Popular Posts

Monday 9 May 2016

இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள தியாகங்கள்"

இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள தியாகங்கள்"

 ❇ இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்பு

 இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஹிஜ்ரி 194 (கி. பி. 803) ஷவ்வால் பிறை 13 வெள்ளிக்கிழமை அந்தி வேளை இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா எனும் நகரத்தில் பிறந்தார்கள், இமாம் அவர்களின் முழுப்பெயர் முகம்மது இப்னு இசுமாஈல் இப்னு இப்றாகீம் இப்னு அல்-முஙீரா இப்னு பர்திசுபா அல்-புகாரீ ஆகும் இமாம் அவர்களின் இயற்பெயர் முஹம்மது அபூ அப்தில்லாஹ் என்பதாகும். அவர்களின் தகப்பன் பெயர் இஸ்மாயில். அபூ அப்துல்லாஹ் என்பது அவர்களின் புனைப் பெயர். ஹதீதில் அமீறுல் முஃமினீன்,நாஸிறுல் அகாதீஸின் நபவிய்யா,நாஷிறுல் மவாரீதில் முஹம்மதிய்யா என்பன சிறப்புப் பெயர்களாகும. புகாரா நகரில் பிறந்ததனால் புகாரியென பெயராலேயே இமாமவர்கள் பிரபலமாக அழைக்கப்பட்டார்கள்.

 ❇ இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறு வயது கல்வி

 இமாமவர்கள் சிறு வயதிலேயே தந்தையை இழந்து அநாதையானார்கள். தாயின் மடியிலேயே வளர்ந்தார்கள். குழந்தைப் பருவத்தில் பார்வையை இழந்தார்கள். இயலுமான எல்லா வழிகளாலும் பரிகாரம் தேடியும் பலன் கிட்டவில்லை. தனது செல்ல மகனின் நயனம் திறக்க நாளெல்லாம் தாய் அழுது அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கொண்டேயிருந்தார்கள்.ஒரு நாள் கலீலுர் ரஹ்மான் ஹளரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இமாமவர்களின் அன்னையவர்கள் கனவில் கண்டார்கள். அல்லாஹ் உங்கள் இரஞ்சுதலை ஏற்றுள்ளான். உங்கள் செல்லப் பிள்ளையின் பார்வை மீண்டுள்ளது என்று சோபனம் கூறினார்கள். பொழுது புலரும்போது பார்வையுடன் கண் விழித்தார்கள் இமாமவர்கள் அவர்களின் கூர்மையான பார்வையால் நிலா ஒளியிலும் ஏடெடுத்து வாசிக்கும் திறன் பெற்றிருந்தார்கள்.இளமைக் கல்விதனது கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியிலேயே தனது கல்வியை தொடங்கினார்கள். பத்து வயதானபோது ஹதீதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் அதிகரித்தது. அப்போது புகாறாவில் மிகப் பிரசித்திபெற்றிருந்த முஹத்திதுகளிடம் ஹதீஸைக் கற்கச் சென்றார்கள். ஹளரத் ஸலாம் பின் முஹம்மது பேகின்தி,முஹம்மத் பின் யூஸுப் பேகின்தி,அப்துல்லாஹ் பின் முஹம்மது முஸ்னதி, இப்றாஹீம் பின் அஷ்அத் இவர்களுள் முக்கியமானவர்களாகும்.
 (ஆதாரம் : தபகாத்துல் குப்றா, பாகம் - 2, பக்கம் - 4)

 சில மாதங்களிலேயே ஆசிரியர்கள் வியக்கத்தக்க வகையில் அவர்களின் திறமை,மனன சக்தி காணப்பட்டது. புகாறாவில் மிகவும் பிரபல்யமான ஒரு முஹத்தித் இருந்தார். இவர் பெயர் ‘தாகிலி‘ ஆகும். இமாமவர்கள் இவரிடமும் சென்று ஹதீது கற்கலானார்கள்.ஒரு தினம் இவர் ஏட்டைப் பார்த்து ஒரு ஹதீதின் ஸனதை அறிவிப்பாளர் படியலை வாசித்தார். அப்படியான வரிசை, ஸுப்யான் - அபூஸுபைர், இப்றாஹீம் என்பவரிடமிருந்து அறிவிப்பவர் இல்லை என்று தாமதமின்றி இமாம் புகாரி அவர்கள் கூறினார்கள். தாகிலி சிறுவர் புகாரியின் கூற்றை ஏளனமாகப் பார்த்துவிட்டு மீண்டும் வாசிக்கலானார்.இமாமவர்கள் விடவில்லை. அசல் பிரதியை பார்க்குமாறு வேண்டினார்கள். ‘தாகிலி‘ வீட்டினுள் சென்று அசல் பிரதியைக் கொண்டு வந்தபின்,சரியான பெயரை உச்சரிக்குமாறு இமாம் புகாரியிடம் வேண்டினார். இந்த அறிவிப்பாளர் பட்டியலில் வருபவர் அபூஸுபைர் அன்று! ஸுபைர் இப்னு அதிய்யி என்று விளக்கினார்கள். இவர் இதில் வரும் இப்றாஹீம் என்பவரின் மாணவராவார் என்று சுட்டிக் காட்டினார்கள்.பிழையை ஏற்றுக்கொண்ட ‘தாகிலி‘ தனது ஏட்டைத் திருத்திக் கொண்டார். இப்போது இமாமவர்களுக்கு வயது வெறும் பதினொன்றுதான்! இமாமவர்களிடம் அபார நினைவாற்றல் காணப்பட்டது. தனது 16வது வயதில் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாறக்,இமாம் வகீஃ ஆகியோரின் நூற்களையெல்லாம் மனனமிட்டார்கள்.

 ஹதீஸ் கல்விக்காக குராஸான், பஸரா, கூஃபா, பக்தாத், மக்கா,மதீனா, சிரியா, மிஸ்ர் போன்ற ஊர்களுக்கு பயணம் செய்தார்கள்இமாம் புஹாரீ (ரஹ்) அவர்கள் தனது அறிவாற்றலின் அத்தாட்சியாக இந்த முஸ்லிம் உம்மத்திற்கு அரிய பல நூற்களை தொகுத்துத்தந்துள்ளார்கள். அவைகளில் முதலிடம் வகிப்பது ‘ஸஹீஹுல் புஹாரீ‘ ஆகும். இதனை இமாமவர்கள் தனது 17 வது வயதில் எழுத ஆரம்பித்து (16 வருடங்களில்) தனது 33 வது வயதில் கோர்வை செய்து முடித்தார்கள்.அவர்கள் பல சிரமத்தின் பின் கோர்வை செய்த ‘ஸஹீஹுல் புஹாரீ‘ அல்லாஹ்விடம் கபூல் செய்யப்பட்ட ஒரு கிரந்தமாக மாறிவிட்டது. ‘நான் புஹாரீ ஷரீபில் எழுதியுள்ள ஒவ்வொரு ஹதீஸையும் இரண்டு ரக்ஆத் நபில் தொழுத பின்னர் தான் பதிவுசெய்தேன்’ என்று இமாமவர்கள் கூறுகிறார்கள்.அல்லாஹ்வின் வேதமான புனித அல் குர்ஆனிற்கு அடுத்தபடியாக மிகத் தரம் வாய்ந்த நூல் ‘ஸஹீஹுல் புஹாரீ‘ என்று எல்லா மேதைகளினாலும் எவ்வித கருத்து வேறுபாடின்றி போற்றப்படுமளவிற்கு அந்தஸ்த்தை அடைந்துவிட்டது.இதில் மொத்தமாக 7275 ஹதீஸ்கள் இமாம் அவர்கள் கோர்வை செய்திருந்த போதிலும், 4000 ஹதீஸ்கள் மீண்டும் மீண்டும் வராமல் ஒரு தடவை மாத்திரம் பதியப்பட்டிருக்கின்றது. இந்த ‘ஸஹீஹுல் புஹாரீ‘ கிரந்தம்தான் இன்று எம்மத்தியில் பாராயணம் செய்யப்படும், அறபு மதரஸாக்களின் பாடவிதானத்தில் ஹதீஸ் கலைக்காக வேண்டி சேர்க்கப்பட்டும், இந்தியா,இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பழம்பெரும் உஸ்தாதுமார்களினால் ஒருவருட பாடத்திட்டமாக ஏற்படுத்தி ‘ஸஹீஹுல் புஹாரீ‘ இல் உள்ள ஹதீஸ்களுக்கு விளக்கங்கள் போதிக்கப்பட்டும் வருகின்றன.இதே நிலையில் தான் இன்றுவரை நம் இஸ்லாமிய சமூகம் பாதுகாக்கட்டும்வருகிறது

 ❇ இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஹஜ் பயணம்

 ஹிஜ்ரி 210 இல் இமாமவர்களுக்கு வயது 16 ஆகும். இப்போது தங்களது மூத்த சகோதரர் அஹ்மத் இப்னு இஸ்மாயீல் மற்றும் அருமைத் தாயாருடன் ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். ஹஜ்ஜுக் கடமைகளை முடித்தபின் தாயும்,சகோதரரும் நாடு திரும்பினார்கள். இமாமவர்கள் மக்காவிலேயே தங்கிவிட்டார்கள். அங்கு அறிவைத் தேடுவதிலும், நூல் எழுதுவதிலும்,கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.தனது 18வது வயதில் ஸஹாபாக்கள்,தாபிஈன்களின் தீர்ப்புக்களைத் திரட்டினார்கள். இதே ஆண்டில் அன்னாரின் புகழ்பூத்த ‘கிதாபுத்தாரீஹ்‘ என்றநூலை றஸுலே அக்றம், நூறே முஜஸ்ஸம், முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் திரு ரௌலாவுக்கு முன் அமர்ந்து கொண்டு நிலா வெளிச்சத்தில் எழுதினார்கள்.மீசை கூட அரும்பிடாத பருவத்தில் பெரும் பெரும் ஹதீஸ்துறை பேரறிஞர்கள் இமாமவர்கள் முன் அமர்ந்து ஹதீஸ் பாடம் கற்கத் திரண்டார்கள்.

 இக்காலப் பகுதியில் இமாமவர்கள் மக்கத்துல் முகர்ரமா புகுந்தால்,அங்குள்ள அதி உயர் தரத்தில் உள்ள முஹத்திதுகளிடம் எதுவித சிபாரிசும் இன்றி நேரே சென்று பாடம் படிக்கும் தகுதியினைப் பெற்றிருந்தார்கள்.ஹதீதைத் தேடி இமாமவர்கள் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். அதனை இமாமவர்களே கூறும்போது, இரு முறை மிஸ்றுக்கும், இரு முறை சீரியாவு (ஷாமு)க்கும், இரு முறை அல் ஜீரியாவுக்கும், நான்கு முறை பஸறாவுக்கும், ஆறு ஆண்டுகள் ஹிஜாஸ் மண்ணிலும், கூபா,பகுதாதுக்கு கணக்கற்ற முறையிலும் ஹதீஸ் தேடி பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
 அன்றைய நபிமொழி அறிவிப்பாளர்களிடமிருந்து அன்னார் கேட்டு மனனம் செய்த ஹதீஸ்கள் பல இலட்சங்களாகும்.இருப்பினும் நம்பத் தகுந்த வலுவான ஆதாரம் கொண்ட அறிப்பாளர் தொடர் வழியாகக் கிடைத்த நபிமொழிகளை மட்டுமே தமது முதன்மையான நூலாகியஸஹீஹ் அல்-புகாரீ என்ற புகழ் மிக்க நூலில் இடம் பெறச் செய்தார். இந்நூலில் இடம் பெறச் செய்வதற்கு அன்னார் தமக்குத் தாமே சில விதிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டார். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அன்னார் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7275 ஆகும்.

 ஸமர்கந்திற்கு அண்மையில் உள்ள “கறன்தக்“ என்ற கிராமத்தை இமாமவர்கள் சென்றடைந்ததும் ஸமர்கந்திலும் இமாமவர்களுக்கெதிரான கிளர்ச்சி வெடித்துள்ளது என்ற செய்தி அவர்களுக்கு எட்டியது. ஸமர்கந்து செல்வதைப் பிற்போட்ட இமாமவர்கள் ஸமர்கந்து மக்கள் ஒரு முடிவிற்கு வரும்வரை கறன்தக் என்ற இடத்தில் சில நாட்கள் உறவினர்கள் இல்லத்தில் தங்கினார்கள்.ஸமர்கந்த மக்களின் இறுதிமுடிவு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. இது இமாமவர்களுக்கு உச்ச மனவேதனையைக் கொடுத்தது.இமாமவர்கள் கவனிப்பாரில்லாமல் கைவிடப்பட்டவர்கள் ஆனார்கள். ஒரு தினம் தஹஜ்ஜுத் தொழுத பின் கவலை தோய்ந்த உள்ளத்தால் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்யாஅல்லாஹ்! உலகம் விசாலமானதுதான் ஆனால் எனக்கு நெருக்கடியாகி விட்டது என்னை உன்பால் எடுத்து விடு என்று உருக்கமாக துஆக்கேட்டார்கள்.
 (ஆதாரம் : பத்ஹுல்பாரி முகத்திமா, பக்கம் - 494)

 ❇ இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சேவைகள்

 ஒரு ஹதீஸுக்காக ஆறுமாதக் காலம் அலைந்து திரிந்தும், கையிலிருந்த பணத்தைச் செலவழித்தும், பொருட்படுத்தக் கூடாத ஓர் அற்பக் குறைக்காக ஒரு ஹதீஸைப் பெறாது திரும்பி விட்டார்களெனின் இவர்களின் ஹதீஸ்களின் தூய்மையை என்னவென்று சொல்வது? இத்தகையதாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாக்கியங்களை ஒழுங்கான முறையில் திரட்டித் தமது புகாரி ஷரீபை எழுதுவதற்காகத் தங்கள் நாட்டினின்று வெளிச் செல்லுந்தோறெல்லாம் உண்ண உணவின்றித் தாகந்தீர நீரின்றிச் சுகமெய்த நித்ரையின்றிப் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பிரயாணஞ் செய்து அனுபவித்த கஷ்டங்கள் அளவில்லாதது.

 மேலும் இக்கிரந்தம் சூரியன் போல் பிரகாசித்து விசேஷமாய் முஸ்லிம்களுக்கும் பொதுவாய் ஏனையோருக்கும் அரும்பலனும் பிரயோசனமும் அளிக்கிறது. இதன் மகிமை பற்றிக் கூறப்பட்டுள்ளவை மிகப் பல. பொதுவாக ஹதீஸுக் கிரந்தங்களில் இதுவே மிகச் சிறந்தது. சுமார் மூன்று லட்சம் ஹதீஸ்களிலிருந்து சரியான கருத்தின் படி 7275 ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்துத் தான் புகாரி ஷரீபை இமாம் அவர்கள் இயற்றினார்கள். (7563 ஹதீஸ்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது) இது மட்டுமின்றி இன்னும் சுமார் இருபது கிரந்தங்கள் வரை இவர்கள் இயற்றியுள்ளார்கள். இவர்களிடம் ஒரு லட்சத்துக்கதிகமான சிஷ்யர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள். இமாம்களான முஸ்லிம், திர்மிதி போன்ற மாபெரும் மேதாவிகளும் இவர்களின் சீடர்களாவர்கள். இவர்களைப் புகழாத பெருந்தகையோர் எவருமில்லை.

 மேலும் ஹதீஸ்களில் எது உறுதியான சஹிஹ் எதுபலகீனம்,எது இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பிரித்து அவைகளை தனி தனியாக பிரித்து எதை ஏற்கலாம் எதை சட்டத்திற்கு எடுத்து கொள்ளாம் எது பொய்யாககூறப்பட்டவை என்றுஆயிரக்கணக்கான ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறி விளக்கிவிட்டுசென்றுவிட்டார்கள் .மேலும் இந்த ஹதீஸ்கள் சேகரிப்பில் இமாம்கள் எவ்வளவு சிரம்எடுத்து கொண்டார்கள் என்பது அனைவரும் அறிய வேண்டும் இன்று நாம் இணையதளத்தில் புஹாரி முஸ்லிம் ஹதீஸ்கள் எண்களை தட்டினாலே அனைத்தும் மிக எளிதாய் கிடைக்கிறது ஆனால் அவைகளை தேடி ஊர் ஊராய் சுற்றி திரிந்து அறிவிப்பார் தன்மையை அந்த ஊர் மக்களிடம் விசாரித்து எல்லாரிடமும் உண்மையாக நடப்பவரா என்று அறிந்த பின்பே அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டு பதிந்தார்கள் .

 ❇ இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றில் ஒரு சம்பவம்

 இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஹதீஸ் ஓன்று அரியதாக ஒருவரிடம் மட்டும்தான் இருந்தது அந்த ஹதீஸை பெற பல நூறு மைல் தூரம் பிரயாணித்து வந்து அந்த ஊர் மக்களிடம் அந்த ஹதீசை மனனமிட்டு வைத்துள்ள நபர் பற்றி விசாரித்தார்கள் அப்போது அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த நபர் நாணயமானவர் உண்மையாளர் என சான்று கூறினார்கள்.அதன்பிறகு அந்நபரிடம் ஹதீஸை நாடி சென்றார்,அவரை சந்திக்கும் போது அவர் தன்னுடைய குதிரையைதொழுவத்தில் கட்டிவிட்டு வருகிறேன் என்று புஹாரி இமாமிடம் கூறிவிட்டு ஒரு கூடையை எடுத்து அதில் புள் இருப்பது போல்காட்டி அந்த குதிரையை ஏமாற்றி அதை தொழுவத்தின் பக்கம் அழைத்தார்கள்,இதை கண்ட இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நீங்கள் தங்களிடம் உண்மையாக இருந்தாலும் நீங்கள் விலங்குகளை ஏமாற்றிவிட்டீர்கள். நீங்கள் அறிவிக்கும் ஹதீஸ் தேவை இல்லை .நான் நபிமொழிகளின் உண்மை தன்மையில் உறுதியானதை மட்டும் சேகரிக்க விரும்புகிறேன் என்று கூறி தன்னுடையபல நூற்றுக்கணக்கான பயணத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த ஹதீஸை பெறாமல் சென்றார் .இந்த நிகழ்ச்சியை “இமாம் புஹாரியின் வரலாற்றில் காணாலாம்

 ❇ இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மரைவு

 சில நாட்களின் பின் இமாமவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். இப்பொழுது ஸமர்கந்திற்கு வருமாறு ஒருவர் வந்து கூறினார். இமாமவர்கள் ஸமர்கந்த் செல்வதற்கு தயாரானார்கள். எழுந்து காலுறை அணிந்தார்கள். தலைப்பாகை சூடினார்கள். வாகனத்தை நோக்கி மிகச் சிரமத்துடன் இருபது எட்டுக்கள் எடுத்து வைத்தார்கள். அவர்களால் நடக்க முடியவில்லை.என்னை விட்டுவிடுங்கள். மிகக்கடினமான பலவீனம் என்னில் காணப்படுகின்றது என்று கூறிய இமாமவர்கள் இருகரம் ஏந்தி - சிறிது நேரம் துஆக் கேட்ட பின் சாய்ந்து படுத்தார்கள். அவர்கள் படுத்ததுமே அவர்களின் உயிர் வல்லறஹ்மான் திரு சன்னிதானத்திற்கு ஏகியது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.இமாமவர்களின் றூஹ் உடலை விட்டும் பிரிந்தபின் உடலிலிருந்து அதிகம் வியர்வை வெளியேறியது. கபன் அணியும் வரை வியர்வை கட்டுக் கடங்காமல் வெளியேறிக் கொண்டிருந்தது. ஹிஜ்ரி 256 –ல் (கி. பி 865) பதின் மூன்று நாட்கள் குறைவாக 62ஆம் வயதில் ஷவ்வால் முதல் நாள் வபாத்தானார்கள்.

 மறுநாள் பெருநாள் ளுஹர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.இமாமவர்களை நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின் அன்னாரின் கப்றிலிருந்து கஸ்தூரி வாடை வெளியேறத் தொடங்கியது. மிகத்தூரத்திலிருந்தெல்லாம் மக்கள் திரண்டுவந்து அன்னாரை ஸியாரத் செய்ததோடு கஸ்தூரி மணம் கமழும் கப்று மண்ணையும் எடுத்துச் செல்லத் தொடங்கினார்கள். இமாமவர்களின் இக்கறாமத்தைப் பார்த்த பின் தொல்லை கொடுத்த அதிருப்தியாளர்களும் மக்பறாவுக்கு வந்து ஸியாறத் செய்த பின் மனம் வருந்திச் சென்றனர்.இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி வபாத்தாகி ஓர் ஆண்டு கழிந்த பின் ஸமர்கந்தில் மழை பெய்யாததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பல முறை மழைதேடித் தொழுதார்கள். துஆக் கேட்டார்கள். மழை கிடைக்கவில்லை.

 இறுதியாக ஒரு நல்லடியார் ஸமர்கந்த் காழியிடம் சென்று,ஸமர்கந்த் மக்களை அழைத்துக் கொண்டு இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் கப்றடிக்கு சென்று அங்கிருந்து கொண்டு அல்லாஹ்விடத்தில் துஆக் கேழுங்கள். அல்லாஹுத்தஆலா உங்கள் துஆவை கபூல் செய்வான் என்று ஆலோசனை கூறினார்கள்.மக்களை அழைத்துக்கொண்டு இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கப்றடிக்குச் சென்ற ஸமர்கந்த் காழி அங்கிருந்து கொண்டு மக்களோடு உருக்கமாக துஆக் கேட்டார். எமது துஆ கபூலாவதற்காக சிபாரிசு செய்யுமாறு இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹியிடத்திலும் வேண்டுதல் விடுத்தார்.துஆக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வானத்தில் மேகங்கள் திரண்டு சூழ்ந்து கொண்டன. பின் மழை கொட்டு கொட்டாகக் கொட்டியது. மக்கள் ஸமர்கந்த் செல்வதற்கு சிரமப்படும் அளவு மழை கொட்டியது (ஆதாரம்: தபகாத்துஷ்ஷாபி அத்துல் குப்றா, பாகம் 02, பக்கம் 15)

ஹலாவதுல் ஈமான்
 ✒ BY :- Moulavi
 S.L Abdhur Rahman Ghawsi

No comments:

Post a Comment