Popular Posts

Sunday 29 January 2017

இஸ்லாத்தின் பார்வையில் மரணித்த பின்பும் நபிமார்கள், ஷூஹதாக்கள் வலிமார்கள் கப்ருகளில் இருந்து கொண்டு நாம் பேசுவதை செவியேற்கின்றார்களா? என்பது பற்றி ஓர் ஆய்வு

🌾 *"இஸ்லாத்தின் பார்வையில் மரணித்த பின்பும் நபிமார்கள், ஷூஹதாக்கள் வலிமார்கள் கப்ருகளில் இருந்து கொண்டு நாம் பேசுவதை செவியேற்கின்றார்களா? என்பது பற்றி ஓர் ஆய்வு"🌾*

♣ *இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் தவரான வாதங்களுக்கு தக்க பதில்கள்*

மரணித்த பின் நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள் கப்ருகளில் மண்ணுடன் மண்ணாகி விட்டபடியால் உயிருள்ளவர்களின் அழைப்பை அவர்கள் கேட்க மாட்டார்கள் என்போரும் தமது வாதத்துக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை மேலோட்டமாகப் பார்த்து விட்டு தவரான முறையில் புரிந்து கொண்டு ஆதாராமாக முன்வைக்கின்றார்கள்.

♦ உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், நீங்கள் கப்றுகளில் இருப்பவர்களுக்கு கேட்கச் செய்பவர்கள் அல்லர்.(அல்குர்ஆன்35: 22) 

♦ நிச்சயமாக  நீங்கள் மரணித்தவர்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்கள் (மரணித்தவர்களுக்குக் கேட்கச் செய்ய உங்களால் முடியாது) இன்னும் செவிடர்கள் பின் காட்டிச் சென்றார்களாயின் அவர்களுக்கும் உங்கள் அழைப்பைக் கேட்கச் செய்ய மாட்டீர்கள் (அவர்களுக்கும் உங்களால் கேட்கச் செய்யமுடியாது), இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர். (அல்குர்ஆன்  27: 80,81) 

மேற்கண்ட திருவசனங்கள் இரண்டையும் மேலோட்டமாகப் பார்த்தால் உயிருள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்றும், அவர்களின் பேச்சை விளங்கிக் கொள்ள மாட்டார்கள் என்றும் விளங்கவரும். அறிஞர்கள் என்று இன்று பிரசித்தி பெற்ற வழிகேடர்கள் இவ்வாறே விளங்கியுமுள்ளார்கள். உயிருள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்றும் கொக்கரிக்கும் கொள்கைக் குருடர்கள் மேற்கண்ட திருவசனங்கள் இரண்டையுமே தமது வாதத்துக்கு இரும்புத் துருப்பாகக் கொண்டுள்ளார்கள். இவ்விரு வசனங்களையும் வைத்துக் கொண்டே ஒற்றைக் காலில் நின்று கூச்சலிடுகின்றார்கள். 

இந்தக் கொள்கைக் குருடர்கள் மேற்கண்ட இரு வசனங்களையும் இலக்கண, இலக்கிய அடிப்படையில் ஆய்வு செய்யும் முன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் "உலகமக்களில் மிக அறிஞர் என்பதையும், முன்னோர் பின்னோர் (கொள்கைக் குருடர்கள் உட்பட) யாவரின் அறிவையும் அறிந்தவர்கள்" என்ற தாற்பரியத்தையும் விளக்கத்தையும் அனைவரை விடவும் அதிகம் அறிந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.உயிருள்ளவர்களின் அழைப்பையும் பேச்சையும் மரணித்தவர்கள் கேட்கின்றார்கள் என்ற பலம் வாய்ந்த நபி மொழிக்கு “ஸியாரத்“ தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளுக்கும் மேற்கண்ட (35-22, 27-80) ஆகிய திருவசனங்கள் முரணாகமாட்டாது. மேற்கண்ட திருவசனங்களில் முதலாவது வசனத்தில் 'முஸ்மிஉன்' என்ற சொல்லும், இரண்டாவது வசனத்தில் 'துஸ்மிஉ' என்ற சொல்லும் வந்துள்ளன. இவ்விரு சொற்களும் ஒரே சொல்லின் வேறு இரு தோற்றங்களாகும். இவ்விரு சொற்களும் “அஸ்மஅ” என்ற சொல்லடியிலுள்ளவையாகும்.

“அஸ்மஅ“ என்ற சொல்லுக்கு கேட்கச் செய்தான் என்று பொருள் வரும். “ஸமிஅ“என்ற சொல்லுக்கு கேட்டான் என்று பொருள் வரும். அறபு மொழிச் சொல்லிலக்கணத்தில் “அஸ்மஅ“ என்ற சொல் “முதஅத்தீ“ என்றும் “ஸமிஅ“ என்ற சொல் “லாசிம்“ என்றும் சொல்லப்படும். “அஸ்மஅ“ என்ற சொல்லுக்கு ஒருவன் தனது அழைப்பை அல்லது பேச்சை பிறருக்குக் கேட்கச் செய்தான் என்று பொருள் கொள்ள வேண்டும். இப்பொருள் தவிர இச்சொல்லுக்குவேறு பொருள் கிடையாது. இதன் முந்தின வசனத்துக்கு கப்றுகளில் உள்ளவர்களுக்கு நீங்கள் கேட்கச் செய்பவர்கள் அல்லர் என்று பொருளும், இரண்டாம் வசனத்துக்கு நீங்கள் மரணித்தவர்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்கள் இன்னும் செவிடர்கள் பின்காட்டிச் சென்றார்களாயின் அவர்களுக்கு அழைப்பை கேட்கச் செய்யவுமாட்டீர்கள் என்ற பொருளும் வரும். “அல்இஸ்மாஉ“ கேட்கச் செய்தல் என்பது அல்லாஹ் தவிர வேறு எவருக்கும் முடிந்த காரியமில்லை. ஒருவனின் அழைப்பை அல்லது பேச்சை இன்னொருவனுக்குக் கேட்கச் செய்தல் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே முடிந்த காரியம். மரணித்தவர்களுக்கு மட்டுமன்றி உயிரள்ளவர்களுக்குக் கூட ஓர் அழைப்பை அல்லது பேச்சைக் கேட்கச் செய்தல் என்பது அல்லாஹ்வால் மட்டும் முடிந்ததேயன்றி வேறு எவராலும் முடிந்ததல்ல. 

மேற்கன்ட இரண்டு வசனங்கள் மூலமும் அல்லாஹ் வலியுறுத்தும் கருத்து என்னவெனில், உயிருள்ளவனால் தனது அழைப்பையும்,பேச்சையும் மரணித்தவனுக்குக் கேட்கச் செய்ய முடியாதென்பது மட்டுமேயாகும். ஏனெனில் கேட்கச் செய்தல், எட்டிவைத்தல் என்பன அல்லாஹ்வால் மாத்திரம் முடிந்தவையாகும் இது தவிர மரணித்தவனை அழைக்கக் கூடாதென்பதோ, அவர்களுக்கு அழைப்புக் கேட்காதென்பதோ அல்ல. மேற்கண்ட இரு வசனங்களிளும் இப்படியொரு கருத்தின் வாடை கூட இல்லை.மேற்கன்ட திருவசனம் ஒரு வைத்தியனிடம் உன்னால் இந்நோயைச் சுகப்படுத்தி வைக்க முடியாதென்று சொல்வது போன்றாகும். ஒரு வைத்தியனால் மருந்து மட்டும்தான் கொடுக்க முடியுமேயன்றி அவனால் சுகமாக்கி வைக்க முடியாது. சுகமாக்கி வைத்தல் அல்லாஹ்வால் மட்டும் முடிந்ததாகும். ஒரு வைத்தியனிடம் உன்னால் இந்நோயைச் சுகப்படுத்த முடியாதென்று சொல்வதால் வைத்தியனிடம் மருந்து கேட்கக் கூடாது என்று கருத்து வந்து விடாது. 

இவ்வாறு தான் மேற்கண்ட திருவசனங்களின் கருத்துமாகும்.கப்றுகளில் உள்ளவர்களுக்கு உங்களால் கேட்கச் செய்ய முடியாதென்பதாலும், மரணித்தவர்களுக்கு உங்களால் கேட்கச் செய்யமுடியா தென்பதாலும் செவிடர்கள் பின்காட்டி சென்றார்களாயின் அவர்களுக்கு அழைப்பை உங்களால் கேட்கச் செய்யமுடியா தென்பதாலும் அவர்களை அழைக்கூடாதென்ற கருத்தோ, அவர்களுடன் பேசக்கூடாதென்ற கருத்தோ அவர்கள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்தோ வந்து விடாது. உண்மை இவ்வாறிருக்க உயிருள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்களால் கேட்க முடியாதென்றும் அவர்களுடன் பேச முடியாதென்றும் திருக்குர்ஆன் வசனங்களைப் பிழையாக விளங்கிக் கொண்டு தாம் சொல்வதே தூய இஸ்லாம் என்றும் இதுவே திருக்குர்ஆனினதும் ஸுன்னஹ்வினதும், வழி என்றும் சொல்வோர் சற்றுத் தெளிவு பெற வேண்டும். 

இன்னுமொரு விடயம் இங்கு மிக நுட்பமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அதாவது மேற்கண்ட இரண்டு திரு வசனங்களிலும் முந்தின வசனத்தில் வந்துள்ள 'கப்றுகளில் இருப்பவர்கள்' என்பதும், இரண்டாவது வசனத்தில் வந்துள்ள 'மரணித்தவர்கள்' என்பதும் எதார்த்தத்தில் மரணித்தவர்களையோ, குழியிலிடப்பட்டவர்களையோ குறிக்கவில்லை. இவ்வுண்மை புரியாதோர்தான் மயக்கத்தில் மாட்டி மதியிழந்து உளறுகின்றார்கள். “மன்பில் குபுர்“ கப்றுகளில் இருப்பவர்கள் என்றும், “அல்மௌதா“ மரணித்தவர்கள் என்றும் சுட்டப்பட்டிருப்பது “கல்பு“ என்று மனக்கண் குருடானவர்களேயன்றி எதார்த்தத்தில் மரணித்தவர்களல்லர். ஆயினும் அல்லாஹ் இப்படியோரு பாணியைக் கையாண்டிருப்பதில் ஏதோ இரகசியம் இருக்காமற் போகாது.

சுருங்கக் கூறின் – மனக்கண் குருடானவர்கள் எதார்த்தத்தில் மரணிக்காதவர்களாயினும் மரணித்தவர்களுக்கு அவர்களை ஒப்பிட்டுப் பேசியிருப்பது அவர்கள் உயிரற்ற வெறும் சடலங்கள் என்பதை உணர்த்துவதற்காகவும் மனக்கண் தெளிவானவன் மட்டுமே உயிருள்ளவன் என்பதை உணரத்துவதற்காகவுமேயாகும். இது ஒருவனைச் சுட்டி இவன் மாடு போல் நல்ல மனிதன் என்றும், நாய் போல் நன்றியுள்ளவன் என்றும் சொல்வது போன்றது. மனக்கண் குருடானோரை செத்துப் போனவர்கள் எனக் கூறி அவர்களை இழிவு படுத்தி நையப்புடைத்திருக்கும் பாணி விந்தை மிகுந்தது. (விந்தை மிக்கது.) இதுவே திரு வசனங்கிளில் உள்ள நுட்பம். இதைச் சரியாக விளங்கிக் கொண்டால் மரணித்தவர்கள் உயிரோடுள்ளவர்களின் அழைப்பை கேட்கின்றார்களா? இல்லையா? அவர்களின் பேச்சை விளங்கிக் கொள்கின்றார்களா இல்லையா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும். இப்படியொரு சர்ச்சையும் இல்லாமல் போய்விடும். 

அந்த அடிப்படையில் மேலே உள்ள இரண்டு வசனங்களிலும் மரணித்தவர்கள் என்று இறைவன் கூறுவது 'உயிருடனுள்ள ஆனாலும் “கல்பு“ என்று மனக்கண் குருடான, வழிகேட்டில் மூள்கிய காபிர்களையும் முனாஃபிகீன்களையும் (வழிகேடர்களையும்) மரணித்தவர்களின் இடத்தில் வைத்து  கூறியுள்ளான். இப்படி இறைவன் கூறுவதற்கான காரணம் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையும் ஈமான் கொள்ளாமல் புரகனித்து சத்தியத்தை விட்டு அசத்தியத்தில் உள்ள காபிர்களையும், முனாஃபிகீன்களையும் இழிவுபடுத்துவதும் ஒரு நோக்கமாகும். அந்த அடிப்படையில் தான் மேலே உள்ள குர்ஆன் வசனங்களின் முன் பின் வசனங்களை பாருங்கள் காபிர்களையும், முனாஃபிகீன்களையும் பற்றி கூறும் வசனங்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

♦ *இவ்வாறு குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்ட நிறைய வசனங்கள் உள்ளன*

(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 2:18)

நன்றாகவே செவியேற்பவர்களை செவிடர்கள் என்றும் நன்றாகவே பேசுபவர்களை ஊமையர்கள் என்றும், அழகிய கண்பார்வை உள்ளவர்களை குருடர்கள் என்றும் இறைவன் குர்ஆனில் பல இடங்களில் காபிர்களை, முனாபிகீன்களை, இழிவுபடுத்தி கூறியுள்ளான். இறைவனையும், அவனது தூதரையும் ஏற்றுக்கொள்ளாத காபிர்களை, முனாஃபிகீன்களை இறைவன் 'அவர்களை செவுடர்கள், குருடர்கள், மூமையர்கள், மரணித்தவர்கள்' என பல இடங்களில் கூறியுள்ளான். அந்த அடிப்படையில்தான் மேலே கூறப்பட்ட அந்த குர்ஆன் வசனத்தின் விளக்கங்களின் உள்ளவையாகும்.

ஆகவே முஃமீன்களும் காபிர்களும் சமமாவார்களா? நபியே அவர்களை நேர்வழியின் பக்கம் அழைத்தால் அவர்கள் அதனை செவிகைற்றமாட்டார்கள்
அதாவது உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வழிகேட்டில் மரணித்தவர்கள் அவர்களால் எந்த ஒரு பிரோஜனமுமில்லை அதனால் அவர்கள் மரணித்தவர்கள் கப்ராளிகள் என்று இழிவிபடுத்தி இறைவன் உவமாணமாக கூறுகிறான் (நூல் : தப்ஸீருல் குர்துபியீ, தப்ஸீர் இப்னு ஹஸீர்)

♣ *மரணித்தவர்களுக்கு கேட்கும் சக்தி உண்டு*

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதனின் உடலை கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களின் செருப்பின் ஓசையை கூட மய்யித் கேட்கும். அறிவிப்பவர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 1338, முஸ்லிம் 5115

♦ அல்லாஹ்வின் தூதரே! கப்றுகளை தரிசிக்கும் போது நான் எவ்வாறு சொல்ல வேண்டும் என்று ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட போது 'அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன வயர்ஹமுல்லாஹு அல்முஸ்தக்தமீன மின்கும் வல்முஸ்தஹ்கிரீன வயின்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்' என்று சொல்ல வேண்டும் என்று கூறினார்கள். (நூல் – முஸ்லிம்,அல்அக்தார் பக்கம் – 152)
 
♦ “கப்று” களை ஸியாரத் – தரிசிக்கும் ஒருவன் திருக்குர்ஆன் திக்ர் போன்றவற்றை அதிகம் செய்வதும் அந்த மையவாடியில் உள்ளவர்களுக்காவும், ஏனைய முஸ்லிம்களுக்காகவும் துஆ கேட்பதும் “ஸுன்னத்” ஆகும். அதேபோல் அதிகம் “ஸியாரத்” செய்வதும் நல்லடியார்கள் வலிமார்களின் “கப்று“களிடம் அதிக நேரம் – தங்கி நிற்பதும் ”ஸுன்னத்”ஆகும். (நூல் – அல்அத்கார், பக்கம் – 152)

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் உள்ள அடக்கத்தலங்களைக் கடந்து சென்றபோது அவற்றை நேராக நோக்கி, ''அஸ்ஸலாமு அலைக்கும் யாஅஹ்லல்குபூர், யக்ஃபிருல்லாஹு லன வலகும். அன்தும் ஸலஃபுனா வ நஹ்னு பில்அஃதர்'' என்று கூறினார்கள். (நூல் திர்மிதீ 973)

ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ள துஆவின் பொருள்:- "அடக்கத்தலங்களில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். எங்களையும் உங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக! நீங்கள் எங்களை முந்தி விட்டீர்கள். நாங்கள் பின்னால் வரக்கூடியவர்களாக இருக்கிறோம்.) மரணித்தவர்களைப் பின் தொடர்ந்து உயிருடன் இருப்பவரும் ஒரு நாள் மரணிப்பவரே! அதாவது, முன்னால் மரணத்திவரின் சுவடைப் பின்பற்றி உயிருடன் இருப்பவரும் மரணிப்பார்"
மரணித்தவர்கள் நன்றாக செவியேற்ப்பார்கள் அவ்வாறு இல்லையன்றால் அடக்கஸ்தலத்திற்கு சென்று கப்ராளிகளுக்கு ஸலாம் சொல்வது வீணானதாக போய்விடும் எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வீணான ஒன்றை மார்க்கமாக ஆக்கிருப்பார்களா?

அந்த அடிப்படையில் மேற்கண்ட நபி மொழிகள் மூலம் மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்கள் உயிரோடுள்ளவர்களின் அழைப்பையும் பேச்சையும் கேட்கின்றார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது. இதற்கு அழைக்கப்படுவோர் ஷுஹதாக்களாக வலிமார்களாக இருக்க வேண்டுமென்பது விதியல்ல. “காபிர்” உட்பட எவரும்“ கேட்பார்கள் என்பதே ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் தீர்க்கமான முடிவாகும். உயிரோடுள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்று வைத்துக் கொண்டால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “பத்ர்” யுத்தகளத்தில் குழியிடப்பட்டிருந்த இருபத்து நான்கு பேர்களின் பெயர்கள் சொல்லி அழைத்ததும் அவர்களுடன் பேசினதும் அர்த்தமற்ற வீணான செயலாகி விடும். அது மட்டுமன்றி உங்களை விட அவர்கள் மிக நன்றாகக் கேட்கின்றார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சொன்னதும் அர்த்தமற்ற வீணான சொல்லாகி விடும்.நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸியாறங்களுக்குச் சென்று அடக்கப்பட்ட நல்லடியார்களுக்கு ஸலாம் சொன்னதும், ஸலாம் சொல்லுமாறும், கப்றுகளை “ஸியாரத்” செய்யுமாறும் மக்களை ஏவினதும் அர்த்தமற்ற வீணான செயலாகி விடும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அர்த்தமற்ற வீணான எந்த ஒரு வேலையும் செய்ததற்கு ஆதாரமே இல்லை. 

♦ இறந்தவரின் உடலை கப்றில் வைத்து நல்லடக்கம் செய்த பின் ஒருவர் அடக்கப்பட்டவரின் தலைமாட்டில் அமர்ந்து, இன்னார் மகனே! அல்லது இன்னார் மகளே! இறைவன் ஒருவன் என்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஈமான் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மறு உலகாகிய மறுமைக்கு சென்றுள்ளாய். இப்போது உன்னிடம் இரு மலக்குகள் வந்து உனது நாயன் யார்?
உனது நபி யார்? உனது சகோதரர்கள் யார்? உனது கிப்லா எது? உனது இமாம் யார்? என்று கேட்பர். அதற்கு நீர் கொஞ்சமும் தயங்காது தைரியமாக எனது றப்பு அல்லாஹ், எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ,
எனது சகோதரர்கள் முஸ்லிம்கள்,
எனது கிப்லா கஃபா, எனது இமாம் குர்ஆன் என்று சொல்வீராக! என்று சொல்லிய பின் அவரை விட்டும் விடைபெறுவது என்பதாகும். அதனை அவர் கேட்பார். (நூல் தப்றானி)

♦ தொழுகையில் அத்தஹியாத்தில் நபிகள் நாயகம் அவர்கள் மீது ஸலாம் சொல்வது கட்டாயமாகும் அவ்வாறு ஸலாம் சொல்லவில்லை என்றால் தொழுகையை கூடாது எனவே தொழுகையில் நாம் சொல்லும் ஸலாமை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கின்றார்கள் இன்னும் பதிலும் சொல்கிறார்கள் அவ்வாறு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நமது ஸலாத்தை கேட்க மாட்டார்கள் என்றால் அத்தஹியாத்தில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை முன்னிலைப்படுத்தி  ஸலாம் சொல்வது என்பது வீணாகி விடும்
எனவே வீணான ஒன்றை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கமாகிருப்பார்களா?

♦ எனது ஹயாத்தும் உங்களுக்கு நன்மையானது எனது மரணமும் உங்களுக்கு நன்மையானது ஏனெனில் உங்களுக்குடைய அமல்களை என்மீது எடுத்துக் காட்டப்படுகிறது அது நன்மையானதாக இருந்தால் அல்லாஹ்வைப் புகழ்வேன் தீமையானதாக இருந்தால் உங்களுக்கு பிழை பொறுக்கத் தேடுவேன்
(நூல் மஜ்மவுஸ்ஸவாயித் பாகம் 9 பக்கம் 24,அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 581)

♦ அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
யார் என் மீது ஸலாம் சொன்னாலும் அல்லாஹ்வுதாலா அந்த ஸலாத்தை அறியக்கூடிய அறிவாற்றலை எனக்கு தந்துள்ளான் அவருடைய ஸலாத்திற்கு நான் பதில் சொல்கிறேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
(நூல் அபூதாவூத் 1745)

♦“பத்று“ப் போரில் சுமார் 70 “காபிர்”கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர்கள் குறைஷித் தலைவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்  அவர்கள், அவர்களின் உடல்களை மட்டும் ஒரு பாழுங் கிணற்றில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள்.
பின்னர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (24 பிரேதங்களையும்) நோக்கி (அந்தக் கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்து)  இன்னான் மகன் இன்னானே! இன்னான் மகன் இன்னானே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலியல்லாஹு அன்ஹு), ”இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர், ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 1370, 3976)

மேற்கண்ட நபி மொழி வேறு பல ஹதீதுக் கிரந்தங்களிலும் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அவர்கள் மரணித்து மூன்று நாட்களின் பின் அவர்களை அழைக்கின்றீர்களே! அவர்களுக்கு கேட்குமா? (மரணித்தவர்களுக்குக் கேட்கச் செய்ய முடியாதென்று அல்லாஹ் சொல்லியிருக்கின்றானே? என்று சொன்னார்கள்.) அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஹம்மதுடைய உயிர் எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் சொல்வதை நீங்கள் கேட்பதை விட அவர்களே நன்றாகக் கேட்கின்றனர். ஆயினும் அவர்கள் பதில் கூற மாட்டார்கள். (நூல் – பத்ஹுல்பாரீ,பக்கம் – 346 மேற்கண்ட பலம் வாய்ந்த நபி மொழி மூலம் உயிரோடிருப்பவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கின்றார்கள். விளங்கியும் கொள்கிறார்கள் என்ற உண்மை தெளிவாகின்றது.

உயிரோடுள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்று வைத்துக் கொண்டால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “பத்ர்” யுத்தகளத்தில் குழியிடப்பட்டிருந்த இருபத்து நான்கு பேர்களின் பெயர்கள் சொல்லி அழைத்ததும் அவர்களுடன் பேசினதும் அர்த்தமற்ற வீணான செயலாகி விடும். அது மட்டுமன்றி உங்களை விட அவர்கள் மிக நன்றாகக் கேட்கின்றார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சொன்னதும் அர்த்தமற்ற வீணான சொல்லாகி விடும்

எனவே கப்ரில் உள்ள நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள் உயிருடன் வாழ்கிறார்கள் நாம் பேசுவதை தெளிவாக செவியேற்கின்றார்கள், இன்னும் நாம் செய்யும் விடயங்களையும் பார்க்கின்றார்கள்.

♣ *மரணித்தவர்களுக்கு பேசும் சக்தி உண்டு*

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒரு ஜனாஸா (சந்தூக்கில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அது நல் அமல்கள் செய்த மைய்யித்தாக இருந்தால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும்”. அது நற்செயல்கள் செய்யாத (மைய்யித்) தாக இருந்தால் “கை சேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இந்த சப்தத்தை மனிதனைத் தவிரவுள்ள அனைத்தும் செவிமடுக்கும். மனிதன் செவிமெடுத்தால் மயங்கி விழுந்து விடுவான்.அறிவிப்பவர் அபூசயீதுல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 1316)

♦ ஹழ்ரத் கஃபு (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தபோது உம்மு பிஷ்ரு (ரலியல்லாஹு அன்ஹு) என்ற பெண்மணி (கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருகே இருந்து கொண்டு) அப்துர் ரஹ்மானின் தந்தை அவர்களே! (தாங்கள் மரணித்து கபுரில் அடக்கம் செய்யப்பட பின்) இன்ன ஆளை சந்தித்தால் குறிப்பாக அவருக்கு எனது ஸலாமைச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். (நூல் இப்னுமாஜா 1449, மிஷ்காத் 1631)

♦ நான் ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சமூகத்திற்கு சென்றேன். அப்போது அவர்கள் மரணத் தறுவாயில் இருந்தார்கள். நான் அவர்களிடம், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு எனது ஸலாமைச் சொல்லி விடுங்கள் என்று கூறினேன். அறிவிப்பவர் ஹழ்ரத் முஹம்மது இப்னுல் முன்கதிர் ரலியல்லாஹு அன்ஹு (நூல் மிஷ்காத் 1633,  இப்னுமாஜா 1450)

♣ *மரணித்தவர்களுக்கு பார்க்கும் சக்தி உண்டு*

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், என் தந்தையார் அவர்களையும், ஸியாரத் செய்வதற்காக செல்வேன். சாதாரணமாக உடை அணிந்த நிலையில். (மற்றவர்களிடம்) அங்கிருப்பது என் கணவரும் என் தந்தையும்தான் என்பேன். ஆனால், அங்கே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! என் ஆடைகளை நன்றாக அணிந்த வண்ணமே செல்வேன். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வெட்கப்பட்டதின் காரணமாக. அறிவிப்பவர் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா (நூல் அஹ்மத் 24480, மிஷ்காத்)

குறிப்பு : கப்ரில் உள்ளவர்கள் நாம் செய்யும் விடயங்களை பார்க்க மாட்டார்கள் என்று இருந்தால் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின்பும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பர்தா அணிந்தவர்களாகவே ஸியாரத் செய்தார்கள்.

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY : Moulavi*
*S. L. Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment