Popular Posts

Wednesday 7 December 2016

நாயகமே_ﷺ_உங்கள்_நேசத்தைத்_தவிர_என்னிடம்_எந்தச்_சமாதானமும்_இல்லை_என்று_செல்லலாமா

#நாயகமே_ﷺ_உங்கள்_நேசத்தைத்_தவிர_என்னிடம்_எந்தச்_சமாதானமும்_இல்லை_என்று_செல்லலாமா?  _________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (32) __________________________________

*♣ உண்மையாகவே நீங்கள் அனைத்துப் படைப்பினங்களுக்கும் இரட்சகராக இருக்கிறீர்கள் இதுபோன்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
( திருக்குர்ஆன் 21:107) இந்த குர் ஆன் வசனம் தெரியாமல் இருந்து கொண்டு ஸுப்ஹான மவ்லித்தில் தவறு என்று கூறுவது மிகப் பெரும் உங்கள் தவறாகும்.​

*♣ உங்கள் நேசத்தைத் தவிர என்னிடம் எந்தச் சமாதானமும் இல்லை. எனவே உங்கள் அதிகப்படியான வள்ளல் தன்மையில் எனக்கு வழங்குங்கள் என்னைப் பாக்கியவானாக ஆக்குங்கள் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?​*

உண்மையில் முஃமீன்கள், முஸ்லிம்கள் என்றால் யார்? வெறுமனே வாயால் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் ஈமான் கொள்பவர்களா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் உண்மையாக உள்ளத்தால் ஈமான் கொண்டு, அவர்களது ஸிபத்துகளை அதாவது அவர்களுடைய பண்புகளை உள்ளதை உள்ளபடி உளப்பூர்வமாக ஏற்று ஈமான் கொண்டு, இன்னும் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் தனது உயிரை விடவும் மேலாக நேசித்து, அவர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்பவர்களே உண்மையான முஸ்லிம்களாவார்கள்.

♦ அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது: “இந்நபியாகிறவர் முஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார்கள்.” (சூரா 33:6) அன்பியாக்களுக்கு அடுத்தபடியாக எல்லா உம்மத்துகளிலும் உயர்ந்த அந்தஸ்தையுடையவர்கள் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான். ஸுன்னத் வல் ஜமாஅத்தினரான எமது அகீதா இதுதான். இந்தளவு கௌரவத்தை, உயர்வை ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எது பெற்றுக்கொடுத்ததென்றால் அது அவர்களின் பூரணமான ஈமானே காரணமாகும். ​

♦ (நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.(அல்குர்ஆன் 9:24) அல்லாஹ்வின் இந்த அறிவிப்பிலே மேற்காணும் எல்லோரையும் விட, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அன்பு குறைந்து விடுபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை தரப்பட்டுள்ளதை காண்கிறோம்.

​♦ 'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார் (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) (நூல்: புகாரி 16, முஸ்லிம்) ​

♦ மனைவி, மக்களையும் பெற்றோரையும், மக்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களை நேசிப்பது கடமை, அவ்வாறு அல்லாஹ்வின் தூதரை இந்த அளவு நேசிக்காதவரிடம் இறைநம்பிக்கை இல்லை என்று கூறலாம். இதைத்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “யாருக்கு என் மீது முஹப்பத் இல்லையோ, அவருக்கு ஈமான் இல்லை.” என்பதாக. மேலும் கூறினார்கள்: “நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் முஃமீனாக முடியாது".(நூல்கள்: புகாரி 14,15, முஸ்லிம் 44–69,70, இப்னு மாஜா 67, நஸஈ 50–43, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7)​

♦ (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும். அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 3589)

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போரில் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள். அவர்களில் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார். அறிவிப்பவர் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு (நூல் முஸ்லிம் 5447)

♣  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் அன்பை பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள் எனது அன்பை பெற விரும்பினால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள். அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ ஸயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு (நூல்: திர்மிதி 3814,மிஷ்காத் 573)

​♣ உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள், அண்ணலாரின் சமூகத்தில் ஒரு தடவை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எனது உயிரை தவிர மற்ற எல்லாவற்றையும் விட தாங்களே எனக்கு அதிகம் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றீர்கள்”! தனது உயிரை விட என்னை அதிகமாக நேசிக்காத வரை ஒருவர், பூரணமான விசுவாசியாக மாட்டார்” என்று அண்ணலார் அதற்கு பதிலாகக் கூறினார்கள். உடனே, உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் என்னுயிரை விட இப்பொழுது அதிகப்பிரியமுள்ளவராக இருக்கிறீர்கள்! என்றார்கள். “ஓ உமரே! இப்பொழுது தான்!” என்று அண்ணலார் கூறினார்கள். ​​இக்கூற்றுக்கு மார்க்க மேதைகள், இருவிதமான பொருள்களைக் கூறுகிறார்கள். முதலாவது! ஓ உமரே! இப்பெழுதான் உமது விசுவாசம் பரிபூரணமாயிற்று. இரண்டாவது! ஓ உமரே! இப்பொழுதான் நான் எச்சரித்த பிறகுதான், உமதுயிரைவிட என்னை அதிகமாக நேசிப்பதாக கூறுகிறீர்கள்! இவ்வாறு முன்பே ஏற்பட்டிருக்க கூடாதோ?

எனவே அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது நாம் உண்மையான அன்பு கொள்வதாயின், அவர்களை ஒவ்வொரு விஷயத்திலும் நாம் முழுக்க முழுக்கப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொற்படி நடக்க வேண்டும்; செய்த முன்மாதிரிகளையே பின்பற்றிச் செய்ய வேண்டும். எதனை விட்டு தடுத்தார்களோ அதனை அறவே விட்டுவிட வேண்டும். சுகத்திலும், துக்கத்திலும், வறுமையிலும், செல்வத்திலும், எந்த நிலையிலும் அண்ணலாரையே பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். இதனைக் குறித்து அல்லாஹுத்தஆலா திருக்குர் ஆனில் பின்வறுமாறு கூறியுள்ளான். நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றி நடப்பீர்களாக, அப்பொழுதுதான், அல்லாஹ் உங்களை நேசித்து, உங்கள் குற்றங்களை மன்னிப்பான் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன் கிருபை உள்ளவன் என்று (நபியே! முஸ்லிம்களுக்கு) கூறுவீராக’’(அல்குர்ஆன் 3;31) ​

இதேபோன்று ஸஹாபாக்கள் மட்டுமல்ல பின்னால் வந்த அனைத்து இஸ்லாமிய பெரியார்களும் வலிமார்களும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அளவு கடந்த அன்பும், கண்ணியத்தையும் கொண்டிருந்தார்கள். அதனாலேயே அவர்களின் ஈமான் பரிபூரணமடைந்தது. அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தையும், பெற்றுக்கொண்டுத்தது. இதையே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “நீங்கள் யாரை முஹப்பத் வைக்கிறீர்களோ, அவர்களுடன் நாளை கியாமத்தில் இருப்பீர்கள்.”

ஆகவே நாம் அல்லாஹ்வின் நேசத்தை திருப்தியை பெற்ற நல்லடியார்களாக வாழ்ந்திட வேண்டுமாயின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நமது உயிருக்கும் மேலாக நேசிக்க வேண்டும் அதிகம் அதிகம் ஸலவாத்தை ஓதி அன்னவர்களின் அன்பை பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே நம்மையும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நம் உயிரை விட நேசித்த கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவானாக!!! மேலும் இதன் மூலம் நம் அனைவரையும் அல்லாஹ் பரிபூரணமடைந்த முஃமீன்களாக ஆக்கியருள்வானாக! ஆமீன்.​

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*​

No comments:

Post a Comment