Popular Posts

Wednesday 6 January 2016

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

 ஹாமீம்!
 தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுல்லா ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மானிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன. அல் குர்ஆன் 44:1, 2, 3, 4.
 இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா? இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழி தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்து நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாம முல்லா அலி காரி (ரஹ்) கூறுகிறார்கள். (மிஷ்காத் நபி மொழி எண்: 1305 விரிவுரை மிர்காத்).

 அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடம் கேட்டு விட்டு கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும். நபிமொழி. பதிவு: பைஹகி. ஆதாரம் மிஷ்காத்: 1302.
 மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பார்கள். “மாதங்களில் ஷஃபான் மட்டும் நீங்கள் நோன்பு பிடிக்க மிகவும் விரும்புவதேன்?” என்று நான் அவர்களிடம் கேட்டேன் அதற்கு அண்ணலார் (ஸல்); “ நிச்சயமாக அதில் தான் அல்லாஹ் அந்த வருடம் மரணிப்பவர்களை தீர்மானிக்கிறான். என்னைப்பற்றிய தீர்மானம் வரும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்.” என எடுத்துரைத்தார்கள். பதிவு அபுயஃலா. ஆதாரம் அத்தர்கீப்: 1540.
 இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இன்பு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிப்பார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.
 “வானம் பூமி படிப்பதற்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் விதிகளை எழுதி விட்டான்.” நபிமொழிப் பதிவு. முஸ்லிம்: 2653.
 குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு கேள்விக்கு நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளிக்கையில்; “நீங்கள் சந்திக்கப்போகும் எல்லா விஷயம் குறித்தும் (விதி) எழுதிய பேனா (மை) உலர்ந்து விட்டது. செய்யுங்கள் அல்லது செய்யாமல் போங்கள்” என்று எச்சரித்தார்கள். விதி என்பது இவ்வுலக கட்டமைப்பிற்கான அல்லாஹ் போட்ட பிளான் (திட்ட வரைவு) ஆகும். மனிதன் போட்ட பிளான் மாறும். அல்லாஹ் போட்ட பிளான் மாறாது. முடிவெடுக்கப்பட்ட இத்தீர்மான்கள் யாவும் “லவ்ஹுழ் மஹ்பூழ்” (பாதுகாக்கப்பட்ட பேழையில்), முறையாக முன்னமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் இந்த தீர்மானகளை நடைமுறைப் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான கழா கத்ரு தீர்மானங்களை நகல் எடுக்கும் பணி அதாவது லவ்ஹுல் மக்பூழிலிருந்து பிரதியெடுக்கும் பூர்வாங்க வேலைகள் இந்த பராஅத் இரவில் தொடங்கி லைலதுல் கத்ருடைய இரவில் நிறைவு பெறும். இந்த இறை திட்ட மாதிரி வடிவங்களை அது சம்பந்தப்பட்ட இறை மேலதிகாரிகளான வானவர்களிடம் புனித லைலதுல் கத்ருடைய இரவில் ஒப்படைக்கப்படும். இந்த வகையில் தான் இந்த இரண்டு இரவுகளில் காரியங்கள் தீர்மானிக்கப்பட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 கழா கத்ரு மாறுமா? மாறாது. ஆனால் சில விஷயங்களை அல்லாஹ் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறான். அடியான் கேட்டால் (துஆ செய்தால்) கொடுக்கலாம். அல்லது இன்ன நன்மையான செயல் அவன் புரிந்தால் இந்த பாக்கியம் அவனுக்கு வழங்கலாம். அவனது ஆயுளை நீடிக்கலாம். இரண பாக்கியம் கூடுதலாக கொடுக்கலாம். அல்லது குறைத்து விட வேண்டியதுதான், அவன் தர்மம் செய்தால் அவனுக்கு வர வேண்டிய பேராபத்துக்களை, துர்மரணகளை, துர்முடிவுகளை தடுக்கலாம் என இறைவன் தீர்மாநித்திருப்பான். அதன் படி நடந்தால் எல்லா காரியங்களும் சு(ல)பமாக நடந்தேறும். இல்லையெனில் மாறாகத்தான் நடந்தேறும். இதுமாதிரியான கழா கத்ருக்கு “கழா முஅல்லக்” என்று பெயர். இது மேற்படி விதத்தில் மாறும். “கழா முப்ரம்” முடிவான இறை விதி மாறாது

 மேலும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அருளினார்கள்., “அல்லாஹ்வின் இல்லத்தில் கூட்டமாக அமர
 ்ந்து குர்’ஆன் ஓதினால் அவர்கள் மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள்- ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும். மலக்குகள் அவர்களைச் சூழ்ந்துகொள்வர். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக எடுதுக்கூருகிறான்”. பதிவு- முஸ்லிம்: 2699. அபூ தாவூத்: 1455.
 மலக்குகள் இறங்கி இருக்கும் மஜ்லிஸில்- கூட்டத்தில் துஆக் கேட்டால் அதை அல்லாஹ் கபூலக்குவான். “சேவல் கூவும் சப்தம் கேட்டால் நீங்கள் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள் ஏனெனில் அது மலக்கைக்கண்டு தான் கூவும்”. நபி மொழி புகாரி: 3303. முஸ்லிம்: 2729. இந்த நபி மொழி மலக் இருக்கும்போது துஆச் செய்வதை பரிந்துரைக்கின்றது என்றால் அப்போது அது கபூலாகும் என்பதால்தானே!. “குர்ஆன் ஒதும் மஜ்லிஸில் மலக்குகள் இறங்குவர்” என்று புகாரி ஷரீபிலும் முஸ்லிம் ஷரீபிலும் ஹதீஸ் வந்துள்ளது. குர்ஆன் ஓதிய பின்னர் மலக்குகள் இருக்கும்போது துஆக் கேட்டால் அது கபூலாகும் என்றால் பத்து முறை குர்’ஆன் ஓதியதற்குச்சமமான யாஸீன் ஓதி துஆச் செய்தால் அது கபூல் ஆகாத? “ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் யாஸீன் ஆகும். எவர் யாஸீனை ஒரு முறை ஓதுவாரோ அவருக்கு பத்து முறை குர்ஆன் ஓதிய நன்மையை அல்லாஹ் எழுதிவிட்டான். (நபி மொழி. திர்மிதி: 2887).
 “எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நபி மொழி. தாரமி: 3418. மிஷ்காத்: 2171).
 “யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் (தாரமி) ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் (மக்ரிப்) துஆவை நாம் கேட்டு வருகிறோம்.
 மிஷ்காத் ஹதீஸ் எண் 1308. விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது., ஹழ்ரத் உமர பின் கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின் வரும் துஆவை ஓதி வந்தார்கள்
 அல்லாஹும்ம இன் குந்த கதப்தனா அஷ்கியாஅ /பம்ஹுஹு வக்துப்னா சுஅதாஅ வஇன் குந்த கதப்தனா சுஅதாஅ /பஅஸ்பித்னா /பஇன்னக தம்ஹு மா தஷாஉ வதுஸ்பிது வஇன்தக உம்முல்கிதாப்
 (யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).
 இந்த துஆவை ஷாஅபான் 15ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்)
 பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம்.
 “ஒவ்வொன்றுக்கும் தவணை (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது எனினும் அல்லாஹ் அவன் நாடியதை (அதில்) அழித்து விடுவான். (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது” (அல் குர்ஆன். 13:38, 39)
 “எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளை சேர்த்துக்கொள்ளட்டும்” நபி மொழி. புகாரி: 5986. முஸ்லிம்: 1982. சில அறிவிப்புகளில்., “அல்லாஹுவைப் பயந்து கொள்ளட்டும் தனதுபெற்றோரை மதித்து அவர்களுக்கு நன்மை செய்யட்டும்” என்று கூடுதலாக வந்துள்ளது. இந்த நபிமொழியில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.
 “அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) தவணையை (வாழ்நாளைக்குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று 6:2-ல் கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு (அஜலை) தவணையை குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை (மறுமையில்) சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும். ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) வழங்கினார்கள் (தப்ஸீர் குர்துபி: 1339 விரிவுரை)

 அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்., ஒருநாள் இரவு அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் தேடி அலைந்த
 போது இறுதியில் அவர்கள் ஜன்னத்துல் பகியி (மதீனா கபுறுஸ்தானி)ல் நின்று உருக்கமாக துஆச் செய்து கொண்டிருந்தார்கள். எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம். நான் (எனது) உலக நலனில் அக்கறை கொண்டு (தேடிவந்து)ள்ளேன். ஆனால் நாயகமே தாங்களோ (மக்கள் நலனுக்காக) உங்கள் இறைவனிடம் தேவையாகி நிற்கிறீர்களே! (என மெய்சிலிர்த்தேன்) அங்கிருந்து வேகமாக கிளம்பி எனது அறைக்கு வந்து சேர்ந்தேன் வேகமாக நடந்து வந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது எனக்குப்பின் எனது இல்லம் வந்து சேர்ந்த சர்தார் நபி (ஸல்) அவர்கள் இதைக் கவனித்து விட்டு, இதென்ன ஆயிஷா! இப்படி மூச்சு வாங்குது? என வினவினார்கள். அதற்கு, நான் அவர்களை காணமல் தேடி அலைந்து இறுதியில் ஜன்னத்துல் பகியில் கண்டு பிடித்து பிறகு மிக வேகமாக இல்லம் திரும்பிய கதையை அவர்களிடம் சொன்னேன். “என்ன ஆயிஷா! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து இது ஷ/பான் 15-வது இரவு. இதில் அல்லாஹ் அடியார்களுக்கு விடுதலை அளிக்கிறான் எனக்கூறினார்கள்”. (எனவே அடியார்களுக்கு மன்னிப்பும் நரக விடுதலையும் கிடைக்க துஆ செய்வதற்காக கபுறு ஜியாரத்திற்கு வந்தேன்). ஆதாரம். பைஹக்கி 3837 இதிலிருந்து பராஅத் இரவைப்போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத்தக்கது என்பதும் புரிகிறது அல்லவா

 பராஅத் இரவின் இபாதத்- இறைவணக்கம்:
 அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றாகள்., கபுற் ஜியாரத் முடித்து விட்டு இல்லம் திரும்பிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், ஆயிஷா! இன்றிரவு நின்று வணங்க எனக்கு அனுமது அளிப்பீர்களா? என்று என்னிடம் வினவினார்கள் அதற்கு நான், “எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம் தாங்கள் என்னுடன் எனக்கருகே இருப்பதைத் தான் விரும்புகிறேன் ஆனாலும் உங்களது விருப்பத்தை தேர்வுசெய்கிறேன்” எனக்கூறினேன் உடன் எழுந்து தொழ ஆரம்பித்துவிட்டார்கள் நீண்ட நெடிய நேரம் தொழுகையில் சுஜீதிலேயே இருந்தார்கள். எந்த அளவு நீளமான சுஜீது செய்தார்கள் என்றால் நான் அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டு விட்டதோ என்று கருதிவிட்டேன். எழுந்து போய் அவர்களின் பாதத்தை தொட்டபோது அதில் உயிர்த்துடிப்பு இருந்தது. அப்போது தான் எனக்கு சந்தோசமே வந்தது சுஜீதில் அவர்கள் ஓதியதை நான் கவனித்து கேட்டேன்., “அஊது பிஅ/ப்விக மின் இகாபிக வஅஊது பிரிழாக்க மின் சகத்திக வஅஊது பிக மின்க இலைக்க ஜல்ல வஜ்ஹுக லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அந்த கமா அஸ்னைத்த அலா ந/ப்ஸிக”
 (யா அல்லாஹ் உனது மன்னிப்பைக்கொண்டு உனது தண்டனையை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உனது திருப்பொருத்தத்தை கொண்டு உனது கோபத்தை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உன்னைக்கொண்டு உன்னைவிட்டும் உன்னளவில் பாதுகாபுத்தேடுகிறேன் உனது திருமுகம் மகத்தானது நீ உன்னை புகழ்ந்ததைப்போல நான் உன்னைப் புகழ இயலாதவனாக இருக்கிறேன்)
 நான் இவ்வாறு செவிமடுத்ததை காலையில் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன் அதற்கு அவர்கள், ஆயிஷா! இதைக் கற்றுக்கொண்டாயா (நல்லது) இதைக் கற்று, கற்றுக்கொடுங்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள், இவ்வாறு இதை கற்றுக்கொடுத்து இதை சுஜூதில் திரும்பத் திரும்ப மடக்கி மடக்கி கூறிக்கொண்டிருக்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள்.
 ஆகவே, இதை நாமும் கற்று மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்போம். பராஅத் இரவில் சுஜுதில் இருந்துகொண்டு இதை நாமும் கூறிக்கொண்டிருப்போம்

 பராஅத் நோன்பு:
 இதற்கு மூன்று விதமான சிறப்புகள் இருக்கிறது
 1, இது ஷ/பான் மாதத்தின் நோன்பு. பொதுவாக, “நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு அடுத்து ஷ/பானில் தான் அதிகம் நோன்பு பிடிப்பார்கள். சில சமயம் ஷ/பான் முழுதும் நோன்பு வைப்பார்கள்” புகாரி: 1969 முஸ்லிம்: 1156
 “ரமழானையும் ஷ/பானையும் தவிர தொடர்ந்து இரண்டு மாதம் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லை” என்று உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் திர்மிதி: 1836
 ஷ/பானில் நீங்கள் நோன்பு பிடிக்கும் அளவு மற்ற மாதங்களில் நீங்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லையே? என, உசாமா (ரலி) அவர்கள் கேட்டபோது, “ரஜபுக்கும் ராமழனுக்கும் இடையில் இருக்கும் இந்த (ஷ/பான்) மாத(த்தின் மகத்துவ)த்தை மக்கள் உணராமல் உள்ளனர். இது அகில உலக இரட்சகனிடம் அமல்கள் உயர்த்தப்படும் ஒரு மாதம். நான் நோன்பளியாக இருக்கும்போது எனது அமல்கள் உயர்தப்படுவதை நான் விரும்புகிறேன்”. என உத்தம நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். நசயி: 201/4.
 2, இது அய்யாமுல் பீழுடைய (13, 14, 15, ஆகிய வெளுப்பு) நாட்களில் ஒன்று. இந்த மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது சுன்னத் ஆகும். “ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” நபிமொழி புகாரி: 1979. முஸ்லிம்: 1159. “நாயகம் (ஸல்) அவர்களின் இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வசனத்தை குர்ஆனில் அல்லாஹ் இறக்கினான்” என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “எவரேனும் ஒரு ந
 ன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. (அல் குர்ஆன் 6:160).
 (அதாவது 3 X10 = 30 X 12 = 360) (திர்மிதி: 762 நசயி: 219/4)
 3, பராஅத் நோன்பு. நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்., “ஷ/பான் 15-வது இரவு வந்தால் நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு பிடியுங்கள்” (இப்னு மாஜா: 1388)
 இப்படி, சாந்த நபி (ஸல்) அவர்கள் முழுமையாக அல்லது அதிகமாக நோன்பு வைக்கும் ஷ/பான் மாதத்தின் வெளுப்பு தினமான 15ல் வரும் பராஅத் நோன்பு பொதுவாகவும் குறிப்பாகவும் நோன்பு வைப்பது ஏற்றம் நிறைந்த நபி மொழியும் வழியும் ஆகும்.

 பராஅத் இரவில் பாக்கியமிழக்கும் பாவிகள்:
 “ஷ/பான் 15-வது இரவு அல்லாஹ் தனது படைப்புகளுக்கு பிரசன்னமாகி அவனது அனைத்து அடியார்களையும் மன்னிக்கிறான்” என்று அறிவித்த அண்ணலார் (ஸல்) அவர்கள் இதில் விதி விளக்கானவர்களையும் பட்டியலிடுகிறார்கள் அவர்கள் வருமாறு:-
 1, இறை மறுப்பாளர்கள்
 2, இறைவனுக்கு இணை வைப்பவர்கள்
 3, விரோதம் கொண்டிருப்பவர்கள்
 4, தற்கொலை செய்தவர்கள்
 5, உறவுகளைத் துண்டித்தவர்கள்
 6, தாய் தந்தையருக்கு மாறு செய்து நோவினை செய்தவர்கள்
 7, குடிகாரர்கள்
 8, கரண்டைக்குகீழே உடை உடுத்தி இருப்பவர்கள்
 9, சதிகாரர்கள்
 10, சூனியம் செயவபர்கள்
 குறிப்பு:
 >> பராஅத் சம்மந்தமான அதிகமான அறிவிப்புகள் தனிப்பட்டமுறையில் ளயீ/பானதுதான். என்றாலும் அதிகமான பல அறிவிப்பாளர்கள் தொடர்களில் இது அறிவிக்கப்படுவதால் இது பலமானதாகிவிடும் என்று சட்ட மேதைகளான /புகஹாக்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களான முஹத்திஸீன்களும் கூறுகிறார்கள்.
 >> பராஅத் சம்பந்தமான ஹதீஸ்கள் பத்து நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது
 >> பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல்செய்வது கூடும் என்பது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் கருத்து
 >> இதல்லாமல் காலங்களில் சிறந்த காலத்தவர்களான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் காலமுதல் இன்று வரை இந்த பராஅத் இரவு விசேஷம் அனுஷ்டிக்கப்பட்டு இந்த இரவில் அதிகமாக இபாதத் செய்து முக்கியத்துவப்படுத்துவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
 ஆகவே இதை பித்அத் என்று பிதற்றுவதோ, இது அடிப்படை அற்ற விசயம் என்று ஒதுக்கித்தள்ளுவதோ அர்த்தமற்றதாகும். எனவே சரியான விஷயம் என்னவென்றால் இது சிறப்பிற்குரிய ஒரு இரவாகும். இதற்கு தனிப்பட்ட ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இதில் இரவு விழித்து இபாதத்தில் ஈடுபடுவது மிகப்பெரும் கூலியை பெற்றுத்தருவதாகும்.
 அல்லாமா முல்லா அலி காரி அவர்கள் தனது மிர்க்காத் (மிஷ்காத் விரிவுரை) யில் கூறுகிறார்கள்,. லயீ/பான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வது கூடும். பராஅத் இரவில் விஷேசமாக இபாதத் செய்வதை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. அந்த ராத்திரியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் செய்வதைத்தான் மறுக்கிறார்கள்.
 “(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” (அல் குர்ஆன்: 96:9,10)
 காண்க: மிஷ்காத் ஹதீஸ் எண்: 1308 விரிவுரை மிர்காத்
 பராஅத் போன்ற சிறப்பான இரவுகளில் தொழுகின்ற அடியார்களை தடைசெய்கின்றவர்களைக் குறித்து அன்றே அல்லாஹ் அடையாளப் படுத்தி இருப்பதைப் பார்த்தீர்களா?
 வஸ்ஸலாம்.

 ஷஃபானின் சிறப்பு

 கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்.

 ஷஃபான் என்ற சொல் ‘ஷிஃபுன்‘ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். கணவாய் என்பது இதன் பொருள். இந்த மாதத்தில் நன்மைகள் அதிகளவில் கிட்டுவதால் இப்பெயர் வழங்கலாயிற்று. கணவாய்கள் மலைக்குச் செல்வதற்கு வழியாக இருப்பது போன்று இந்த மாதம் நன்மைகளையும், இறையருளையும் அதிகளவில் பெறும் வழியாக இருக்கின்றது.

 ஹளரத் அபூ உமாமா பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்,

 “ஷஃபான் மாதம் வந்தால் உங்கள் மனங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்! அந்த மாதத்தில் உங்கள் எண்ணங்களையும் அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறிக்கொண்டேயிருப்பார்கள்“

 அன்னை ஆயிஷா ஸித்திகா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்,

 ஷஃபான் மாதத்தில் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாங்கள் கூறும் அளவு தொடர்ந்து நோன்பு பிடிப்பார்கள். இதன்பின் நோன்பு நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் பேசிக்கொள்ளும் வரை நோன்பு நோற்காமலிருப்பார்கள். றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்பார்கள்.

 ஹளரத் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,

 “அல்லாஹ்வின் திருத்தூதரே! நீங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நான் காணவில்லையே! என்றேன்“. அதற்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். “இது றஜபுக்கும்,றமழானுக்கும் இடைப்பட்ட மாதமாகும். இதில் மக்கள் மதி மயக்கத்துடன் இருக்கின்றனர். ஆனால் இந்த மாதத்தில் செய்யப்படும் அமல்கள் அல்லாஹ்வின் சமுகத்திற்கு உயர்த்தப்படுகின்றன. எனது அமல்கள் உயர்த்தப்படும்போது நான் நோன்பாளியாக இருக்
 கவே விரும்புகின்றேன்“. இதனை இமாம் நஸஈ பதிவு செய்திருக்கின்றார்கள்.

 அன்னை ஆயிஷா ஸித்திக்கா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்,

 றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் றமழான் தவிர்ந்த வேறு எந்த மாதத்திலும் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றதையும், ஷஃபான் அல்லாத வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதையும் நான் கண்டதில்லை. மற்றுமொரு அறிவிப்பில் ஷஃபான் முழுவதும் நபியவர்கள் நோன்பு நோற்பார்கள். இதனை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரும் அறிவித்துள்ளார்கள்.

 முஸ்லிமில் வரும் அறிவிப்பில்,

 சில நாட்கள் தவிர்த்து ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்பார்கள் என்று வந்துள்ளது. இது முந்திய ஹதீதுக்கு தப்ஸீராக அமைந்துள்ளது. ஷஃபான் முழுவதும் என்றால் ஷஃபானில் அதிகமான நாட்கள் என்று பொருளாகும்.

 புவியில் இருக்கும் முஸ்லிம்கள் இரு தினங்களை பெருநாட்களாக எடுப்பதுபோன்று வானத்து மலக்குகளுக்கு இரண்டு இரவுகள் பெருநாட்களாக உள்ளன. வானத்து மலக்குகளுக்கான பெருநாள் பராஅத் இரவும், அதாவது ஷஃபான் பதினைந்தாவது இரவும், லைலத்துல் கத்றுடைய இரவுமாகும்.

 புவியில் வாழும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளையும், ஹஜ்ஜுப் பெருநாளையும் கொண்டாடுகின்றனர். இதனால்தான் ஷஃபான் பதினைந்தாவது இரவை மலக்குகள் பெருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

 அல்லாமா ஸுப்கி தனது தப்ஸீரில் இப்படிக் கூறுகின்றார்,

 இந்த இரவில் செய்யும் அமல்கள் வருடம் முழுவதும் செய்யும் குற்றத்திற்கு பரிகாரமாக உள்ளது. ஜும்ஆ இரவு அந்த வாரத்தில் செய்யும் குற்றங்களுக்கு பரிகாரமாக இருக்கும். லைலத்துல் கத்று வருடம் முழுவதிற்குமான குற்றங்களுக்கு பரிகாரமாக இருக்கும்.

 இந்த இரவுகளை வணக்கத்தால் உயிர்ப்பிப்பதனால் இப்பரிகாரங்களைப் பெற முடியும். இதனால் இந்த இரவுக்கு பரிகாரமளிக்கும் இரவு என்று ஒரு பெயர் உண்டு. உயிர்ப்பிக்கும் இரவு என்றும் கூறப்படுகின்றது.

 “பெருநாள் இரவையும் பராஅத் இரவையும் வணக்கத்தால் உயிர்ப்பிப்பவரின் உள்ளம் மற்றவர்கள் இதயங்கள் மரணிக்கும் வேளையில் உயிர் பெற்றிருக்கும்“ என்ற ஹதீஸை மர்பூஆனதாக (அறிவிப்பாளர் பட்டியல் நபியவர்கள் வரை சேர்ந்ததாக) இமாம் முக்திரி அறிவித்துள்ளார்கள்.

 பராஅத் இரவுக்கு ‘ஷபாஅத்திற்குரிய இரவு‘ என்றும் ஒரு பெயர் உண்டு. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஷஃபான் பதின்மூன்றாவது இரவு தனது உம்மத்திற்குரிய ஷபாஅத்தை அல்லாஹ்விடம் கேட்டார்கள். மூன்றில் ஒரு பகுதியினருக்குரிய ஷபாஅத்தை வழங்கினான். பதினான்காவது இரவும் அல்லாஹ்விடம் கேட்டார்கள். மூன்றில் இரண்டைக் கொடுத்தான். பதினைந்தாவது இரவும் கேட்டார்கள். எல்லோருக்கும் ஷபாஅத் செய்யும் பாக்கியத்தை வழங்கினான். ஆனால் ஒட்டகத்தைப் போன்று அல்லாஹ்வின் றஹ்மத்தை விட்டும் தூரமாக விரண்டு ஓடியவனைத் தவிர அதாவது குற்றம் புரிந்து தானாகவே அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவனைத் தவிர,

 ‘பாவ மன்னிப்புக்குரிய மாதம்‘ என்று இதற்கு ஒரு பெயர் உண்டு. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்,

 “ஷஃபான் பதினைந்தாவது இரவன்று அடியார்களுக்கு அல்லாஹ் தரிசனம் வழங்கி, இரு மனிதர்கள் தவிர்த்து ஏனையவர்களுக்கு மன்னிப்பு வழங்குகின்றான். ஒருவர் முஷ்ரிக், மற்றவர் குரோதம் உள்ளவன்“. இதனை இமாம் அஹ்மத் அறிவிக்கின்றார்கள்.

 இதற்கு ‘நரக விடுதலைக்குரிய இரவு‘ என்றும் கூறப்படுகின்றது.

 ஹளரத் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுமாவைத் தொட்டும் இமாம் இப்னு இஸ்ஹாக் அறிவிக்கின்றார்கள்,

 “என்னை ஓர் தேவைக்காக அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இல்லத்திற்கு றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அனுப்பி வைத்தார்கள். றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஷஃபான் பதினைந்தாவது இரவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் வந்துள்ளேன். அதனால் என்னை அவசரமாக அனுப்பி விடுங்கள்“ என்று அன்னையவர்களிடம் கூறினேன்.

 “அனஸே! அமரும்! ஷஃபான் பதினைந்தாவது இரவின் மகிமை பற்றிய ஹதீதை உமக்கு நான் கூறுகின்றேன்“. அந்த இரவு றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் எனது முறைக்கான இரவாக இருந்தது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் என்னிடம் வந்து எனது படுக்கையில் சைனித்தார்கள். இரவில் விழித்துப் பார்த்தபோது நபியவர்களைக் காணவில்லை.

 நபியவர்கள் அவர்களின் கிப்தி அடிமையின் இல்லம் சென்று விட்டார்களோ என்று மனதில் எண்ணிக் கொண்டேன். நான் வீட்டிலிருந்து வேளியேறி பள்ளிவாசல் சென்றேன். அப்போது எனது கால் நபியவர்களில் பட்டது. நபியவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்.

 “எனது உடலும், கற்பனையும் உன்னை ஸஜதா செய்கின்றன. எனது இதயம் உன்னை ஈமான் கொண்டுள்ளது. இதோ எனது கரங்கள் இருக்கின்றன. இதனால் எனது உடலில் எதுவித குற்றத்தையும் நான் புரிந்ததில்லை. மகத்தான நாயனே! மகத்தான ஒவ்வொன்றும் உன்னிடமிருந்தே எதிர்பார்க்கப்படுகின்றன.“

 “என் மீதுள்ள பாவத்தை மன்னித்தருள்வாயாக! இதோ எனது முகம் உன்னை ஸஜதா செய்கின்றது. அதனை நீதான் படைத்தாய்!
 அதனை உருவமைத்து அதில் காதையும், கண்ணையும் படைத்தாய்!“ பின் தலையை உயர்த்தியபின் இவ்வாறு கூறினார்கள்.

 “யாஅல்லாஹ்! ஷிர்க்கிலிருந்து நீங்கிய பரிசுத்தமான உன்னை அஞ்சும் இதயத்தை எனக்குத்தா! (உன்னை) மறுக்கக்கூடியதும், மூதேவித்தனமானதுமல்ல!“ பின் மீண்டும் ஸுஜுதுக்குச் சென்று இவ்வாறு கூறுவதைக் கேட்டேன்.

 “உனது திருப்பொருத்தத்தைக் கொண்டு உனது கோபத்திலிருந்தும், உனது மன்னிப்பைக் கொண்டு உனது தண்டனையிலிருந்தும், உன்னைக் கொண்டும், உன்னில் நின்றும் பாதுகாவல் தேடுகின்றேன். உன்னைப் பற்றி நீ முழுமையாக கூறியதுபோன்று என்னால் முழுமையாக உன்னைப் புகழ முடியவில்லை. எனது சகோதரர் தாவூத் கூறியது போன்றே நானும் கூறுகின்றேன்.

 எனது முகத்தை எனது எஜமானனுக்காக மண்ணில் புரட்டுகின்றேன். எனது எஜமானே! எனது முகத்தை அவனுக்கு முன் மண்ணி்ல் புரட்டுவதற்கு அது தகுதியானதுதான்“.

 பின் தலையை உயர்த்தினார்கள். எ“னது தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் திருத்தூதரே! நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள். நானோ அங்கே (வீட்டில்) தனித்து விட்டேனே!“ என்றேன்.

 நபியவர்கள் நவின்றார்கள்,

 “ஹுமைறா! இது ஷஃபான் பதினைந்தாவது இரவு என்பதை நீ அறியவில்லையா? இந்த இரவில் பணூகிலாப் கோத்திரத்தாரின் ஆட்டு மந்தைகளின் முடியளவு மனிதர்களுக்கு அல்லாஹ் நரக விடுதலை வழங்குகின்றான். ஆறு நபர்களைத் தவிர,

 குடிபோதையில் இருப்பவன் 02. பெற்றோரை வேதனை செய்பவன் 03. விபச்சாரத்திலீடுபடுபவன் 04. குடும்பத்தை வெட்டி நடப்பவன் 05. யுத்தத்தில் பின்வாங்கி ஓடுபவன் 06. கோள் சொல்லித் திரிபவன்“
 மற்றொரு அறிவிப்பில்,

 கோள் சொல்லித் திரிபவன் என்பதற்குப் பதிலாக உருவச் சிலை செதுக்குபவன் என்றுள்ளது.

 “பங்கீடு செய்வதும், விதியைத் தீர்மானிப்பதுமான இரவு“ என்றும் கூறப்படுகி்ன்றது.

 ஹளரத் அதா இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,

 ஷஃபான் பதினைந்தாவது இரவன்று மலக்குல் மௌத் இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாமை அழைத்து ஷஃபானிலிருந்து எதிர்வரும் ஷஃபான் வரையிலான காலப்பகுதிக்குள்ள மரணிக்க இருப்பவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்படும்.

 ஒருவர் மரம் நாட்டுவார், திருமணம் முடிப்பார், உயர் கட்டிடம் கட்டுவார். ஆனால், அவர் பெயர் மரணிப்பவரின் பட்டியலிலிருக்கும். மலக்குல் மௌத் ஆகிய இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவரின் உயிரை எடுப்பதற்கு, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்

No comments:

Post a Comment