆயிஷா ( ரலி ) அவர்கள் தங்கள் கணவரை தங்களின் தலையை மறைக்காத நிலையிலேயே தினமும் ஜியாரத் செய்கிறார்கள்.
 அதபிறகு அவர்களின் தகப்பனார் அபூபக்கர் ( ரலி ) அவர்கள் இறப்பெய்தி ரசூலுல்லாஹ்வின் அருகிலேயே அடக்கப்படுகிறார்கள்.
 அப்போதும் தலை திறந்த நிலையிலேயே ஆயிஷா நாயகியார் கணவரையும் தந்தையையும் ஜியாரத் செய்கிறார்கள்.
 சில வருடங்களுக்குப் பிறகு கலீபா உமர் ( ரலி ) அவர்களும் மரணமெய்துகிறார்கள். அவர்களும் பெருமானார் பக்கத்திலேயே அடக்கம் செய்யப்படுகிறார்கள்.
 அதன்பிறகு ஆயிஷா நாயகியார் அவர்கள் தலையை மூடிக் கொண்டு ஹிஜாப் அணிந்து கொண்டு ஜியாரத் செய்யப் போகின்றார்கள்.

 என்ன காரணம் ?
 உமர் ( ரலி ) அவர்கள் அந்நிய மனிதர்.
 அவர்களுக்கு முன்னால் ஹிஜாபின்றி செல்லக் கூடாது.
 உமர்தாம் இறந்து விட்டாரே.... ?
 அவரால் பார்க்கவோ கேட்கவோ முடியாதே ?
 அதுவும் மண்ணறைக்குள் இருக்கும் உமர் அவர்களால் பூமியில் ஹயாத்தாக இருக்கும் ஆயிஷா நாயகியாரை பார்க்க முடியுமா?

 சிந்திக்க வைக்க இதுபோல் கேள்விகள் பல உண்டு .
 இன்ஷா அல்லாஹ் ...
 அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் !

No comments:

Post a Comment