Popular Posts

Wednesday 6 January 2016

வஸீலாத் தேடலாமா 03 (தொடர் 03)

வஸீலாத் தேடலாமா?     (தொடர் 03)
இது வரை ஹஸ்ரத் உமர் (றழி) அவர்கள் பற்றிக் கூறப்பட்ட குறிப்புகளிலிருந்து அவர்களின் சொற் செயல்கள் அனைத்தும் சரியானவை என்பதும், அவர்களை அவற்றில் பின் பற்ற வேண்டும் என்பதும் தெளிவாகிவிட்டது.   மேலே குறித்த ஹதீதில் உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியதிலிருந்து வஸீலாத் தேடுவதும் ஆகுமென்பதும் தெளிவாயிற்று இன்னுமிந்த ஹதீதில் சிந்திக்க வேண்டிய இன்னுமொரு விஷயம் உண்டு. அது பற்றி ஆராய்ந்து பார்ப்போம். கலீபா உமர் (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியது ஏனெனில் நபியில்லாத ஒருவரைக் கொண்டும் வஸீலாத் தேடலாம் என்பதை மக்களுக்கு விளக்கி வைப்பதேயாம்.



நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருக்கும் பொழுதும், அவர்கள் வபாத்தான பொழுதும் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாம் என்பது அன்று வாழ்ந்த முஸ்லீம்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு விஷயமாகவே இருந்தது. நபியல்லாத ஒருவரைக் கொண்டு வஸீலாக் கேட்பதுதான் அறியப்படாத அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயமாயிருந்தது.



இந்தச் சூழ்நிலையில் தான் கலீபா உமர் (றழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியிருந்தால் மக்களுக்கு இந்த உண்மை அதாவது நபியல்லாத ஒருவரைக் கொண்டும் வஸீலாத் தேடலாமென்பது தெரியாமற் போயிருக்கும்.



இதனால் தான் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் நபியல்லாத ஒருவரான அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள். வஹ்ஹாபிகள் இந்தச் சம்பவத்தை வைத்துக் கொண்டு உயிரோடிருப்பவர்களைக் கொண்டு மட்டும் தான் வஸீலாத் தேடலாமேயன்றி மரணித்தவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாகாதென்று கூறுகின்றார்கள்.



கலீபா உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடிய நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்றும் அப்பாஸ் (றழி) அவர்கள் உயிரோடிருந்தார்கள் என்றும் இதனால் தான் உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என்றும் கூறுகின்றார்கள்.



வஹ்ஹாபிகளின் இக்கூற்று அர்த்தமற்றதும் விந்தையானதுமாகும். ஏனெனில் நான் முன்னால் எழுதிக் காட்டிய பல ஹதீதுகளிலும், நான் இங்கு குறிப்பிடாத அனேக ஹதீதுகளிலும் நபீ(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களைக் கொண்டு ஸஹாபாக்கள் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன.



எனவே நபீ(ஸல்) அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னாலேயே அவர்களைக் கொண்டு வஸீவாத் தேடப்பட்டிருப்பது என்பதற்கும், அவர்கள் உயிரோடிருந்த பொழுதும் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டிருப்பது என்பதற்கும், அவர்கள் மரணித்த பிறகும் அவர்களைக் கொண்டு வஸீவாத் தேடப்பட்டிருப்பது என்பதற்கும், இன்னும் நபியில்லாத ஒருவரைக் கொண்டு வஸீவாத் தேடப்பட்டிருப்பது என்பதற்கும், இது வரை பல ஆதாரங்கள் எழுதப்பட்டுள்ளன. சிந்தனையுள்ளவர்களுக்கு இதில் கூறப்பட்ட ஆதாரங்களே போதுமானதாகும்.



உமர் (றழி) அவர்களின் வஸீலா



கலீபா உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடிய சமயம் அப்பாஸ் (றழி) அவர்களை விடச் சிறந்தவராக அலி (றழி) அவர்கள் இருந்தது உண்மைதான். எனினும் சிறப்புக் கூடியவர் இருக்கும் பொழுது சிறப்புக் குறைந்தவரைக் கொண்டு வஸீலாத் தேடலாமென்பதை மக்களுக்கு விளக்கி வைப்பதற்காகவே அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள்.



ஞானிகள் கூறும் காரணங்கள்



உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடிய சமயம் நபீ(ஸல்) அவர்கள் அங்குதான் அடக்கப்பட்டிருந்தார்கள்.



மரணித்தவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாமென்றபடி உமர் (றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியதற்கு ஆரிபீன்களான ஞானிகள் ஒரு காரணம் கூறுகின்றார்கள். அதை இங்கே எழுதுகின்றேன்.



ஸஹாபாக்கள் சிறந்தவர்களாயிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஈமான் எனும் விசுவாசம் தொடர்பாக ஒரே தரத்தையுடையவர்களல்லர். அவர்களிற் சிலர் மறு சிலரை விட “ஈமான்” எனும் நம்பிக்கை கூடினவர்களாயும், இன்னும் சிலர் குறைந்தவர்களாகவும் இருந்தார்கள்.



இவர்களில் நம்பிக்கை கூடியவர்கள் எதையும் தாங்கும் இதயமுடையவர்களாயும், என்னதான் நேர்ந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளக்கூடியர்களாகவும் இருப்பார்கள்.



ஆனால் நம்பிக்கை குறைந்தவர்கள் அதாவது நம்பிக்கையில் பலவீனமானவர்கள் சிறு விஷயங்களுக்குக் கூட நம்பிக்கை தளர்ந்து விடுவார்கள். சிறு விஷயங்களை தாங்கிக் கொள்ளவுமாட்டார்கள்.



கலீபா உமர் (றழி) அவர்கள் நம்பிக்கையில் பலம் குறைந்தவர்கள் மீது கருணை காட்டியும், அவர்களின் நம்பிக்கையில் குறைபாடு ஏற்படாமலிருப்பதை கருத்தில் கொண்டும் தான் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்களேயன்றி மரணித்தவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது கூடாது என்பதற்காக அல்ல.



இதன் விபரமென்னவெனில், உமர்(றழி) அவர்கள் அப்பாஸ்(றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியும் காரியம் முடியாது போனால் அல்லது அந்தக் காரியம் தாமதமானால் நம்பிக்கை பலம் குறைந்தவர்களுக்கு அது மேலும் பலவீனத்தையும், ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடும். நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியும் கிடைக்க வில்லையே என்று நபீ(ஸல்) அவர்கள் மீது தவறான எண்ணம் ஏற்படவும் கூடும்.



நபீ(ஸல்) அவர்களைக் தரக்குரைவாக நினைத்தலும், அவர்கள் மீது சந்தேகம் கொள்ளுதலும் ஈமான் எனும் நம்பிக்கைக்கு முரணானதாகும். ஈமானில் பலம் குறைந்தவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்படக்கூடாதென்பதினால் தான் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் அப்பாஸ்(றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள்.



அப்பாஸ்(றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியும் காரியம் முடியவில்லையானால் அதனால் யாருக்கும் சந்தேகமோ, நம்பிக்கையில் பலவீனமோ ஏற்படமாட்டாது. ஏனெனில் அவர் ஒரு ஸஹாபியாயிருந்தாலும் அவர் நபியல்ல. ஒரு நபி மீது சந்தேகம் கொள்வதற்கும் நபியல்லாத ஒருவர் மீது சந்தேகம் கொள்வதற்குமிடையில் வித்தியாசமுன்டு.



ஹிஜ்ரி 198ல் மக்கா நகரில் மரணித்த சுப்யான் பின் உஐனா (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்.



இமாம் அத்பீ (றஹ்) அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள். நான் நபீ(ஸல்) அவர்களின் கப்றுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது ஒரு அறபி வந்து “அஸ்ஸலாமு அலைக யாறஸூலல்லாஹ்” என்று சலாம் கூறிவிட்டு அல்லாஹ் திருக்குர்ஆனில் உங்களின் சிறப்பு பற்றி கூறுகையில் அவர்கள் தமக்கு அநீதி செய்து விட்டு உங்களிடம் வந்து பாவமன்னிப்புக் கோரி நீங்களும் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரும் போது அவர்கள் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், அன்புள்ளவனாகவும் பொற்றுக் கொள்வார்கள் என்றும் கூறுகின்றான்.



இதோ நான் உங்களின் காலடிக்கு பாவமன்னிப்புக் கேட்பவனாகவும், உங்களைக் கொண்டு “ஷபாஅத்” மன்றாட்டம் கேட்பவனாகவும் வந்து நிற்கின்றேன் என்று கூறிய அந்த அறபி அழுதுசலித்தவராக நபீ(ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடி விட்டு மன்னிப்புக் கோரிய பின் போய் விட்டார்.

அவர் போய் சற்று நேரத்தின் பின் அங்கு அமர்ந்திருந்த எனக்கு தூக்கம் வந்தது. நான் சற்று நேரம் கண்ணுரங்கினேன். அப்பெழுது நபீ(ஸல்) அவர்கள் என் கனவில் தோன்றி “அத்பீ அவர்களே! நீங்கள் எழுந்து சென்று அந்த அறபியிடம் அல்லாஹ் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டான் என்று கூறுங்கள்” என்று சொன்னார்கள்.

No comments:

Post a Comment