Popular Posts

Monday 9 May 2016

சூபியிசம் என்னும் அகத்தூய்மை

சூபியிசம் என்னும் அகத்தூய்மை
 ---------------------------------

 قد افلح من زكاها وقد خاب من دساها
 எவர் ஆத்மாவை பரிசுத்தமாக்கிக்கொண்டாரோ அவர் நிச்சயம் வெற்றியடைந்து விட்டார். எவர் அதனை களங்கப் படுத்திவிட்டாரோ அவர் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார். (அல்குர்ஆன்.91: 9, 10.)

 சூஃபியிசம் என்பது குர்ஆனின் மொழியில் தஸ்கியத் உள்ளத்தை தூய்மை படுத்துவதாகும். இது இப்போது மட்டுமல்ல எப்போதும் அவசியம் தான் என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகதான்

 சூரியன், அதன் பிரகாசம், சந்திரன், பகல், இரவு, வானம், அதனை அமைத்தவன், பூமி, அதனை விரித்தவன், ஆத்மா, அதனை செவ்வையாக்கியவன் இப்படி பத்து படைப்புகள் மீது சத்தியம் செய்து ஆத்மாவை பரிசுத்தமாக்கியவரே வெற்றியடைந்தவர். அதனை அழுக்காக்கிகொண்டவர் நஷ்டமடைந்தவரே.. என்று அழுத்தம்திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன். 91:1-10.)

 நபிமொழி அகராதியில் சூபியிசத்துக்கு இஹ்சான்- அழகாக்குவது என்று பெயர். ஈமான் என்றால் விசுவாசம்.- நம்பிக்கை கொள்ள வேண்டிய விசயங்களுக்குச் சொல்லப்படும். இஸ்லாம் என்றால், ஈமானின் வெளிப்படையான செயல்பாடுகள். இந்த இரண்டையும் அழகாக்குவது- செய்வதை திருந்தச்செய்வதுதான். இஹ்சான் (சூஃபியிசம்) என்றால், இது இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் அவசியம் தானே.

 ஈமானை,இஸ்லாத்தை அழகாக்குவது என்றால் எப்படி...?
 அதுதான் இஹ்சானுடைய வாழ்க்கை. வாழ்க்கையை வணக்கமாக வாழ்வது, வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இறைவிழிப்போடு கண்டுகளிப்பது, வாழ்வை அணுஅணுவாக அனுபவித்து, உயிர் வாழ்தலுக்கு அர்த்தமும் எழிலும் சேர்ப்பதாகும். இதை முஷாஹதா என்றுகூறுவர். இந்த விழிப்புநிலையான தரிசனவாழ்வு, உனக்கு மலரவில்லையெனில், அந்தப் பேரிறை அல்லாஹ், உன்னைக் காண்கிறான் என்ற விழிப்புணர்வுடன், நம்மைநாமே கண்காணித்து வாழ வேண்டும். இதை முறாக்கபா என்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு கணமும் இறைவன் தன்னைப் பார்க்கிறான் என்ற பக்தியுணர்வுடன் கழியும் போது, வாழ்க்கை வசந்தமாகும். உயிர் வாழ்தல் உன்னதமாகி உயர்வும், தூய்மையும் அடைந்து விடும்.
 அல்லாஹ் நம்மைப்பார்கிறான் என்று நம்பியிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் இதை உணர்ந்து பார்க்காததால், பாவங்கள் செய்யத் துணிகிறோம் இந்த நிலையில் நம்பிக்கையை அனுபவத்தில் காணும் முயற்சியை மேற்கொள்ளும் சூஃபியிசம், இஹ்சானுடைய வாழ்க்கையின் முதல் நிலையான தியான வாழ்க்கைக்குப் பயிற்சியளித்து, இரண்டாவது நிலையான இறைவிழிப்பு தரிசன நிலைக்கு ஒரு மனிதனை உயர்த்துகிறது. சூஃபி வழிக்குரு, இறைநம்பிக்கையை நிஜப்படுத்தி, தனது சீடர்களை, நிதர்சனமாக காணவைக்கிறார்.

 இந்த வகையில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களைப்பார்த்து இப்படி கூறினார்கள். எனது கிப்லா இங்கே என நினைத்தீர்களா...? நீங்கள் ருகூஃ செய்வதும், உங்களது உள்ளத்து பயபக்தியும் எனக்கு மறைவானது அல்ல. நிச்சயமாக நான் எனது முதுகுக்கு பின்பும் பார்க்கிறேன். புகாரி. 741.

 هل ترون قبلتى هاهنا والله ما يخفي علي ركوعكم ولا خشوعكم وإني إراكم وراء ظهري

 இப்படி சொன்னது மட்டுமல்ல அதை நிரூபிக்கவும் செய்கிறார்கள். தங்களுக்குபின் நின்று தொழும் தோழர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து தொழுகை முடிந்ததும், யார் இப்படி செய்தது... இனி இப்படி செய்யவேண்டாம் என திருத்துகிறார்கள். இது சஹாபாக்களுக்கு அச்சஉணர்வை உண்டாக்கி தங்களது செயல்களைசெம்மையாக்குவதற்கு வழிகோலின.

 இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், தொழுகைக்கு இப்போதைய இறுதிவடிவம் கிடைப்பதற்கு முன்பு ஒரு நபித் தோழர் தொழவருகிறார் அப்போது நாயகம் (ஸல்) அவர்கள். ருகூஃவு சென்று விடுகிறார்கள். நபியுடன் முழுமையாக ஜமாத்தாக தொழவேண்டும் என்ற பேரவாவால் உந்தப்பட்ட அந்த நபித்தோழர், வாசற்படியிலேயே தக்பீர் கட்டி, அங்கேயே ருகூஃவு செய்து அந்த நிலையிலேயே நடந்து வந்து கூட்டுத் தொழுகை வரிசையை வந்தடைந்தார். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும், யார் இப்படி செய்தது என கேட்டு
 زادك الله حرصا لا تعد
 “அல்லாஹ் உமக்கு ஆவலை அதிகப்படுத்துவானாக... இனி இவ்வாறு செய்ய வேண்டாம்.” (அபூதாவூத்.) என உபதேசித்தார்கள்.
 இப்படி அனேக சம்பவங்கள் உண்டு.

 இந்த பயிற்சி தொழுகைக்கு வெளியேயும் நடந்தன. அஸ்லை )உடலுறவின் போது கருத்தரிக்காமல் இருபதற்கான தற்காலிக கட்டுப்பாடு( பற்றி நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர். “நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். அப்போது குர்ஆன் இறங்கிக்கொண்டுதானிருந்தது.” அதாவது அது கூடாதொனில், நபியின் மூலம் அதற்கு தடை செய்யப்பட்டிருப்போம். என்றார்கள்.
 كنا نعزل والقرآن ينزل. متفق عليه

 இப்படி, வீட்டிலே, இரவிலே, இருட்டிலே நடைபெறும் செயல்கள் கூட, கவனிக்கப்படுகின்றது என்று அனுபவப்பட்ட தோழர்கள் எப்படி தவறு செய்யத் துணிவார்கள். இந்த தியான நிலையைத் தாண்டி தரிசனநிலைக்கு உயர்ந்து விட்ட நபித்தோழர்கள், கழிப்பறையில், படுக்கையறையில், ஆடையை உயர்த்துவதற்கும் யோசித்தார்கள். இதனால் அல்லாஹ் திருக்குர்ஆனில் 11: 5 வது வசனத்தை இறக்கி வைக்க வேண்டி வந்தது.
 الا انهم يثنون صدورهم ليستخفوامنه الا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون انه عليم بدات الصدور.11.5
 அவர்கள் தங்களை அல்லாஹ்வாகிய அவனிடமிருந்து மறைத்துக்கொள்வதற்காக, தங்கள் நெஞ்சங்களைச் சுற்றி மறைத்துக் கொள்கிறனர். என்பதை நபியே நீர் அறிந்து கொள்வீராக.! நித்திரைக்கு செல்லும் போது அவர்கள் தங்கள் ஆடைகளால், தங்களை மூடிக்கொள்ளும் சமயத்தில் தங்கள் நெஞ்சங்களில் அவர்கள் ரகசியமாக்குவதையும், அதற்கு மாறாக அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் நன்கு அறிகிறவன் என்பதை நீர் அறிந்து கொள்வீராக.. நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிகிறவன். (அல்குர்ஆன் 11; 5.)

 نزل كما رواه البخاري عن ابن عباس فيمن كان يستحى ان يتخلى او يجامع فيفضي الى السماء
 எனவே இந்தளவு பக்தி முத்தவேண்டாம். என அறிவுறுத்தப்பட்டது. இந்த முறையில் சூஃபி வழிகுருமார்களும் தங்களது கஷ்பின் வெளிப்பாட்டின் மூலம் கண்காணித்து தங்களுடைய சீடர்களுக்கு இறையச்சத்தையும் பயபக்தியையும் வளர்க்கிறார்கள்.

 قال غوث الاعظم رح لوانكشبت عورة مريدي با لمشرق وانا با لمغرب لسترتها (بهجة الاسرار)
 கிழக்கிலே இருக்கும் எனது சீடனின் ஆடை விலகினால் மேற்கிலிருந்து அதை நான் சரி செய்வேன் என்றார்கள் வலிகள் கோமான் குத்புல் அக்தாப் முஹ்யத்தீன் ஆண்டகை (ரலி) அவர்கள்.
 அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனுக்கு சென்றிருந்த போது, அங்கே அவரது விண்வெளியில் அணியும் விஷேச ஆடையில் கொஞ்சம் பழுது ஏற்பட்ட போது அதை பூமியில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் இங்கிருந்து கொண்டேஅந்த ஆடையை சரி செய்தனர். என்று செய்தி படித்தோம்.
 கௌதுல் அஃலம் (ரலி) அவர்கள் சொன்னது கூட தரையில் ஒருதிசையில் இருந்தவரின் ஆடையை, மறுதிசையிலிருந்து கொண்டு சரி செய்த விஷயம் தான்.
 ஆனால் விஞ்ஞானிகள் பூமியிலே இருந்து கொண்டு, ஆகாயத்திலிருப்பவருடைய ஆடையை சரி செய்த விசயம். விஞ்ஞான வினோதம் கேட்டு முக மலர்ச்சி அடைந்த அடியார்கள், மெஞ்ஞான அதிசயம் கேட்டு முகம் சுளிப்பதேன்.....?
 விண்வெளி வீரர்களின் இதயத்துடிப்பை ( லப்டப் ) ஓசையை பூமியில் அமைக்கப்பட்டிருக்கும் விண்வெளி தரைக்கட்டுப்பாட்டு அறையிலுள்ள மருத்துவர்கள் கேட்கும் போது, பூமான் நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களின் உள்ளத்து உணர்வை, ஓசையை உணர்ந்துகொள்ள முடியாதா..?
 இவ்வாறு இறைவன் தன்னைப் பார்க்கிறான் என்ற உண்மையை தனது குருவின் மூலம் அனுபவப்பட்ட சீடர்களின் சீலம் சிறக்க, சிறப்பான சூபி வழிமுறைகள் வகுக்கப்பட்டது. இதில் உலக ஆதாயம், சுயநலம், பேராசை, போன்ற இழிநிலை சுபாவங்களை , விட்டு விலக வேண்டுமென முக்கியமாக கட்டளையிடப்பட்டது.
 حب الدنيا راس كل خطياه. رواه ترمذي رزين
 எல்லா தவறுகளுக்கும் உலக ஆசையே தலையாய காரணம். (நபிமொழி.)
 இந்த வகையில், உலக ஆசை எல்லை மீறாமல், ஞானவழியில் பாதுகாக்கபடுகிறது. மரணத்தை மறந்து அதற்கு பிறகுள்ள வாழ்க்கையை எண்ணிப்பார்க்காமல் தான் தோன்றித்தனமாக வாழ முற்படும் மனிதனால் தான், தனி மனித ஒழுக்கமும், அமைதியும் கெடுகிறது. இதைவெறும் சட்டங்கள் போட்டு, திட்டங்கள் தீட்டி சரிசெய்யமுடியாது. தன்னைப் பற்றிய தத்துவ விசாரணை இந்த உலகைப்பற்றிய சரியான புரிதல்களை உருவாக்கும், ஆத்மீக அறிவும் அனுபவமும் தான் மனிதன் சுய உணர்வு பெற வழிவகுக்கும்.
 இந்த வகையில், சூஃபியிசம் துறவு நிலையை வலியுறுத்தவில்லை. உறவுகளை உண்மையாகவும் இயல்பாகவும் பாதுகாக்கிறது. இயற்கையான மனித உணர்வுகளை முற்றாக ஒழிக்கச் சொல்லாமல் அதற்காக அத்தனைக்கும் ஆசைப்படு என முழுமையாக திறந்தும் விடாமல், அவைகளை முறைப்படுத்துகிறது. கோபமும் ஆசையும் அறவே வேண்டாமெனில், அதை அல்லாஹ் மனிதனில் படைத்திருக்கவேண்டிய அவசியமென்ன....?

 ஆனால் அதற்காக கோபத்திற்கும் ஆசைக்கும் அடிமையானால் மனிதனை அவ்விரண்டும் மிருகமாக்கி ஏன் மிருகத்தைவிட கேவலமானதாக்கிவிடும். ஆகையால் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலையை, பராமரிக்கும் வகையில் ஆகுமான ஆசைக்கும், வேகத்திற்கும் சரியான வடிகால் அமைத்து கொடுத்து சமச்சீரான சிறந்தமானுட வசந்ததிற்கு சூஃபியிசம் வழி செய்கிறது. ஆசையை அன்பாக மாற்றி அன்பை அழியும் பொருளின் மேல் செலுத்தாமல், அல்லாஹ்வை கடினமாக காதலிக்கச் சொல்கிறது. இறைநேசம் மட்டும் ஒரு விசுவாசிக்கு ஏற்பட்டுவிட்டால், அவர் அல்லாஹ்வை அடைவது மிக சுலபமாகிவிடுகிறது.
 “தாகத்தை உண்டாக்கு, தண்ணீர் தானாக கிடைக்கும்” என்பார்,சூபி ஞானி மௌலானா ஜலாலுத்தீன் ருமி (ரஹ்) அவர்கள்.
 சூஃபியிசம் இந்த தாகத்தை உண்டாக்கி இவ்வுலகைத் தாண்டிச் செல்வதற்கு உதவுகிறது.

 நபிதோழர்களை அவர்களின் ஊணோடும், உயிரோடும் கலந்துவிட்ட அவர்களின் பிறந்தகம், மனைவி, மக்கள், சொத்து, சுகம் அனைத்தையும் விட்டு ஹிஜ்ரத் செய்யவைத்தது எது....? அவர்களுக்கு இருந்த இறைபக்தியும், நபிநேசமும், அல்லவா...! அல்லாஹ் ரசூலுக்காக எல்லாவற்றையும் இழக்கத் துணிந்தவர்களுக்குத் திரு மதினாஷரீப், அவர்கள் இழக்க முற்பட்ட அனைத்து செல்வங்களை மீட்டுக்கொடுத்தது.
 எவர் அல்லாஹ்வுடைய பாதையில் வெளியேறி விடுகிறாரோ, அவர் பூமியில் பல வசதியான பல இடங்களையும் சௌகரியங்களையும் அடைவார். (அல்குர்ஆன் 4;100.)

 சூபியிசம் இல்லாத மார்க்கம் வெளிச்சம் இல்லாத விளக்கு. வாசமில்லாத மலருக்கு அது ஒப்பானது.
 வலிகள் கோமான் முஹ்யித்தீன் (ரலி) அவர்கள், பக்தாதிற்கு வருகை புரிந்த போது, அவர்களின் வருகையை விரும்பாதவர்கள் தண்ணீர் நிரம்பிய செம்பைக்கொண்டு வரவேற்றார்கள். அதாவது பக்தாத் மாநகரம் மார்க்கம் நிரம்பி வழியும் ஒரு பட்டணம். இங்கு நீங்கள் வரவேண்டிய அவசியம் என்ன...? என்பதை அவர்கள் இவ்வாறு நூதனமாக உணர்த்தினார்கள். இதை உள்வாங்கி கொண்ட மகான் அவர்கள், அந்த தண்ணீர் நிரம்பிய செம்பிலே வாசனை மலர் ஒன்றை எடுத்துப் போட்டார்கள். தண்ணீர் சிந்தவில்லை மணம் பெற்றது. எனது வருகையால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. இங்கு மார்க்கம் இருக்கிறது, கல்வியும் இருக்கிறது. ஆனால் வாசமில்லை. எனது வருகையால் எல்லாம் மணம் பெறும் என்பதை அதன் மூலம் நுட்பமாக உணர்த்தினார்கள்.

 இன்று முஸ்லிம்கள் அதிகமிருக்கிறார்கள். மார்க்க சேவைகளும், அழைப்புப் பணிகளும் அதிகமாய் நடைபெறுகின்றன. ஆனால் யாரிடமும் பயபக்தியைக் காண முடியவில்லை. இக்லாஸ் என்ற உளத் தூய்மையும் இல்லை.

 ஹஜ்ரத் காஜா முயினுத்தீன் அஜ்மீரி (ரலி) குத்துபுல் ஹிந்த் என்னும்
 இறை நேசர் 99லட்சம் பேரை இஸ்லாத்தில் இணைத்தார். உலகெங்கிலும் இஸ்லாம் அதிகமாக பரவியது இது போன்று சூஃபி மரபில் வந்த ஞான குருமார்களின் அருள் ஞான உபதேசத்தால் தான்.
 அப்பொழுதெல்லாம் இஸ்லாம் அறிவுப்பூர்வமாக மட்டுமல்ல உணர்வுப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் நல்ல மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட்டன. ஆனால் இன்று இஸ்லாம் அறிவியலைக் கொண்டு மட்டுமே பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதில் நல்ல ரசனையும் ஈர்ப்பும் இருந்தாலும், இதயப்பூர்வமான பக்தி வடிவமான ஈடுபாடு இல்லை. ஏனெனில் விஞ்ஞானம், அறிவின் அழுக்கை அகற்றலாம். ஆன்மாவின் அழுக்கை அதனால் அகற்ற இயலாது.
 இன்னும் சொல்லப் போனால், அறிவு, சில சமயம் ஆன்மாவை அழுக்காக்கிவிடும். ஆத்மாவை அடையாத எந்த அழைப்பும், சீர்திருத்தங்களை கொண்டுவர முடியாது. இந்நிலையில், ஆன்மாவை தட்டி எழுப்புவது சூஃபியிசம் மட்டுமே.

 “உடலில் ஓரு தசைத்துண்டு இருக்கிறது. அது சீரடைந்து விட்டால், உடல் முழுவதும் சீராகிவிடும். அது கெட்டுவிட்டால் உடலே கெட்டுப்போய் விடும் அறிந்து கொள்ளுங்கள் அது தான் உள்ளம்.” என்றார்கள் ஏந்தல் நபி ஸல் அவர்கள். (புகாரி)

 ஆத்மாவை சீரமைக்கும் பணியை கையில் எடுத்துக்கொண்ட சூஃபியிசம், உடலை, உள்ளத்தை, உலகை சீரமைத்து அழகுபடுத்தி அமைதிபடுத்துகிறது. கோடி செல்வங்கள் இருந்தாலும் இல்லாததின் பக்கமே மனம் ஓடிப்போகிறது. சந்தோசம் வேண்டும் என்பதற்காக தான் நிம்மதியைத் தொலைக்கிறான். சந்தோசம் இருக்கும் இடத்தை தேடி நிம்மதியை தொலைக்காமல், இந்த நிலைகளை நீக்கி. இருக்கும் இடத்திலேயே சந்தோசத்தை பேரின்பத்தை பெறுவதற்க்கு சூஃபிகள் சூத்திரங்கள் சொன்னார்கள்.
 “உனக்கு மேலே வசதியாக இருப்பவனைப் பார்க்காதே... உனக்கு கீழே இருப்பவனைப்பார்... இல்லையெனில் உன்னிடமிருக்கும் பாக்கியத்தை துர்பாக்கியமாக பார்க்கநேரிடும்.” (முஸ்லிம்.)
 என்ற நபி மொழி உணர்ந்து சூஃபிவழிவந்தவர்கள் அதன் இலக்கணமாய் தங்கள் வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள்.
 “காலுக்கு செருப்பில்லை என்று வருந்தினேன். காலே இல்லாத மனிதனை பார்க்கும் வரை.” என்று மெய் சிலிர்ப்பார் பாரசீக கவி ஸிராஸி அவர்கள்.
 எவ்வளவு பொருட்கள் வீட்டில் இருந்தாலும் மேலும் மேலும் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பேராசையை உண்டாக்கும் பலவிதமான shopping mall மலிந்த இக் காலத்தில், தன்னிடம் இருக்கும் பொருட்களையும், வசதிகளையும் ஒரு பொருட்டாக கருதாமல், தகுதிக்கு மீறிய செலவுகள் செய்து பெருமைக்கு மாவிடிக்கும் இந்த காலத்தில், செல்வத்துள் சிறந்த செல்வமான போதுமென்ற மனதை மேலும் பக்குவப்படுத்தும் சூஃபியிசம், இந்த காலத்தில் மிகமிக அவசியமில்லையா..?

 வாழ்வு வாழ்வதற்கு; உலகம் அனுபவிப்பதற்கு; நூறு ரூபாய் உன்னிடம் இருந்தால் 99 ரூபா செலவு செய்து விடு.. ஏனெனில் எதிர்காலம் எதுவும் நிச்சயமில்லை. எனவே இப்போதே சந்தோசமாக enjoy பண்ணு.. என்று கடவுளில்லாத, மதமில்லாத ஒருயுகத்தை உண்டாக்க நினைத்து காய்களை நகர்த்தி கொண்டிருக்கும் லோகாதாயவாதிகளான ஸியோனிச சாம்ராஜ்யம் அல்லாஹ்வை, மறுமையை, உறுதியாக நம்பும் முஸ்லிம்களையும் சரித்து போட்டிருக்கிறது.
 இப்படி சகட்டுமேனிக்கு சல்லாப சொகுசு வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு விட்ட இந்த முஸ்லிம் சமுதாயத்தை, சூஃபிமார்கத்தின் மூலமே சரி செய்ய முடியும். அங்கு தான் அற்ப சுகத்தை தேடி அலையும் மனதிற்கு அல்வா கொடுத்து விட்டு அற்புத சுகத்தை, எல்லையில்லா பேரானந்தத்தை கொடுக்கும் காயகல்பம் இருக்கிறது.
 மனிதா நீ அனுபவிக்கும் சந்தோசம் சாவோடு நின்றுவிட்டால் அது சாபம். மரணத்தைவென்று சாஸ்வதமான சந்தோசத்திற்கு உன்னை இட்டுச்சென்றால், அது பேரின்பம். இந்த பேரின்ப ரஸவாதம் உன்னில் மறைந்து கிடக்கிறது.
 நீ காலத்தை கடந்து உண்மையில் மறைந்துவிடு.

 இவ்வுலக இன்பங்களில் பெரிய இன்பமாக மனிதன் கருதுவது பெண் மூலம் பெறும் சிற்றின்பத்தை தான். ஆனால் அதற்காக அவன் இழப்பது ஏராளம். இந்த இன்பமோ ஒரு சில வினாடிகள் மட்டுமே. இந்த சிற்றின்ப அலை அடித்து ஓய்ந்து விட்டால் அதற்கு பிறகு துன்பமே நிலைத்து விடுகிறது. இந்த சுகம் ஓரு சில வினாடியாக இல்லாமல் வாழ்வின் எல்லாநேரங்களிலும் கிடைத்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்..? ஆஹா..... என்னசுகம்...?
 قال ابراهيم بن ادهم نحن في عيش لو علم به الملوك لجلدنا عليه بالسيوف
 “நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் பேரின்ப சுகத்தை அரசர்கள் அறிந்து கொண்டால், வாட்களை கொண்டு எங்கள் மீது யுத்தம் செய்வார்கள்”என்றார் முடிதுறந்த மன்னர் இப்ராஹிமிப்னு அத்ஹம் ரஹ்மதுல்லா என்னும் இறைஞானி. இந்தப் பேரின்பத்துக்காக உன்னை, உலகை எதையும் இழக்க வேண்டியதில்லை. இருப்பதை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டால் போதும். தேர்ந்தெடுப்பதை விட்டு விட்டு வெறும் சாட்சியாக இருந்தால் மட்டும் போதும்.

 சூஃபி ஞானி புஹ்லூல் தானாவிடம், என்ன நலமா..? என வினவப்பட்டது. அதற்கு அவர், “யாருடைய நாட்டப்படி ஈருலகமும் நடைபெறுகிறதோ, அவனிடம் என்ன நலம் விசாரிப்பு” என்றார். ஓஹோ... அந்தளவுக்கு பெரியாளாகி விட்டீர்களா...? என திருப்பிக் கேட்கப்பட்டது. “பெரிய ஆளா..? ஒரு சராசரி ஆளாக கூட இல்லாமலாகி விட்டேன். இந்த ஈருலகமும் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது. எனக்கென்று இவ்வுலகில் தனியாக சுயமாக எந்த நாட்டமும் இல்லை. அவன் நாட்டப்படி எது நடந்தாலும் அதுவே எனது விருப்பமாக ஏற்றுக்கொள்வேன். அதனால் அவன் நாடுவதே எனது நாட்டமாகிவிட்டது” எனறார். இது தான் நபித்தோழர்கள் பெற்ற வெற்றியின் ரகசியம்.
 رضي الله عنهم ورضو عنه
 அல்லாஹ் அவர்களைப்பற்றி திருப்தி அடைந்தான். அவர்களும் அல்லாஹ்வைப்பற்றி திருப்தி அடைந்தார்கள். (அல்குர்ஆன் 98;8.)
 சொர்கத்தில் கிடைக்கும் பெரிய சுகம் இறைதரிசனம். அதற்கு பிறகு தான் “நான் உங்களைப்பற்றி திருப்தி கொண்டேன். இனி ஒருபோதும் வெறுக்க மாட்டேன்.” என்ற இறைவனின் அறிவிப்பு வெளியாகும். இந்த மகத்தான ரிளா பற்றிய அறிவிப்பு நபித்தோழர்களுக்கு இந்த உலகத்திலேயே கிடைத்துவிட்டது என்றால் நீயும் அவர்களைப் போல உன்னையல்ல- உனது சுய விருப்பு வெறுப்பை மட்டும் அழித்து மரணத்திற்கு முன்பே மரணித்தால், இவ்வுலகமே சொர்க்கமாகி இங்கேயே தரிசனமும், இறைதிருப்தியை பற்றிய அறிவிப்பும் உனக்கு இங்கே வெளியாகும்.
 மண்ணையும் விண்ணையும் அறிந்து, உலகை அனுபவிக்க நினைத்து, அதற்காக எல்லாவற்றையும் அழித்து, எதைப் பெற வேண்டுமோ அதைப் பெற முடியாமல் அவஸ்தைபட்டுக் கொணடிருக்கும் நீ உன்னை மட்டும் அறிந்தால் நிரந்தரமாக எல்லாவற்றையும் அமைதியான அமைதியில். ஆனந்தமாக அனுபவிக்கலாம்

 வல்ல அல்லாஹ்தாலா நாயன் நம் அனைவரையும் அந்த மீட்சி பெற்றவர்கள்
 கூட்டத்தில் சேர்த்து நல் அருள் புரிவானாக ஆமீன்!!! யா றப்பல் ஆலமீன்!!!!

13 hrs · Public
 · More

No comments:

Post a Comment