Popular Posts

Wednesday 6 January 2016

வஸீலாத் தேடலாமா (தொடர் 02).

வஸீலாத் தேடலாமா?

 தொடர் கட்டுரை(தொடர் 02)

 நபீ(ஸல்) அவர்களிடம் வந்து கண்ணொளி மீண்டும் வருவதற்கு “துஆ” செய்யுமாறு கேட்ட ஸஹாபியிடம் “நீ விரும்பினால் நான் “துஆ” செய்கிறேன். நீ விரும்பினால் பொறுமை செய்” என்று நபீ(ஸல்) அவர்கள் கூறியதன் அர்த்தம் என்னவெனில் நீவிரும்பினால் “துஆ” கேட்காமலும், மருந்து செய்யாமலும் இருந்து கொண்டு அல்லாஹ் உனக்குத் தந்த சன்மானத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு அவ்லியாக்களிடம் உயர்ந்த கூட்டத்துடன் சேர்ந்து கொள் என்பதாகும்.   சுருங்கச் சொன்னால் நான் துஆ கேட்டு நீ கண்ணொளி பெறுவதைவிட கண் தெரியாதவனாகவே நீ வாழ்வதுதான் மேலானதென்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து அங்கு வந்தவர் சஹாபியாக இருந்தாலும் அவர் “முதவக்கிலீன்”களிலோ “முகர்றபீன்”களிலோ சேர்ந்திருக்கவில்லை என்பது தெளிவாகின்றது. அந்த சஹாபி பொறுமை செய்வதை விரும்பாமல் “துஆ” செய்யுமாறே நபீ(ஸல்) அவர்களிடம் கேட்டுக்கொண்டார். நான் “துஆ” கேட்டு உனக்குச் சுகம் கிடைப்பதை விட கண் தெரியாதவனாக இருப்பது சிறந்ததென்று நபீ(ஸல்) அவர்கள் அவருக்குக் கூறியிருந்தும் கூட அந்த சிறப்பான விஷயத்தை நபித் தோழர் விரும்பாமல் போனதற்கு காரணமென்ன என்பதை ஆராய்ந்துபார்ப்போம். கண்பார்வையிழந்த அந்த ஸஹாபி நபீ(ஸல்) அவர்களின் கருத்தை விளங்கியிருந்தும்கூட பொறுமை செய்வதை விரும்பாத காரணமென்னவெனில், அவர் தனது வீட்டில் தொழுவதை விட நபீ பெருமானார் (ஸல்) அவர்களின் பள்ளிவாயலில் அவர்களோடும் தொழுவதையே வரும்பினார். அவரைப் பள்ளிவாயலுக்கு வழிகாட்டி அழைத்து வர உதவியாளர் யாரும் அவருக்கிருக்கவில்லை. இதனால் குருடனாகயிருந்து வீட்டில் தனித்துத் தொழுது மரணிப்பதை விட கண்ணொளி பெற்று நபீ(ஸல்) அவர்களின் பள்ளிவாயலுக்கு ஐவேளைத் தொழுகைக்கும் சமூகமளித்து அவர்களுடன் தொழுவதை மேலானதாகக் கருதினார்.



 இதனால்தான் பொறுமை செய்து கொண்டிருப்பதை விட கண்ணொளி கிடைப்பதைப் பெரி

தும் விரும்பினார். அந்த ஸஹாபி இந்த ஹதீதிலிலுள்ள மற்றுமொரு நுட்பத்தையும் இங்கு நாம் உற்றுணர்வோம். நபீ(ஸல்) அவர்களிடம் “துஆ” செய்யுங்கள் என்று அந்த ஸஹாபி கேட்டிருந்தும் நபீ(ஸல்) அவர்கள் “துஆ” செய்யாமல் அவருக்கு ஒரு துஆவைக் கற்றுக் கொடுத்தார்களேயல்லாமல் அவருக்காக “துஆச்செய்யவில்லை. இதற்கான காரணமென்னவெனில் அந்த ஸஹாபி நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடவேண்டு மென்பதையும், அவர் மனமொடிந்து அழுது சலித்து இறைவனிடம் கொஞ்சிக் கேட்கவேண்டுமென்பதையும் விரும்பியதற்காகத்தான் நபீ(ஸல்) அவர்கள் துஆ கேட்காமல் அவருக்கு துஆவை கற்றுக் கொடுத்தார்கள். மேலே குறித்த நபீ மொழி மூலம் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாக் கேட்கலாம் என்பதும், வஸீலாக் கேட்குமாறு கற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள்தான் என்பதும் தெளிவாகிவிட்டது.



 வஹ்ஹாபிகளும் இந்த ஹதீஸ் பற்றிக் கூறிக்காட்டி விளக்கம் சொன்னால் இதை மறுக்க வழியில்லாத காரணத்தால் இது நபீ (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் நடந்த சம்பவம் என்றும் அவர்கள் இப்பொழுது இந்த ஹதீதின் படி செயல்பட முடியாதென்றும் கூறி மழுப்பி விடுகின்றார்கள். இவர்கள் மழுப்பினாலும் நாம் விடப்போவதில்லை. “சுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுள்ள நாம் இவர்களின் இந்தக் கருத்தை இரண்டு வகையில் மறுப்போம். ஒன்று – நபீ(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற கருத்தை நாம் மறுக்கின்றோம். அவர்கள் இன்று வரை உயிரோடுதானிருக்கின்றார் என்பதற்கும், உயிரோடுதான் இருப்பார்கள் என்பதற்கும் திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை இதே கட்டுறையில் விளக்கமாக விரித்துள்ளேன் இரண்டு – நபீ(ஸல்) அவர்கள் “வபாத்” மரணித்த பிறகும் ஸஹாபாக்கள் இந்த ஹதீது கொண்டு அமல் செய்துள்ளார்கள் என்பதற்கும் வரலாற்று ரீதியான ஆதாரமுண்டு. இதனால் வஸீலாத் தேடுவது நபீ(ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்தது போல் அவர்களின் மறைவின் பின்னரும் நடைமுறப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.             



 ஒரு வரலாற்றுத் தகவல் நபீ(ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பின்பு கலீபா உஸ்மான் (றழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் நபித்தோழர்களில் ஒருவருக்கு கலீபா அவர்களிடம் ஒரு தேவை ஏற்பட்டது. அவர் கலீபா அவர்களி்டம் பல தடவைகள் சென்று கேட்டுப்பார்த்தார். எனினும் அவரின் தேவை நிறைவேறவில்லை. எனவே மேலே குறித்த ஹதீஸை “ரிவாயத்” பேசி வந்த நபித் தோழர் ஹஸ்ரத் உஸ்மான் பின் ஹூனைப் (றழி) அவர்களிடம் சென்று முறையிட்டார். அவர் அந்த ஸஹாபிக்கு அந்த துஆவைக் கற்றுக் கொடுத்து இதைக் கொண்டு நீ வஸீலாத் தேடினால் உனது காரியம் சித்தியாகும். என்று சொன்னார். அந்த ஸஹாபியும் ஹதீஸில் இடம் பெற்ற “துஆ” வை ஓதி நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு “வஸீலா” தேடினார். அல்லாஹ்வும் கலீபா உஸ்மான் (றழி) அவர்கள் மூலம் அவருடைய தேவையை நிறைவேற்றிக் கொடுத்தான். ஒரு நாள் கலீபா உஸ்மான் (றழி) அவர்களின் வீட்டுக்கு அந்த ஸஹாபி வந்து கதவைத்தட்டினார். காவற்காரன் கதவைத் திறந்து அவரை கலீபாவிடம் அழைத்துச் சென்றான்.



உஸ்மான் (றழி) அவர்கள் அவரை வரவேற்று அமரச் செய்து அவருடைய தேவையைப் பற்றி வினவினார்கள். அந்த ஸஹாபி தனது தேவையை தெரிவிக்கவே அவர் அதனை உடனே நிறைவேற்றி வைத்ததுடன், மேலும் தேவையேற்படின் தன்னைச் சந்திக்குமாறும் கூறி அனுப்பி வைத்தார்கள். தனது தேவையைப் பெற்றுக் கொண்டு வழியில் வந்து கொண்டிருந்த ஸஹாபி தனக்கு அந்த “துஆ” வைக் கற்றுக் கொடுத்த ஹஸ்ரத் உஸ்மான் பின் ஹூனைப் (றழி) அவர்களைக் கண்டு “அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக! எனது விஷயமாக கலீபாவிடம் பேசியதால் எனது தேவை முடிந்து விட்டது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இதைக் கேட்ட ஹஸ்ரத் உஸ்மான் பின் ஹூனைப் (றழி) அவர்கள் வியப்படைந்தவர்களாக “இறைவன் மீது ஆனையாக! நான் கலீபாவுடன் உங்கள் விஷயமாக ஒன்றும் பேசவில்லை. எனினும் நான் நபீ(ஸல்) அவர்களுடன் இருந்தபொழுது கண்பார்வையற்ற ஒரு ஸஹாபி அவர்களிடம் வந்து தனக்கு கண்பார்வை கிடைக்க “துஆ” ச் செய்யுங்களென்று கேட்டார். நபீயவர்கள் அவருக்காக துஆச் செய்யாமல் நான் உங்களுக்குச் சொல்லித்தந்த துஆவை அவருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த ஸஹாபியும் அவ்வாறே துஆ கேட்டார். அதே சபையில் அவருக்கு பார்வை கிடைத்து விட்டது. இதை நான் நேரில் கண்டேன். அதைத்தான் நான் உங்களுக்கு கற்றுத்தந்தேனே தவிர, கலீபாவுடன் நான் ஒன்றும் சொல்லவில்லை” என்று சொன்னார். “கண்ணொளி பெற்ற ஸஹாபி அந்த “துஆ” வை ஓதியதால்தான் கண்ணொளி பெற்றார். அதேபோல் நீங்களும் ஓதியதால்தான் கலீபா மூலம் உங்கள் தேவையைப் பெற்றிருக்கின்றீர்கள் என்று சொன்னார்கள். இந்த ஹதீது தபறானி, பைஹகீ ஆகிய இருபெரும் ஹதீதுக் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. நபீ(ஸல்) அவர்கள் உயிரோடிருந்த பொழுதுதான் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டுள்ளதென்றும், அவர்கள் வபாத்தான பிறகு அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாகாதென்றும், மேலே குறித்த ஹதீது நபீ(ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்துக்கே பொருத்தமானதேயன்றிஅவர்களின் வபாத்துக்குப் பிறகு பொருத்தமற்றதென்றும் கூறிவரும் அறிவில்லாத வஹ்ஹாபிகளுக்கு தபறானியும், பைஹகீயும் கூறியுள்ள இந்த ஹதீது நேரடி மறுப்பாக இருப்பதை காண முடிகின்றது. ஸஹாபாக்களை பின்பற்றுமாறும், அவர்கள் சென்ற வழியில் செல்லுமாறும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம். அவர்களின் செயல்களில் அவர்களைப் பின்பற்றுவதால் குற்றமொன்றும் வந்தவிடாது.



  நபிமொழி : 03 நபீ(ஸல்) அவர்கள் “துஆ” க் கேட்கும் பொழுது உனது நபியின்பொருட்டைக் கொண்டும் எனக்கு முன்னுள்ள நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் என்று “துஆ” கேட்பார்கள். நபீ(ஸல்) அவர்கள் தன்னைக் கொண்டும், தனக்கு முன் தோன்றி மறைந்த நபிமார்களைக் கொண்டும் வலீலாத் தேடியுள்ளார்கள் என்பது இந்த ஹதீதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மரணித்தவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது ஆகுமென்பதற்கும் இந்த ஹதீதில் ஆதாரமிருக்கின்றது. நபிமொழி – 04 யாராவது தனது வீட்டிலிருந்து தொழுகைக்காக வெளிப்பட்டு இறைவா உன்னிடம் கேட்பவர்களின் பொருட்டாலும், இதோ உன்னிடம் நான் நடந்து வருகின்ற இந்த நடையின் பொருட்டாலும் உன்னிடம் கேட்கிறேன். நான் பெருமைக்காகவோ, முகஸ்துதிக்காகவோ எனது வீட்டில் இருந்து வெளிப்படவில்லை. எனினும் உனது கோபத்திலிருந்து தப்பிக் கொள்வதற்காகவும், உனது திருப் பொருத்தத்தையடைந்து கொள்வதற்காகவுமே வெளிப்பட்டேன். நீ என்னை நரகிலிருந்து காப்பாற்றுமாரும், உன்னைத் தவிர குற்றத்தை மன்னிப்பவர் வேறுயாருமில்லாதிருப்பதனால் எனது குற்றத்தை மன்னித்து விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். என்று கூறுவானாயின் அல்லாஹ் அவன் பக்கம் முன்னோக்குவான் என்றும், இன்னும் அவனுக்காக எழுபதாயிரம் அமரர்கள் பாவமன்னிப்புக் கேட்பார்கள் என்றும் நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் – இப்னுமாஜா                        அறிவிப்பு – அபூஸயீத் அல்குத்ரி (றழி)

இந்த ஹதீதை இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸூயூத்தி (றஹ்) அவர்கள் தங்களின் “ஜாமிஉல்கபீர்” எனும் நூலிலும், இன்னும் அநேக இமாம்கள் தமது நூல்களிலும் கூறியிருக்கின்றார்கள். இன்னும் இந்த ஹதீதை இமாம் இப்னுஸ்ஸூன்னி (றஹ்) அவர்கள் பிலால் (றழி) சொன்னதாகப் பேசி வந்துள்ளார்கள். மேலும், இந்த ஹதீதை அல்-ஹாபிழ் அபூநுஐம்(றஹ்) அவர்கள் தங்களின் “அமலுல் யவ்மி வல்லைலா” எனும் நூலிலும் இமாம் பைஹகீ (றஹ்) அவர்கள் தங்களின் “பைஹகீ” எனும் நூலில்“கிதாபுல் தஅவாத்” எனும் பாடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள். ஹதீதுக் கலை மேதைகள் பலர் இந்த நபிமொழியை குறிப்பிட்டிருப்பதால் இது சரியான பலமிக்க ஹதீதென்பது நன்கு தெளிவாகின்றது. “முஹத்திதீன்கள்” எனப்படும் ஹதீதுக்கலை நிபுணர்களில் அநேகர் ஒரு ஹதீஸை கூறிவந்தார்களானால் அது சரியான – பலங்கூடிய ஹதீஸ் என்று கணிக்கப்படும். இந்த ஹதீதில் நபீ(ஸல்) அவர்கள் “உன்னிடம் கேட்பவர்களின் பொருட்டைக் கொண்டு. . .” என்று கூறிய வசனம் தான் வஸிலாத் தேடலாமா என்பதற்கும் ஆதாரமாக இருக்கின்றது. “அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக பிஹக்கிஸ் ஸாயிலீன அலைக” (இறைவா! உன்னிடம் கேட்பவர்களின் பொருட்டைக் கொண்டு கேட்கிறேன்) மேலே குறித்த ஹதீதில் இடம் பெற்ற “பிஹக்கிஸ் ஸாயிலீன” என்ற வசனம் “கேட்பவர்கள் அனைவரின் பொருட்டைக் கொண்டும்” என்ற கருத்தைத் தருகின்றது. ஏனெனில் “பிஹக்கிஸ் ஸாயிலீன்” என்ற வசனத்திலுள்ள “அஸ்ஸாயிலீன்” என்ற சொல் “அஸ்ஸாயில்” என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். “அஸ்ஸாயில்” என்றால் கேட்பவன் என்றும் “அஸ்ஸாயிலீன்” என்றால் கேட்பவர்கள் என்றும் அர்த்தம் வரும். இந்த வசனத்திலிருந்து உலகில் அல்லாஹ்விடம் கேட்கின்ற அனைத்து விசுவாசிகளின் பொருட்டைக் கொண்டும் நபீ(ஸல்) அவர்கள் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பதும் தெளிவாகி விட்டது. “கேட்பவர்கள் அனைவரின் பொருட்டைக் கொண்டும்” எனும் இவ்வசனம் கேட்பவர்கள் ஒவ்வொருவரின் பொருட்டைக்கொண்டு மென்ற கருத்தை உள்ளடக்கியதாயுள்ளது. இதன் படி நபீ(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கின்ற ஒவ்வொரு விசுவாசியின் பொருட்டைக் கொண்டும் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பது தெளிவாகி விட்டது. மேலும் இந்த வசனமானது நபீ(ஸல்) அவர்களின் காலத்தில் உயிரோடிருந்து அல்லாஹ்விடம் கேட்பவர்களையும் குறிக்கும். அவர்களின் காலத்தின் பிறகு இறுதி நாள் வரை அல்லாஹ்விடம் கேட்பவர்களையும் குறிக்கும். இதன் படி நேற்று வாழ்ந்த விசுவாசியைக் கொண்டும், இன்று இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிக்கின்ற விசுவாசியைக் கொண்டும், நாளை வாழப் போகின்ற விசுவாசியைக் கொண்டும் நபீ(ஸல்) அவர்கள் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பது வௌ்ளிடை மலை போல் விளங்குகின்றது.

இந்த மூலக் கருத்தை அடிப்படையாக வைத்து சற்று ஆழமாக ஆராய்ந்தால் நபீ(ஸல்) அவர்களுக்கும், பிறகு வந்தவர்களில் விசுவாசிகள் என்று நிச்சயமாக அறியப்பட்ட அவ்லியாக்கள், குத்புமார்கள் ஆகியோரைக் கொண்டும் நபீ(ஸல்) அவர்கள் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பது விளங்கி விட்டது. நபீ(ஸல்) அவர்கள் இவ்வாறு வஸீலாத் தேடுவதுடன் நின்று விடாது தங்களின் ஸஹாபாக்களையும் இவ்வாறு கேட்குமாறு பணித்தார்கள். ஸஹாபாக்களும், அவர்களுக்குப் பிறகுள்ள தாபியீன்களும் இந்த ஹதீதின் படி அமல் செய்து வந்துள்ளார்கள்என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் பல உள்ளன. விரிவையஞ்சியே அவற்றை விடுத்தேன்.

நபிமொழி - 05 அலீ(றழி) அவர்களின் தாயும், அஸத்பின் ஹாஸிம் அவர்களின் மகளுமான நபீ(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டி வளர்த்த தாயார் பாத்திமா மரணித்த பொழுது அவர்களிடம் நபீ(ஸல்) அவர்கள் சென்று தலைப்பக்கமாக அமர்ந்து கொண்டு “ எனது தாய்க்குப் பிறகுள்ள தாயே! அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக!” எனப் புகழ்ந்து விட்டு, தங்களின் போர்வையால் அவர்களை கபன் செய்யுமாறு பணித்து விட்டு அவர்களுக்காக கப்று தோண்டுமாறும் பணித்தார்கள். ஸஹாபாக்கள் கப்று தோண்டினார்கள். இறுதியில் நபீ(ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அவர்களின் கப்றை தோண்டி, தங்களின் திருக்கரத்தாலே மண்ணை எடுத்து விட்டு அக்கப்றுக்குள் இறங்கி அங்கே சாய்ந்து கொண்டு- “அல்லாஹ்தான் உயிராக்குபவனும், மரணிக்கச் செய்பவனுமாவான். அவன் உயிருள்ளவன். ஒரு போதும் மரணிக்க மாட்டான் இறைவா! எனது தாயான அஸதுடைய மகளான பாத்திமா செய்த குற்றங்களை உனது நபியின் பொருட்டைக் கொண்டும் எனக்கு முன்னுள்ள நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் நீ மன்னித்து விடுவாயாக! இன்னும் அவருக்கு அவரின் கப்றை விசாலமாக்கி விடுவாயாக! நீ மிக்க அருளாளன்” என்று கூறினார்கள்.

                                         ஆதாரம் - தபறானி                          அறிவிப்பு – அனஸ்பின் மாலிக் (றழி)

இந்த ஹதீதை அல்லாமா இப்னு ஹஜர் (றழி) அவர்கள் “அல்ஜவ்ஹறுள்”, முனள்ளம் எனும் நூலிலும் இமாம் சுலைமான் அத்தபறானீ (றஹ்) அவர்கள் “அல்கபீர்”, “அல் அவ்ஸத்” ஆகிய நூல்களிலும் கூறியுள்ளார்கள். இன்னுமிந்த ஹதீதை இமாம் இப்னு ஹிப்பான், இமாம் அல்ஹாகிம் போன்ற ஹதீதுக்கலை மோதைகளும் கூறியுள்ளார்கள். மேலும் இந்த நபி மொழியை ஹஸ்ரத் ஜாபிர் (றழி) அவர்களை மேற்கோள் காட்டி இமாம் இப்னு அபீஷைபா (றஹ்) அவர்களும், இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடமிருந்து இமாம் இப்னு அப்துல் பர் அவர்களும் ஹஸ்ரத் அனஸ் (றழி) அவர்களிடமிருந்து இமாம் அபூ நுஐம் (றஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். இவையனைத்தையும் ஒன்று சேர்த்து அல்ஹாபிழ் ஜலாலுத்தீன் அப்துர் றஹ்மான் அஸ்ஸூயூதி (றஹ்) அவர்கள் தங்களின் “அல்ஜாமிஉல் கபீர்” எனும் நூலில் கூறியுள்ளார்கள். மேலே குறித்த ஹதீதில் பாலூட்டிய தாய் பாத்திமா அவர்களுக்காகப் பிராத்தனை செய்த நபீ(ஸல்) அவர்கள் தங்களின் பொருட்டைக் கொண்டும், தங்களுக்கு முன்னுள்ள நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் வஸீலாத் தேடியுள்ளார்கள். இந்த ஹதீதில் நபீ(ஸல்) அவர்கள் தங்களின் பொருட்டைக் கொண்டும், தங்களுக்கு முன்னுள்ள நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் வஸீலாத் தேடலாம் என்பதற்கும், மேலும் மரணித்தவர்களைக் கொண்டும் வஸீலாத் தேடலாம் என்பதற்கும் தெட்டத் தெளிவாக ஆதாரம் உள்ளது. நபீ(ஸல்) அவர்கள் பாத்திமாவை தங்களின் போர்வையால் கபன் செய்யுமாறு பணித்திருப்பதிலிருந்து நபிமார் பாவித்த பொருட்களைப் பாவிப்பதில் “பறகத்” அருள் உண்டு என்பதும் தெளிவாகின்றது. நபிமொழி – 06 இரண்டாவது கலீபா உமர் (றழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கடும் பஞ்சம் மக்களைப் பிடித்தது. அப்பொழுது நபித் தோழர்களில் ஒருவரான ஹஸ்ரத் பிலால் பின் ஹர்து (றழி) அவர்கள் நபீ(ஸல்) அவர்களின் புனித அடக்கஸ்தலத்துக்கு வந்து அல்லாஹ்வின் றஸூலே! மக்கள் அழிந்து போயினர். உம்மத்துக்காக மழை பெய்யக் கேளுங்களென்று வேண்டினார்கள். பிறகு நபீ(ஸல்) அவர்கள் அவரின் கனவில் தோன்றி மழை பெய்யுமென்று அறிவித்தார்கள்.

ஆதாரம் – பைஹகீ                             அறிவிப்பு – இப்னு அபீஷைபா (றழி)

இந்த ஹதீதிலிருந்து நபீ(ஸல்) அவர்கள் வபாத்தான பிறகும் கூட அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டிருப்பது தெளிவாக விளங்குகின்றது. வஸீலாத் தேடிய ஹஸ்ரத் பிலால் பின் ஹர்து (றழி) அவர்கள் ஸஹாபாக்களில் ஒருவர். இவர் கண்ட கனவு சரியானதா? உண்மையானதா? கனவைக் கொண்டு சட்டம் எடுக்கலாமா? என்பதைப் பற்றி நாம் இங்கு ஆராயத்தேவையில்லை. அது வேறு விஷயம். அந்த நபித்தோழர் நபீ(ஸல்) அவர்களின் கபுறடிக்கு வந்து அவர்களிடம் கேட்டது விழிப்பில் நடந்ததேயன்றிக் கனவில் நடந்ததல்ல. ஆகையால் நபித் தோழர் ஒருவர் விழிப்பில் செய்த ஒரு செயல் மட்டும் நமக்குப் போதிய ஆதாரமாகும். ஏனெனில் ஸஹாபாக்கள் பற்றி நபீ(ஸல்) அவர்கள் கூறுகையில் “எனது ஸஹாபாக்கள் நட்சத்திரம் போன்றவர்கள் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி பெற்று விடுவீர்கள்” என்று கூறியுள்ளார்கள். நபீ(ஸல்) அவர்களின் இக் கூற்றின் தாற்பரியமென்னவெனில் ஸஹாபாக்கள் தவறு செய்யமாட்டார்களாகையால் அவர்களைப் பின்பற்றுங்கள் என்பதேயாகும்.இக்கூற்றிலிருந்து ஸஹாபாக்களின் செயல்களைப் பின்பற்றலாம் என்றும், அவர்களின் செயல்கள் மார்க்கத்துக்கு முரணில்லாதவை என்றும் விளங்குகின்றது. இன்னும் நபீ(ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் பற்றிக் கூறுகையில் “அல்லாஹ அல்லாஹ பீ அஸ்ஹாபீ” (எனது தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்) என்று கூறியுள்ளார்கள். இன்னும் “வஇதா துகிர அஸ்ஹாபீ பஅம்ஸிகூ” (எனது ஸஹாபாக்கள் பற்றிப் பேசப்பட்டால் உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்) என்றும் நபீ(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்னுமிவை போன்ற அநேக ஹதீதுகள் ஸஹாபாக்களின் சிறப்பு பற்றி வந்துள்ளன. விரிவையஞ்சி விடுகின்றேன். ஸஹாபாக்களின் சிறப்பு பற்றி மேலே கூறிய ஹதீஸ்களில் இருந்து அவர்கள் நேர்மையுள்ளவர்கள் என்றும், அவர்களின் சொற்செயல்களைப் பின்பற்றக் கூடுமென்பதும் தெளிவாக விளங்குகின்றது. மேலே குறித்த ஹதீதில் ஹஸ்ரத் பிலால் பின் ஹர்து (றழி) அவர்கள் தானிருந்த இடத்திலேயே இருந்து கொண்டு கேட்காமல் நபீ (ஸல்) அவர்களின் கபுறடிக்கு வந்து கேட்டதிலிருந்து மரணித்த ஒருவரிடம் ஒரு தேவையைக் கேட்பதாயின் அவரின் கபுறடிக்கு வந்து கேட்கவேண்டுமென்பதற்கும், அவரின் பொருட்டைக் கொண்டும், இவரின் பொருட்டைக் கொண்டும் என்றும் கேட்காமல் நேரடியாக அவரிடம் கேட்பது ஆகும் என்பதற்கும் இதில் ஆதாரமிருக்கிறது.

நுட்பமாக ஆராய்ந்தால் தெளிவாகும். எளிதாக விளங்கிக் கொள்வதற்காக சுருக்கமாகச் சுட்டிக் காட்டுகிறேன். மேலே குறித்த ஹதீஸில் நபீ (ஸல்) அவர்களின் கபுறடிக்கு (றழி) அவர்கள் “ இறைவா ! உனது நபியின் பொருட்டைக் கொண்டு மழை பெய்யச் செய்வாயாக ! ” என்று கேட்காமல் இஸ்தஸ்கி லி உம்மதிக ( உங்களின் உம்மத்துக்களுக்கு மழைபெய்யக் கேளுங்கள்) என்று கேட்டார்கள். இதுவரை நான் எழுதிய விவரங்களும், ஆதாரங்களும் நபீ (ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டும், அதாவது அவர்களைக் கொண்டும், ஏனைய நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் வஸீலாத் தேடுவது பற்றியவையாகும். நபிமார்களிடமும், அவ்லியாக்களிடமும் நேரடியாகக் கேட்பது தொடர்பாக இன்னும் விவரம் எழுதவில்லை. மேலே குறித்த ஹதீதில் வந்துள்ள “ உங்களின் உம்மத்துக்களுக்காக மழை பெய்யக் கேளுங்கள் ” என்ற வசனம் நேரடியாகக் கேட்பதோடு தொடர்புடைய ஒரு வசனமாதலால் இன்ஷா அல்லாஹ் அதற்குரிய இடத்தில் விளக்குவேன். கலந்துரையாடல் மத்ஹபுடைய இமாம் மாலிக் (றழி) அவர்களுக்கும், கலீபா மன்சூர் அவர்களுக்குமிடையே நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். ஒரு சமயம் கலீபா மன்சூர் “ ஹஜ்ஜு ” செய்யச் சென்றபொழுது மதீனா முனவ்வறா சென்று நபீ (ஸல்) அவர்களின் கப்றை ஸியாரத் செய்வதற்காக போனார். அப்பொழுது அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

அதாவது நபீ (ஸல்) அவர்களின் கப்றை முன்னோக்கி சலாம் கூறி துஆ செய்வதாயின் கிப்லாவுக்குப் பின் காட்ட வேண்டும். கிப்லாவை முன்னோக்கி துஆ கேட்பதாயின் நபீ (ஸல்) அவர்களின் கப்றுக்குப் பின்காட்ட வேண்டும். எவ்வாறு செய்து கொள்வதென்று அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அந்நேரம் மத்ஹபுடைய இமாம் மாலிக் (றஹ்) அவர்கள் “ மஸ்ஜிதுன் நபவீ ” நபீ (ஸல்) அவர்களின் பள்ளிவாயலில் இருந்தார்கள். கலீபா மன்சூர் இமாமவர்களை அணுகி தனக்கேற்பட்ட சந்தேகத்தைக் கூறி விடைபெற்றார். அதற்கு இமாம் மாலிக் (றஹ்) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் கப்றை விட்டும் நீ முகத்தை திருப்பிவிடாதே. அவர்கள்தான் உனக்கும் உனது தந்தை ஆதம் நபீ (அலை) அவர்களுக்கும் “ வஸீலா ” வாக இருக்கின்றார்கள். நீ அவர்களின் கப்றை முன்னோக்கி கிப்லாவை உனது பின் பக்கமாக ஆக்கிக்கொள். அவர்களைக் கொண்டும் “ ஷபாஅத் ” தைக்கேள். அல்லாஹ் அவர்களை உனக்கு ஷாபிஃஆக – சிபாரிசு செய்பவர்களாக ஆக்கிவைப்பான் ” எனக்கூறி அவர்கள் பாவம் செய்துவிட்டு உங்களை நாடி உங்கள் காலடிக்கு வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கேட்டு நபீ (ஸல்) அவர்களும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்கள் அல்லாஹ்வை பாவத்தை மன்னிப்பவனாகவும், இரக்கமுள்ளவனாகவும் பெற்றுக்கொள்வார்கள். என்ற இறைமறை வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். கலீபா மன்சூர் அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

இந்தச் செய்தியை இமாம் காளீ இயாழ் அவர்கள் பலம் வாய்ந்த ஆதாரத்துடன் தங்களின் “ அஷ்ஷிபா ” என்ற நூலிலும், இமாம் ஸுப்கீ (றஹ்) அவர்கள் தங்களின் “ ஷிபாஉஸ்ஸகாம் ” என்ற நூலிலும் இமாம் அஸ்ஸெய்யித் அலி அஸ் ஸம்ஹுதி (றஹ்) அவர்கள் தங்களின் “ குலாஸதுல் வபா ” எனும் நூலிலும், இமாம் அல்லாமா கஸ்தல்லானீ (றஹ்) “ குன்னிய்யா ” எனும் நூலிலும், அல்லாமா இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் “ அல்ஜவ்ஹறுல்முனள்ளம் ” எனும் நூலில் கூறியுள்ளார்கள். மேலும் இமாம் அல்லாமா ஷர்கானீ (றஹ்) அவர்கள் “ இச்செய்தி உண்மையானது இதை அறிவித்தவர்களில் எவரும் பொய் சொல்லக் கூடியவர்களுமில்லை. பலங்குறைந்தவர்களுமில்லை ” என்று தங்களின் “ ஷர்ஹூல் மவாஹிப் ” எனும் நூலிலும் கூறியுள்ளார்கள். இமாம் மாலிக் (றஹ்) அவர்களின் இந்தச் செய்தியைப் பொய்யென்று சொல்பவர்களை மறுப்பதற்காகவே அறிஞர் ஷர்கானீ (றஹ்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள். இமாம் மாலிக் (றஹ்) அவர்களுக்கும், கலீபா மன்சூர் அவர்களுக்கும் இடையில் நடந்த இச்சம்பவத்தின்மூலம் நபீ (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாம் என்பதும், நபீ (ஸல்) அவர்கள் வபாத்தான பிறகும் கூட அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாம்மென்பதும் தெளிவாகிவிட்டது.

நபிமொழி – 07 இரண்டாவது கலீபா உமர் (றழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒருசமயம் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது கலீபா உமர் (றழி) அவர்கள் ஹஸ்ரத் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு மழைகேட்டு வஸீலாத் தேடினார்கள். அப்பாஸ் (றழி) அவர்களிடம் கலீபா அவர்கள் வந்து இறைவா ! நாங்கள் எங்கள் நபீ முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொண்டு உன்னிடம் மழை பெய்யக் கேட்போம். நீ மழையை இறக்குவாய். இப்பொழுது எங்களுடைய நபியின் தந்தையின் சகோதரர் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு உன்னிடம் வஸீலாத் தேடுகிறோம். நீ மழையை இறக்கிவைப்பாக ” என்று சொன்னார்கள்.

ஆதாரம் – புஹாரீ அறிவிப்பு – அனஸ் பின் மாலிக் (றழி)

இந்த ஹதீதில் நாம் பெறவேண்டிய கருத்துக்கள் பல இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான கருத்துக்கள் பற்றி ஆராய்ந்து பார்ப்போம். கலீபா உமர் (றழி) அவர்கள் ஸஹாபாக்களில் ஒருவர். அதுமட்டுமின்றி நாற்பெரும் கலீபாக்களில் ஒருவராகவும் விளங்குகிறார்கள். நபித்தோழரின் செயல் நமக்கும் போதிய ஆதாரமாகும். அதிலும் குறிப்பாக ஒரு கலீபாவின் செயல் பலம் வாய்ந்த ஆதாரமாகிவிடும். ஏனெனில் நபித்தோழர்கள் பற்றி நபீ (ஸல்) அவர்கள் பல தடவைகள் மேம்படுத்திச் சொல்லியிருக்கின்றார்கள். இது தொடர்பாக முன்னால் பல ஹதீதுகளை ஆதாரமாக எழுதியுள்ளேன். இங்கு இன்னும் சில தகவல்களைத் தருகின்றேன். எனது நடைமுறைகளையும், எனக்குப் பிறகு வருகின்ற நேர்மையுள்ள நல்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். பின்பற்றுங்கள் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                                ஆதாரம் – அபூதாவூத் , துர்முதி

“ அல்லாஹ் உண்மையை உமறுடைய நாவின் மீதும் அவருடைய கல்பின் மீதும் அமைத்துள்ளான். ” என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – அஹ்மத் , துர்முதீ அறிவிப்பு – இப்னு உமர் (றழி)

இந்த ஹதீதை அபூதாவூத், இமாம் ஹாகிம் போன்றோர் ஹஸ்ரத் அபூதர் (றழி) அவர்கள் கூறியதாக “ முஸ்தத்றக் ” எனும் நூலிலும், இமாம் அபூயஃலா (றஹ்) அவர்கள் ஹஸ்ரத் அபூ ஹூரைரா (றழி) அவர்கள் அறிவித்ததாக அதே நூலில் மற்றொரு குறிப்பிலும், இமாம் தபறானி (றஹ்) அவர்கள் ஹஸ்ரத் பிலால் (றழி), முஆவியா (றழி) ஆகியோர் அறிவித்ததாக “ அல்ஜாமிஉல்கபீர் ” எனும் நூலிலும், இமாம் இப்னு அதீ (றஹ்) அவர்கள் ஹஸ்ரத் பள்லுப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவித்ததாக “ அல்காமில் ” எனும் நூலிலும் கூறியுள்ளார்கள். “ உமர் என்னுடன் இருக்கிறார் நான் உமருடன் இருக்கிறேன் எனக்குப்பிறகு உண்மையென்பது உமருடன் இருக்கும். அவர் எங்கு இருந்தாலும் சரியே ” என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – தபறானீ அறிவிப்பு – பள்ல் பின் அப்பாஸ் (றழி)

“ எனக்குப் பிறகு ஒரு நபீ இருப்பாராயின் அவர் உமர்தான் ” என நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – அஹ்மத் , துர்முதி

இந்த ஹதீதை ஹஸ்ரத் உக்பா பின் ஆமிர் அல்ஜூஹனீ (றழி) அவர்கள் அறிவித்ததாக இமாம் ஹாகிம் அவர்கள் “முஸ்தத்றக்” எனும் நூலிலும், இஸ்மத் பின்மாலிக் (றழி) அவர்கள் அறிவித்ததாக இமாம் தபறானீ அவர்கள் “ அல்ஜாமிஉல்கபீர் ” எனும் நூலிலும் எழுதியுள்ளார்கள். எனக்குப் பிறகு வருகின்ற இருவரைப் பின்பற்றுங்கள் ஒருவர் அபூபக்கர் (றழி) மற்றவர் உமர் (றழி). இவ்விருவரும் அல்லாஹ்வின் நீளமான கயிறு. பலம்வாய்ந்த கயிற்றைப் பற்றிப்பிடித்தவன் தோல்வி காணமாட்டான். என்று நபீ (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

ஆதாரம் – அல்ஜாமிஉல்கபீர் அறிவிப்பு – அபுத்தர்தா (றழி)

 

No comments:

Post a Comment