Popular Posts

Wednesday 6 January 2016

சியாரதுல் குபூர் மண்ணறைகளைத் தரிசித்தல்

சியாரதுல் குபூர் மண்ணறைகளைத் தரிசித்தல்.
மேற்கண்ட தலைப்புத் தொடர்பான விபரங்களை நான் எழுதக் காரணம் என்னவெனில். வஹ்ஹாபிகள் “சியாரதுல் குபூர்” “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று கூறிவருவதும், மண்ணறைகளைத் தரிசிக்க வேண்டாமென்று பிரச்சாரம் செய்து வருவதுமேயாகும். மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு நபீ ஸல் அவர்கள் “சியாரதுல் குபூர்” என்று பெயர் சொல்லியிருக்க வஹ்ஹாபிகளோ அதற்கு “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று பெயர் சொல்வதிலிருந்து அவர்கள் நபீ ஸல் அவர்களைக் கூடப் பிழை கண்டுள்ளார்கள் என்பதும் மண்ணறைகளைத் தரிசிப்பவர்களை “கப்று” வணங்கிகளென்று அவர்கள் சொல்வதிலிருந்து நபீ ஸல் அவர்களையும் “கப்று” வணங்கி என்று சொல்கிறார்கள் என்பதும் விளங்குகிறதல்லவா?

எனவே, இக்கட்டுரையில் மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும் ஆதாரங்கள் எழுதுவதுடன் அந்த வழிகேடர்கள் சொல்வதுபோல் அது எந்த வகையிலும் “கப்று” வணக்கமாகாதென்பதையும், மேலும் மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஏனைய விபரங்களையும் எழுதுகிறேன்.மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஆதாரங்களையும், விளக்கங்களையும் எழுதுமுன் “சியாரதுல் குபூர்” என்ற வசனம் தருகின்ற வெளியரங்கமான, உள்ளரங்கமான கருத்தையும், தத்துவத்தையும் எழுதுகிறேன்.இதைத் தொடர்ந்து மண்ணறைகளைத் தரிசிப்பதன் மூலம் கிடைக்கின்ற பலாபலன்களையும், ஆன்மீக நற்பேறையும் அவ்லியாக்களின் விளக்கத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதுகிறேன்.  சியாறதுல் குபூர் இந்த வசனத்தில் இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்று சியாறத் மற்றது குபூர்.சியாறத் என்ற சொல்லுக்கு சந்தித்தல், தரிசித்தல் என்று பொருள்வரும்.

குபூர் என்ற சொல்லுக்குச் சுருக்கமான பொருள் புதைகுழி என்பதாகும். இது “மையித்” பிரேதத்தைப் புதைக்கும் குழியைக் குறிக்கும். இதை மண்ணறை என்றும் சொல்வர். முஸ்லிம்கள் இதற்கு “கப்று” என்ற அறபுச் சொல்லையே பயன்படுத்துவர். “சியாறதுல் குபூர்” என்ற வசனத்துக்கு புதைகுழிகளை, பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைத் தரிசித்தல் அல்லது சந்தித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த வசனம் நபீ ஸல் அவர்களின் அருள் மொழிகளில் பல இடங்களில் வந்துள்ளது.இந்த வசனம் புதைகுழிகளைச் சந்திப்பதைக் குறிக்குமேயன்றி புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திப்பதைக் குறிக்காது. ஆயினும் இதே வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்வதற்கும் இடமுண்டு. புதை குழிகளைச் சந்திப்பதும், அங்குள்ளவர்களைச் சந்திப்பதும் சந்திக்கச் செல்பவனைப் பொறுத்த விடயமாகும்.அவன் அங்கு அடக்கப்பட்டுள்ளவரைச் சந்திக்குமளவு மனவலிமையும், ஆன்மீகப் பலமும் பெற்றவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். சந்திப்பவன் அங்கு அடக்கப்பட்டவரைச் சந்திக்குமளவு ஆன்மீக சக்தி பெறாதவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். நபீ ஸல் அவர்கள் மேற்கண்ட இருவரையும் கருத்திற் கொண்டுதான் இந்த வசனத்தைக் கொண்டு வந்திருக்கலாமென்று கருத இடமுண்டு.எதைச் சந்தித்தாலும் சந்திப்பில் பொதுவாக நன்மையுண்டு என்பது தெளிவாகிறது.இந்த வசனம் நபீ ஸல் அவர்களால்

زياَرَةُ اَهْلِ الْقُبُوْرِ

புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று சொல்லப்பட்டிருந்தால் ஆன்மீக வலிமை பெறாத சாமானிய மக்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டாமற் போய்விடுமென்பதை அறிந்ததினால்தான் உலக மக்களின் அருளான நபீ ஸல் அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை.இங்கு இன்னுமொரு உண்மை மறைந்திருப்பது அறிஞர்களுக்கு மறைவானதல்ல. அதாவது புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திக்காவிட்டாலும்கூட அக் குழிகளைச் சந்திப்பது மட்டுமே ஒரு வணக்கமென்றும், அதைக் கொண்டு சந்திப்பவனுக்கு நன்மையுண்டு, ஆன்மீகப் பயனும் கிடைக்குமென்றும் விளங்குகிறது.

ஞானிகள் கூறும் ஆன்மீகப் பயன்

அஷ்ஷெய்கு அபூஉத்மான் அல்மக்ரிபீ றஹ் அவர்கள் சொல்லத் தான் கேட்டதாக அஸ்ஸெய்யித் அபுல் மவாஹிப் அஷ்ஷாதுலிய்யி றஹ் அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு வலீயின் “கப்று” சமாதியைத் தரிசித்தால் அங்கு சமாதி கொண்டுள்ள வலீ தரிசிப்பவரை நன்றாக அறிந்து கொள்கிறார். தரிசிப்பவர் அவருக்கு ஸலாம் சொன்னால் அவர் அதற்கு பதில் கூறுகிறார். தரிசிப்பவர் அங்கு அல்லாஹ்வை “திக்று” நினைத்தால் அந்த வலீயும் இவருடன் சேர்ந்து அல்லாஹ்வை நினைக்கிறார். குறிப்பாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் அந்த வலீ எழுந்திருந்து இவருடன் சேர்ந்து “திக்று” செய்கிறார். இறை ஞானிகளின் உள்ளங்கள் விளக்கமின்றி எதையும் அறிவிக்கமாட்டா.

வலீமார் தமது சமாதிகளில் உயிரோடிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த விடயமே. அவர்கள் மரணிப்பதானது பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்குக் குடிபோதல் போன்றதாகும். அவர்கள் உயிருடன் இருந்தபோது எவ்வாறு சங்கையுடனும், கண்ணியத்துடனும் இருந்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் இருக்கிறார்கள். அவர்கள் உலகில் வாழ்ந்த போது மற்றவர்கள் அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். ஒரு வலீ இறைநேசர் மரணித்துவிட்டால் அவருக்காக எல்லா நபீமார்களினதும், வலீமார்களினதும் “அர்வாஹ்” உயிர்கள் ஜனாஸஹ் தொழுகை தொழுகின்றன.வலீமார்களிற் சிலர் தாம் உயிரோடிருந்த காலத்தில் தமது “முரீத்” சிஷ்யர்களுக்கு உதவி உபகாரம் செய்ததை விடத்தாம் மரணித்த பின்னர் அவர்களுக்குக் கூடுதலான உதவி உபகாரம் செய்வார்கள். மரணித்தால் அவர்களின் வலிமை கூடுமேயன்றிக் குறையாது.

மனிதர்களிற் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவர்களாவர். அல்லாஹ் அவர்களை எந்தவொரு வாஸிதஹ் – ஊடாக உதவியுமின்றித்தானே ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அல்லாஹ் அவர்களைத் தனது வலீ – நேசர்கள் மூலம் ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். அந்த வலீ மரணித்தவராயிருந்தாலும் சரியே. அவர் தனது மண்ணறையில் இருந்து கொண்டே தனது சிஷ்யனை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது சிஷ்யனுடன் உரையாடுகிறார். அவனும் அதைக் கேட்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் எந்த ஓர் ஊடக உதவியுமின்றி நபீ ஸல் அவர்களே நேரடியாகக் கண்காணித்து ஆன்மீகத்தில் வளர்த்து வருகிறார்கள். இதற்குக் காரணம் நபீ ஸல் அவர்கள் மீது அவர்கள் அதிகமாக ஸலவாத் சொல்வதேயாகும்.
 சியாரதுல் குபூர் மண்ணறைகளைத் தரிசித்தல். தொடர்-02



ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் அர்றாஸீ றஹ் அவர்கள் தங்களின் அல்மதாலிப் – என்ற நூலில் 13ம் பிரிவில் சமாதிகளைத் தரிசித்து பயன் பெறுதல் என்ற பாடத்தில், ஒரு மனிதன் ஆன்மீகப் பலமும் இறை ஞானத்தில் பூரணத்துவமும் பெற்ற ஒரு வலீயின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு ஒருவன் சென்று அவ்விடத்தைத் தரிசிப்பதன் மூலமும், அங்கு சற்று நேரம் அமைதியாக நிற்பதன் மூலமும் அவன் மனதில் ஒரு திருப்பம் ஏற்படுமாயின் அங்கு சமாதி கொண்டுள்ளவருக்கும், அந்த இடத்துக்கும் ஏதோ ஒருவகைத் தொடர்புண்டு என்பதிலும் அந்த இடத்தைத் தரிசிக்க சென்றவனுக்கும் அங்கு சமாதி கொண்டுள்ளவருக்கும் சந்திப்பு ஏற்படும் என்பதிலும் ஐயமில்லை. அந்த ஆன்மீக வாதியின் உடலை சுமந்துள்ள அந்த மண்ணுக்கு இருவரையும் சந்திக்கச் செய்யும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தரிசிக்கச் சென்றவனின் மனமும், அங்கு சமாதி கொண்டுள்ள வலீயின் மனமும் ஒன்றுக்கொன்று எதிராக வைக்கப்பட்டுள்ள, ஒன்றிலுள்ளது மற்றதில் பிரதிபலிக்கத்தக்க தெளிவான இரு கண்ணாடிகள் போலாகிவிடுகின்றன. தரிசிக்கச் சென்றவனின் மனக் கண்ணாடியிலுள்ள இறை ஞானம், ஆதாரம், கற்றகல்வி, உள்ளச்சம், பக்தி, அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்ளுதல் போன்ற உயர் குணங்கள் எல்லாம் சமாதி கொண்டுள்ள வலீயின் மனக் கண்ணாடியில் பதிவாகின்றன. இதே போல் சமாதி கொண்டுள்ள வலீயின் மனக்கண்ணாடியிலுள்ள எல்லாம் தரிசிக்கச் சென்றவனின் மனக்கண்ணாடியில் பதிவாகின்றன.

 இப்படியொரு விலைமதிப்பற்ற, பெறுதற்கரிதான ஆன்மீகப் பயன் “கப்று” மண்ணறைகளைத் தரிசிப்பதன் மூலம் ஏற்படுவதினால் தான் “சியாரதுல் குபூர்” சமாதிகளை – மண்ணறைகளைத் தரிசிப்பதை இஸ்லாம் வணக்கமாக்கியுள்ளது. சமாதிகளைத் தரிசிப்பதால் கிடைக்கின்ற ஆன்மீகப் பயன்களில் இன்னும்பலஉள்ளன. அவை மேற்கண்ட பயனை விட மிக வலுப்பமானதாயும் சிறப்பானதாயுமிருக்கும். அவற்றை எண்ணிக் கணக்கெடுக்க முடியாது. சமாதிகளைத் தரிசிக்கச் செல்பவர் அங்கு சமாதி கொண்டுள்ளவரை விட ஆன்மீகப் பலம் கூடினவராயும் இருக்கலாம். அல்லது அவரைவிடக் குறைந்தவராயும் இருக்கலாம். தரிசிக்கச் செல்பவர் ஆன்மீகப்பலம் கூடினவராயிருந்தால் அவரைக் கொண்டு சமாதி கொண்டுள்ளவர் பயன் பெறுவார். சமாதி கொண்டுள்ளவர் தரிசிக்கச் செல்பவரைவிட ஆன்மீகப் பலம் கூடினவராயிருந்தால் அவரைக் கொண்டு தரிசிக்கச் செல்பவர் பயன் பெறுவார்.

இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே “சியாரதுல் குபூர்” மண்ணறைகளைத் தரிசிப்பது “ஸுன்னத்” நல்ல வணக்கமென்று இஸ்லாம் கூறியுள்ளது. இஸ்லாம் பொதுவாக மண்ணறைகளில் உள்ளவர்களைச் சந்திப்பது பற்றிக் கூறியிருக்க நம்மில் பலர் வலீமாரின் சமாதிகளுக்கு மட்டும் சென்று அவர்களைத் தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

இது மட்டுமே சியாறத் தரிசித்தல் என்றும் நம்பியுள்ளனர். அடக்கப்பட்டுள்ள சாதாரண மனிதனைத் தரிசிப்பதைவிட ஆன்மீகத்தில் சம்பூரணம் பெற்ற வலீமாரைத் தரிசிப்பது தரிசிக்கச் செல்பவனுக்குப் பயன்தருவது உண்மைதான். ஆயினும் ஆன்மீகப் பலம் குறைந்த ஒருவனை அந்தப் பலன் கூடிய ஒருவன் தரிசிக்கும் போது பலம் குறைந்தவனுக்குப் பயன் கிடைக்கும் என்பதைக் கருத்திற் கொண்டும், பிறருக்கு உதவுதல் வணக்கம் என்ற வகையிலும் அவனையும் – பலம்குறைந்தவனையும் தரிசித்தல் வேண்டும். ஒரு வலீ இன்னொரு வலீயின் சமாதியைத் தரிசிக்கும் போது அதிசயமான பல்வேறு நிகழ்வுகள் நிகழும். நிகழ்ந்தும் உள்ளன. அவை என்னவெனில் – தரிசிக்கப்படுபவர் தரிசிப்பவரை எந்த அளவு கவனிக்கிறார் என்பதும், தரிசிப்பவரை அவர் தனது முழுமையான ஆத்மீகம் கொண்டு நோக்குகிறார் என்பதும், தரிசிப்பவரின் எண்ணத்திற்கேற்பவும், அவனின்முயற்சிக்கேற்பவும் அவர் நோக்கப்படுகிறார் என்பதுமாகும்.

 மரணித்து அடக்கம் செய்யப்படுபவர்களைத் தரிசித்தல் “ஸுன்னத்” ஆன வணக்கமாயிருப்பதுபோல் உயிரோடிருப்பவர்களில் ஒருவரை ஒருவர் சந்திப்பதும் “ஸுன்னத்” ஆன விடயமேயாகும். ஏனெனில் மரணித்தவர்களைத் தரிசிப்பதால் ஏற்படுகின்ற மேற்கண்ட பயன்உயிரோடிருப்பவர்களைத் தரிசிப்பதாலும் ஏற்படும். உயிரோடிருக்கும் ஒருவர் இன்னொருவனைச் சந்திக்கும்போது அவ்விருவருக்குமிடையில் ஆன்மீகத் தொடர்பு ஏற்படுகிறது. மேலே சொன்னதுபோல் அவ்விருவரின் மனமும் ஒன்றுக்கொன்று எதிராகும் போது ஒருவனிலுள்ள ஆன்மீகச் சுடர் மற்றவனின் மனதில் பிரதிபலிக்கிறது.

இதனால் அவ்விருவரில் ஆன்மீகசக்தி குறைந்தவன் கூடியவனைக் கொண்டு பயன் பெறுவான். ஒருவனை ஒருவன் சந்திப்பதன் மூலம் இத்தகைய அரிய பயன் கிடைப்பதினால்த்தான் மக்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதலை இஸ்லாம் வரவேற்கிறது. வௌ்ளிக்கிழமை ஜும்அஹ் தொழுகைக்கு குறைந்தபட்சம் நாற்பது பேர்கள் ஒன்று கூடுவது கடமை என்றும், ஐங்காலத் தொழுகை கூட்டாக நடத்துவது “ஸுன்னத்” என்றும், “ஹஜ்” உடைய காலத்தில் மக்கஹ்வில் உள்ள “அறபஹ்” என்ற இடத்தில் இலட்சக்கணக்கானோர் ஒன்று கூடுவதும், தவாப்,ஸயீ என்ற வணக்கங்கள் செய்யும்போது பெருந்திரளானோர் சேர்வதும் மேற்கண்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு மார்க்கமாக்கப்பட்டவையேயாகும்.

அஷ்ஷெய்கு உத்மான் திம்யாதீ றஹ் அவர்கள் எல்லாக் காலங்களிலும் “தவாப்” என்ற வணக்கம் செய்வார்கள். ஆயினும் அந்த வணக்கத்தை “ஹஜ்” உடைய காலத்தில் செய்வதற்கே பெரிதும் விரும்புவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது சனம் குறைந்த சாதாரண காலத்தில் “தவாப்” செய்யும்போது எனதுள்ளத்தில் கிடைக்கின்ற “நூர்” பிரகாசத்தை விடக் கூடுதலான பிரகாசம் சன நெரிசலான ஹஜ் உடைய காலத்திலேயே கிடைக்கிறது என்று பதில் கூறினார்கள். இதற்குக் காரணம் மனிதர்கள் பெருங்கூட்டமாக ஒன்று கூடும்போது அவர்களில் ஆன்மீகப் பலம் குறைந்தவர்கள் கூடுதலானவர்களைக் கொண்டு பயன் பெறுவதும், ஆன்மீகப் பலம் கூடினவர்கள் குறைந்தவர்களுக்குப் பலன் கொடுப்பதுமேயாகும். இப்பாக்கியம் மக்கள் ஒன்று கூடும் சமயமே கிடைக்கும்.

எனவே “சியாறதுல் குபூர்” மண்ணறைகளைத் தரிசிப்பதில் மேற்கண்ட பயன் இருப்பதினால்தான் நபீ ஸல் அவர்கள் மற்றவர்களின் மண்ணறைக்குச் சென்று அவர்களைத் தரிசித்து அவர்களுக்கு



أَلسَّلاَمُ عَلَيْكُمْ يَادَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَاللهُ بِِكُمْ لاَ حِقُوْنَ

அஸ்ஸலாமு அலைக்கும் யாதாற கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்.

பொருள் – விசுவாசிகளான கூட்டத்தின் வீட்டவர்களே உங்களுக்கு ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுடன் சேர்ந்து கொள்வோம். மண்ணறைகளைத் தரிசிப்பதில் அதிக பயன் இருப்பதினால்தான் மண்ணறைகளைத் தரிசியுங்கள் என்று நபீ ஸல் அவர்கள் மக்களைத் தூண்டினார்கள்.

كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُوْرِ فُزُوْرُوْهَا الْاَنْ فَاِنَّهَا تُذَ كِّرُكُمُ الآخِرَةْ.

மண்ணறைகளைத் தரிசிக்க வேண்டாமென்று நான் உங்களைத் தடுத்திருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் தரிசியுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று நபீ ஸல் அவர்கள் கூறினார்கள்.

வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் மண்ணறைகளைத் தரிசிப்பது “இபாததுல் குபூர்” மண்ணறை வணக்கமாயிருந்தால் நபீ ஸல் அவர்கள் எவரின் மண்ணறையையும் தரிசித்திருக்கவுமாட்டார்கள் தரிசிக்குமாறு மற்றவர்களைத் தூண்டியிருக்கவுமாட்டார்கள். அது மட்டுமன்று, மண்ணறையிலுள்ளவர்களுக்குச் சொல்லப்படும் ஸலாமை அவர்கள் செவிமடுக்கமாட்டார்கள் என்றிருந்தால் நபீ (ஸல்) அவர்கள் அவ்வாறு ஸலாம் சொல்லியிருக்கவுமாட்டார்கள்.

நபீ ஸல் அவர்கள் மண்ணறைகளைத் தரிசித்தும், அதைத் தரிசிக்குமாறு மற்றவர்களைத் தூண்டியும், அவர்களுக்கு ஸலாம் சொல்லியுமிருக்க நீங்கள் இதையெல்லாம் ஏன் மறுக்கிறீர்கள்? தர்ஹா பக்கம் போகிறீர்களில்லையே? கப்றுகளை சியாறத் செய்பவர்களைக் கப்று வணங்கிகள் என்று சொல்கிறீர்களே என்று வஹ்ஹாபிகளிடம் கேட்டால் நாங்கள் கப்றுகளைத் தரிசிப்பதை மறுக்கவில்லை. ஆனால் அங்கு நடைபெறுகின்ற அனாச்சாரங்களையும், பித்அத்துக்களையுமே மறுக்கிறோம் என்று சொல்கிறார்கள். கப்றின் மீது போர்வை போடுதல், சந்தணம் பூசுதல், மாலை போடுதல், விளக்கெரித்தல், கப்றை முத்தமிடுதல், சமாதி கொண்டுள்ளவர்களிடம் நேரடியாக உதவி தேடுதல், ஊதுபத்தி சாம்புறாணி எரித்தல் போன்றவற்றையே வஹ்ஹாபிகள் அனாச்சாரங்கள். பித்அத்துகள் என்று கூறுகிறார்கள்.

திருக்குர்ஆனையும், நபீமொழிகளையும் தூய மனதுடன் ஆழமாக ஆராய்ந்தால் வஹ்ஹாபிகள் அனாச்சாரங்கள் என்று கூறுகின்ற எல்லாமே நல்ல விடயங்கள் என்பதும், அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டு என்பதும் தெளிவாகும். அவ்வாதாரங்களை இந்த இடத்தில் விபரமாக நான் எழுதவில்லை. ஆயினும் ஒரேயொரு திருக்குர்ஆன் வசனத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன். இவ்வசனம் ஒன்றே வஹ்ஹாபிகளின் வாயை அடைப்பதற்குப் போதுமென்று நம்புகிறேன்.

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللهِ فَاِنَّهَامِنَ تَقْوَى الْقُلُوْبِ

எவன் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறானோ அது அவனுள்ளத்தின் “தக்வா” இறையச்சமாகும். - திருக்குர்ஆன் –

எந்தவொரு படைப்பு அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் எனப்படும். இது “அவாமுன்னாஸ்” என்னும் சாமானிய மனிதர்களுக்குப் பொருத்தமான கருத்து. ஆனால் இறைஞானிகளிடம் படைப்பு எதுவாயினும் அது அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சின்னமேயாகும்.

 وَفِيْ كُلِّ شَيْئٍ لَهُ آيَةٌ تَدُلُّ عَلَى اَنَّهُ وَاحِدٌ ஒவ்வொரு வஸ்தும் அவன் ஒருவனென்று காட்டுகிறது.

No comments:

Post a Comment