Popular Posts

Monday 9 May 2016

"இஸ்லாத்தில் பார்வையில் இறைநேசர்களின் தர்ஹாக்களில் கொடி ஏற்றுவது, சந்தனம் பூசுவது, சந்தனக்கூடு விழா, சாம்புரானி புகை பிடிப்பது கூடுமா?"¶

¶"இஸ்லாத்தில் பார்வையில் இறைநேசர்களின் தர்ஹாக்களில் கொடி ஏற்றுவது, சந்தனம் பூசுவது, சந்தனக்கூடு விழா, சாம்புரானி புகை பிடிப்பது கூடுமா?"¶

 கொடி ஏற்றுவது கூடுமா?

 நபிமார்கள், வலிமார்கள், ஷூஹதாக்களை பற்றியும் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்காக செய்த தியாகங்களை ஞாபகப்படுத்தி அவர்களின் பெயரால் கொடியேற்ற விழாக்கள் நடைபெறுகின்றது. வழிகெட்ட புதுமை விரும்பிகளாகிய வஹ்ஹாபிகள் கொடியேற்றுவது ஷிர்க் என்றும், பித்அத் என்றும் கூறி சுன்னத் வல் ஜமாஅத் சொந்தங்களை ஏசியும், பேசியும் வருகின்றனர். ஆகவே அவ்லியாக்கள் பெயரால் கொடி ஏற்றுவது கூடுமா? கூடாதா? என்பது பற்றி நாம் தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்.

 உலகமெங்கும் வாழும் அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களின் நினைவு நாளை நாம் கொண்டாடி வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! வலிமார்கள் உலகில் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்காகவும், இஸ்லாம் மார்கத்திற்க்காகவும் தனது நப்ஸூடனும் யுத்தம் செய்து இஸ்லாத்தின் எதிரிகளான பகைவர்களுடனும் யுத்தம் செய்து மகத்தான வெற்றிகளை பெற்று இவ்வாறே தனது வாழ்வில் ஒவ்வொரு நொடிகளையும் இறைவனின் பாதையில் அர்ப்பணித்தார்கள்.

 பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றிலே மிக பிரபலமானதும் பெரிய யுத்தமும் ஆகும். இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போதுநபிகள் கோமான் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். சஹாபாக்கள் அதிர்ச்சியுடன் நாயகமே எத்தனை உயிர் தியாகம். எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருக்க யாரஸூலல்லாஹ்! சிறிய யுத்தம் என்று சொல்கின்றீர்கள் என கேட்க பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். வாளேந்தி போராடுவது பெரிய யுத்தமல்ல தனது நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம் என்று சொன்னார்கள். இதிலிருந்து மனோ இச்சையை கொள்வதே பெரிய யுத்தம்; அதை செய்பவரே உயர்வான ஷஹீத் என்பது எமக்கு தெளிவாகிவிட்டது. அவ்லியாக்கள் என்பவர்கள் இறை நேசத்தை பெற்ற நன்மக்கள் அவர்கள் தமது மனோ இச்சையை அழிக்காமல் அவனை நெருங்கி இருக்க முடியாது. அப்படி மனதோடு போராடி அதை வெல்லாதவர் ஒரு இறை நேசராக இருக்க முடியாது. அப்படி இரண்டு யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களே அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்கள் என்று கருதப்படும்.

 எனவே சிறிய யுத்தத்தில் வெற்றி கொண்டதிற்கே ஸஹாபாக்கள் கொடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்முனைக்கு கொடிகளுடன் சென்றுள்ளார்கள், திருமக்காவை வெற்றி கொண்டு நுழையும்போது கொடி பிடித்ததுள்ளார்கள் என்ற ஹதீஸ்களின் அடிப்படையில் பெரிய யுத்தம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நப்ஸூடன் யுத்தம் செய்தும் இஸ்லாத்தின் எதிரிகளுடனும் யுத்தம் செய்தும் பல பள்ளிவாசல்களை ஸ்தாபித்து, தரீக்காக்களை நிர்னைத்து, வழிகேட்டில் சென்று கொண்டு இருந்தவர்களை அல்லாஹ்வின் உதவியால் நேர்வழி படுத்திய தியாகிகள் ஷூஹாதாக்களாகிய வலிமார்களை ஞாபகம் செய்து கொடி ஏற்றுவதில் எவ்வித தவரும் கிடையாது மாறாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.

 கொடி ஏற்றுவதற்க்கான ஆதாரங்கள் :

 இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், 'அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய கொடி கருமையாகவும் சிறிய கொடி வெண்மையாகவும் இருந்தது.
 (நூல்: திர்மிதீ, இப்னு மாஜா, மிஷ்காத் பக்கம்-237)

 ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் கொடி வெண்மையாக இருந்தது.'
 (நூல்:- திர்மிதீ, இப்னு மாஜா ஆதாரம்- மிஷ்காத் பக்கம்338)

 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் அடக்கத்தலத்திற்கு அருகில் உள்ள) ஹஜூன் என்னும் இடத்தில் நட்டி வைக்கும்படி உத்தரவிட்டார்கள் (மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஸூபைர் இப்னு அவ்வாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அபூ அப்தில்லாஹ்வே! இங்குதான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள் என்றார்கள்,.ஹழ்ரத் உர்வா பின் ஸூபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (நூல் புகாரி 4280)

 மறுமையில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம் அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் திருக்கரத்தால் 'லிவாவுல் ஹம்து' என்னும் கொடி கொடுக்கப்படுகின்றது.எனது கரத்தில் 'லிவாவுல் ஹம்து' என்னும் கொடி இருக்கும். எனக்கு பெருமையில்லை. ஆதமும் அவர்களல்லாத எந்த நபியும் என் கொடியின் கீழே இருந்தே தவிர இல்லை. இந்த ஹதீஸை அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்.
 (நூல்:திர்மிதீ, மிஷ்காத், பக்கம் 513)

 நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ''மறுமை நாளில் 'லிவாவுல் ஹம்து' என்னும் கொடியை நான் சுமப்பேன்.'என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு
 (நூல்:திர்மிதீ 3615-3616, தாரமீ 47,மிஷ்காத், பக்கம்-5762,இப்னு மாஜா 4308)

 ஸஹாபாக்கள் ஏந்திய கொடிகள் பற்றிய ஆதாரங்கள் :

 கைபர் கொடியினை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரலியல்லாஹுஅன்ஹு அவர்களிடம் கொடுத்தார்கள். (ஆதாரம் புகாரி 4210,முஸ்லிம் 2406,திர்மிதீ 3724,மிஷ்காத் 6089)

 பத்ரு போரில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரண்டு கொடிகள் இருந்தது அதில் ஒன்றை அலி ரலியல்லாஹுஅன்ஹு அவர்களும் மற்றதை ஸஃதுபின் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏந்தி பிடித்தார்கள்.
 (நூல் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் பக்கம் 156)

 சூபியாக்களான ஞானவான்கள், அன்பியாக்கள், அவ்லியாக்களை ஸியாரத் செய்வதற்காக போகும்போது கொடிகள் பிடித்துக் கொண்டும், கொட்டு அடித்துக் கொண்டும் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் கூடுமா? என்ற கேள்விக்கு அல்லாமா ஷைகு முஹம்மது கலீலி ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'இவைகள் ஆகுமானவைகள், வேண்டப்படுபவைகள். இவைகளை வழிகெட்ட வம்பர்கள்தான் மறுப்பார்கள் என்று பதிலளித்துள்ளனர்'.
 (ஆதாரம்: பதாவா கலீலி, பாகம்-2, பக்கம்-351)

 எனவே கொடி ஏற்றுவதன் மூலம் இது ஒரு மகானின் கப்ரு என்று அறிவிப்பதாலும், ஒரு வலியை கண்ணியப்படுத்துதல் இருப்பதாலும், மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாலும் இது மார்க்கத்தில் ஆகுமான காரியமாகும். ஆகாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு தேசியக் கொடி என்றும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கட்சிக் கொடி என்றும் ஏற்படுத்தி அதற்கான கொடியேற்று விழா, கொடி தினம் என்று கொண்டாடி வரும் இக்காலத்தில் அவ்லியாக்களுக்கு கொடி ஏற்றக் கூடாது என்று சொல்வது மார்க்கத்தை சரியான முறையில் அறியாமையையும், அவ்லியாக்கள் மீதுள்ள பகைமையையும் காட்டுகின்றது.வழிகெட்ட வஹ்ஹாபிகளின் சூழ்ச்சிகளை விட்டும் அனைத்து முஸ்லிம்களை அல்லாஹ் பாதுகாப்பானாக.!

 யானை மீது கொடி ஊர்வலம் கூடுமா?

 இதனை நாம் இரண்டு விதமாக புரிந்து கொள்ளவேண்டும்.
 முதலாவதாக: யாராவது புண்ணியம் கருதி யானை மீது கொடி ஊர்வலம் கொண்டு சென்றால் அது கூடாது. அவ்வாறு யாராவது யானை மீது கொடி ஊர்வலம் செல்வது புண்ணியம் கருது செய்தால் அது கூடாது அதனை தடுக்க வேண்டும்.
 இரண்டாவது : புண்ணியம் கருதி செய்யாமல் பிரமாண்டமான படைப்பின் மீது அதாவது யானை மீது கொடி ஊர்வலம் நடாத்தப்படுகின்றது என கருதி கொடியின் கீர்த்தியை அதாவது சிறப்பை உயர்த்திக் காட்டுவதற்காகவும், கொடி ஊர்வலம் வருகின்றது என்று மக்கள் மத்தியில் அடையாளம் காட்டுவதற்காக வேண்டியும் யானை மீது கொடி ஊர்வலம் கொண்டு செல்வது மார்க்கத்தில் கூடுமான காரியமாகும்.

 வலிமார்களின் தர்ஹாக்களில் சந்தனம் பாவிப்பது, பூசுவது மார்க்கத்தில் கூடுமா?

 சந்தனம் என்பது ஒரு மனமான பொருள் மக்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் மனமான பொருட்களை பாவிப்பது, பூசுவது சுன்னத்தான விடயம் எனவே சந்தனம் பூசுவது "கூடும்" என்பதெல்ல மாறாக "சுன்னத்"என்பதுதான் சரியான கருத்தாகும்.

 நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இந்த உலகத்தில் எனக்கு பிடித்தது மூன்று விடயங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று நறுமணம் என்றார்கள்.
 (ஆதாரம் நசாயீ 3939,ஹாகிம் 2/174)

 எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடித்த ஒன்றை நாம் செய்வது சுன்னத்தான காரியமாகும். அந்த அடிப்படையில் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் சந்தனம் பாவிப்பது, மனம் பூசுவது சுன்னத்தான காரியமாகும்.

 சந்தனக்கூடு விழா கூடுமா?

 சந்தனக்கூடு விழா என்பது ஆங்காங்கே அடங்கி இருக்கும் ஷூஹதாக்கள் / வலிமார்களின் தியாகத்தை நினைவு படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்டும் நல்ல விடயமாகும். சந்தனக்கூடு என்பது அந்த இடத்தில் கந்தூரி விழா வைபவம் நடைபெருகின்றது என்பதை அடையாளப்படுத்துகின்ற ஒரு அடையாள சின்னமாகும். மேலும் அடையாள சின்னங்களுக்காக செலவழிப்பது மார்க்கத்தில் கூடுமான நல்ல காரியமாகும். அது வீண்விரையம் அல்ல. உதாரணமாக நமது வீட்டில் திருமணம் (நிகாஹ்) விழா நடைபெருகின்றது என்றால் அதற்காக நாம் வீட்டை அலகரிப்பது, திருமண அழைப்பிதல், அலங்கார விடயங்கள் இதுபோன்ற செலவுகலை செய்வது வீண்விரையம் அல்ல. காரணம் நமது வீட்டில் திருமண விழா நடைபெற உள்ளது என்று அடையாளப்படுத்தும் அடையாள சின்னங்களாகும். இது போன்று நிரைய விடயங்களை நமது நடைமுறைகளிலிருந்து பார்க்கலாம். அந்த அடிப்படையில் சந்தனக்கூடு விழா எடுப்பது அவ்விடத்தில் கந்தூரி வைபவம் நடைபெருகின்றது என்று அடையாளப்படுத்தும் காரியம் மார்க்கத்தில் கூடும் ஆனால் மற்ற வீண்விரையங்கள் (மேலதாலம், ஆட்டம் பாட்டம் டான்ஸ்) இதுவெல்லாம் கூடாது. எனவே மார்க்கத்திற்க்கு முறனான செயல்கள் கூடாது அப்படிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில இடங்களில் சந்தனக்கூடு விழா அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து சமூக நல்லிணக்க விழாவாக நடந்தப்படுகிறது. இதில் ஷரியத்திருக்கு மாற்றமான ஹராமான விஷயம் ஏதும் இல்லை. அதனால் கூடும்.

 வலிமார்களின் தர்ஹாக்களில் சாம்புரானி புகை பிடிப்பது கூடுமா?

 சாம்புரானி புகை என்பது ஒரு மனமான பொருள் மக்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் மனமான பொருட்களை பாவிப்பது, போடுவது சுன்னத்தான விடயமாகும்.

 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையென்றும் மஸ்ஜிதுன்னபவியில் சாம்புரானி புகை பிடிப்பதற்க்காக ஒரு ஸஹாபியை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நியமித்துள்ளார்கள்.
 (ஆதாரம் இப்னு மாஜா)

 நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அதான் சொல்வதற்க்காக "முஅத்தின்"என ஒரு ஸஹாபியினை நியமித்தது போல மஸ்ஜிதுன்னபவியில் சாம்புரானி புகை போடுவதற்க்காக ("முஜம்மிர்" -சாம்புரானி புகை போடுபவர்) என ஒரு ஸஹாபியினை நியமித்துள்ளார்கள்.
 அவர்களின் பெயர் (நுஅயீம் இப்னு அப்தில்லாஹ்) ரலியல்லாஹூ அன்ஹு அவர்களை அந்த காலத்தில் மக்கள் நுஅயீம் இப்னு அப்தில்லாஹ் என்று அவர்களின் பெயரைச் சொல்லி அழைக்க மாட்டார்கள் மாறாக "முஜம்மிர்"
 சாம்புரானி புகை போடுபவரே என்று சிறப்பு பெயர் கொண்டு அழைக்கும் அளவிற்கு காணப்பட்டார்கள்.

 இன்று வலிமார்கள் அடங்கியுள்ள புனிதமான இடங்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமையென்று சாம்புரானி போடும் காரணம் அன்றைய தினத்தில் மக்கள் அதிகமானவர்கள் ஒன்று கூடுவார்கள், திக்ர் மஜ்லிஸ் செய்வார்கள் அனைவரும் மனமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான். எனவே இஸ்லாத்தில் கொடி ஏற்றுவது, சந்தனம் பூசுவது, சாம்புரானி புகை பிடிப்பது இவைகள் அனைத்தும் மார்க்கத்தில் கூடும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் கூடாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

ஹலாவதுல் ஈமான்
 BY Moulavi
 S.L Abdhur Rahman Ghawsi

No comments:

Post a Comment