Popular Posts

Saturday 23 April 2016

ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின் நபி மீது ஸலவாத்...!

ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின் நபி மீது ஸலவாத்...!
 ஸலவாத் ஓதுவது சுன்னத்தான இடங்களில் இதுவும் ஒன்றாகும். ஐங்காலத்தொழுகைகளுக்குப் பின் ஸலவாத் ஓதுவத(ன் சிறப்பி)னைப் பற்றி தனிப்பிரிவாக நிறைய இமாம்கள் எழுதியுள்ளனர். அவர்களில் இமாம் அபூமூஸா மதீனி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒருவராவர். இவர்கள் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்கள் : அபூபக்கர் இப்னு முஜாஹித் எனும் ஹதீதுக்கலை அறிஞரிடம் முஹம்மது உமர் அவர்கள் ஹதீது பயின்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஷைகுஷிப்லி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வந்தார்கள். இவர்களைக் கண்டதும் எனது ஆசிரியர் எழுந்து நின்று (மரியாதை செய்து) அவர்களைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டார்கள். மாணவரான முஹம்மது இப்னு உமர் அவரது ஆசிரியரிடம் கேட்டார் : “பகுதாதில் உள்ளோர் யாவரும் ஷிப்லியை பைத்தியக்காரர் என்று நினைத்துக் கொண்டிருக்க நீங்கள் அவருக்கு இந்த அளவு மரியாதை செய்கிறீகளே!” அதற்கு ஆசிரியர் பதிலளித்தார் : “நபி (ﷺ) அவர்கள் இவ்வண்ணம் இந்த ஷிப்லிக்கு மரியாதை செய்வதை மனாமில் கண்ட நான், ‘யா ரசூவ்லுல்லாஹ் ஷிப்லிக்கு இந்த அளவு தாங்கள் மரியாதை செய்கிறீர்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ﷺ) அவர்கள் பதிலளித்தார்கள். இவர் அவரது (எல்லா) தொழுகைகளுக்குப் பின்னாலும்
 “லகத் ஜாஅகும் ரசூவ்லும் மின் அன்fபுஸிகும் அzசீzசுன் அலைஹி மா அனித்தும் ஹரீசுன் அலைகும் பில் முஹ்மினிய்ன ரவூfபுர் ரஹீம். fபய்ன் தவல்லவ் fபகுல் ஹஸ்பியல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவ அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அலீம்” (அல்குர்ஆன் - 9-128, 129)
 ஆகிய வசனங்களை ஓதியபின்னால் என்மீது ஸலவாத்தும் ஓதுகிறார்.” இதே நிகழ்ச்சியை கவ்லுல் பதீஃ நூலில் ஹாபிள் ஸகாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் எழுதியிருக்கிறார்கள். இப்னு பிஷ்குவால் நூலிலும் சிறுமாற்றத்துடன் இந்நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஷைகுஷிப்லி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அபூபக்கர் இப்னு முஜாஹித் எனும் ஹதீதுக்கலை அறிஞரிடம் சென்றபோது அறிஞர் எழுந்து நின்று மரியாதை செய்தார். அப்பொழுது சபையிலுள்ளோர் ஹதீதுக்கலை அறிஞரிடம் கேட்டனர் : “அலீ இப்னு ஈஸா போன்ற நாட்டின் மந்திரிக்கும் எழுந்து நின்று மரியாதை செய்யாத நீங்கள் இருவருக்கு ஏன் மரியாதை செய்தீர்கள்?” அதற்கு ஹதீதுக்கலை அறிஞர் “நபி (ﷺ) அவர்கள் எவருக்கு மரியாதை செய்தார்களோ அவருக்கு நானும் எழுந்து நின்று மரியாதை செய்வது கூடாதா?” என்று கூறி தாம் கண்ட மனாமை விவரித்தார்கள் : மனாமில் தோன்றிய மாநபி (ﷺ) அவர்கள் என்னிடம் கூறினார்கள். “அபாபக்கர்! நாளை சுவனவாசியான ஒருவர் உங்களிடம் வருவார். அவர் உங்களிடம் வரும்போது அவரை கௌரவப்படுத்துங்கள்". நான் ஷைகு ஷிப்லியை கௌரவப்படுத்திய இரண்டு நாட்களுக்குப் பின்பு மீண்டும் நபி (ﷺ) அவர்கள் எனது மனாமில் தோன்றி, “சுவனவாசியான ஒருவரை நீர் கௌரவித்ததற்க்காக அபாபக்கர்! உங்களை அல்லாஹ் கௌரவப்படுத்துவானாக!” என்றார்கள். நான் நபி (ﷺ) அவர்களிடம் கேட்டேன் : “யா ரசூவ்லுல்லாஹ்! தங்களிடம் ஷைகுஷிப்லி இத்தகைய மகிமையைப் பெறுவதற்குரிய காரணம் யாது?”
 அதற்கு நபி (ﷺ) அவர்கள் பதிலளித்தார்கள் : "ஷிப்லி ஐங்காலத்தொழுகையைத் தொழுதபின் அல்குர்ஆனின் 9-128, 129 வசனங்களை ஓதிவிட்டு என்மீது ஸலவாத்தும் ஓதுகிறார். இவ்வாறு கடந்த எண்பது ஆண்டுகளாகச் செய்து வருகிறார். இவ்வாறு ஓதி வருபவரை நானும் கௌரவிக்க வேண்டுமே!"
 இமாம் ஹாபிள் ஸகாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் : ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின்னால் ஸலவாத் ஓதுவதற்கு அபூஉமாமா رضي الله عنه அவர்களின் ஹதீதும் சான்றாக உள்ளது. நபி (ﷺ) அவர்கள் நவின்றார்கள் : எவராவது ஐங்காலத் தொழுகைக்குப் பின்னால்
 “அல்லாஹும்ம அஃதி முஹம்மதன் அல்வஸீலத வஜ்அல் fபில் முஸ்தfபிய்ன முஹப்பதஹு வfபில் ஆலமீன தரஜதஹு வfபில் முகர்ரபீன தாரஹு”
 பொருள் : “யா அல்லாஹ்! முஹம்மது நபி (ﷺ) அவர்களுக்கு ‘வஸீலா’ எனும் மேலான பதவியை வழங்குவாயாக! உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களது நேசத்தையும், உலக மக்களிடம் அவர்களது மதிப்பையும், உன்னிடம் நெருங்கியவர்களிடம் அவர்களைப் பற்றி (நினைவு)ச் சுழற்சியையும் நீ வழங்குவாயாக!”
 என்ற இந்த துஆவை ஓதி வருபவர்களுக்கெல்லாம் எனது ஷபாஅத் உரியதாகும்.
 நூல் – தப்ரானீ

No comments:

Post a Comment