Popular Posts

Sunday 29 January 2017

இஸ்லாத்தின் பார்வையில் தர்ஹாக்களில் குத்து விளக்கேற்றி எண்ணெய் ஊற்றுவதும், அதன் மூலம் நோய்க்கு நிவாரணம் தேடுவதும், சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பதும் கூடுமா

🌾 *"இஸ்லாத்தின் பார்வையில் தர்ஹாக்களில் குத்து விளக்கேற்றி எண்ணெய் ஊற்றுவதும், அதன் மூலம் நோய்க்கு நிவாரணம் தேடுவதும், சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பதும் கூடுமா?"*🌾

♣ *தர்ஹாக்களில் குத்து விளக்கேற்றி எண்ணெய் ஊற்றுவது கூடுமா?*

உலகில் ஆங்காங்கே ஆத்மீக ஒளிபரப்பிய அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்களின் கப்று ஷரீப் (தர்ஹாக்கள்) காணப்படுகிறது, இவர்கள் அனைவர்களும் இஸ்லாத்தின் கிரீடமாக திகழ்பவர்கள், இவர்களின் தர்ஹாக்களிற்கு தினமும் சாதி, மத பேதமின்றி மூவின மக்களும் ஒன்று கூடுகின்றனர். இன ஒற்றுமையின் சின்னமாகத்திகழும் அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்களின் தர்ஹா ஷரீபில் ஆன்மிகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், உட்பட அனைவரும் வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர், இவர்களது கறாமத் என்னும் அற்புதம் உலகத்தில் எல்லாப் பாகங்களிலும் இருந்து மக்கள் சமுத்திரம் இங்கு (தர்ஹாக்களில்) வந்து கூடுவதற்கு காரணமாக அமைகின்றது. 

அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்கள், நல்லடியார்கள், மகான்கள் என்பவர்களிடத்தில் வஸீலா எனும் உதவி தேடலாம் அவர்கள் கப்ருக்குள்ளே உயிரோடு இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர்களின் கப்ருகளை இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த முறையில் கட்டி புனிதப்படுத்தி பச்சை போர்வை போர்த்தி சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைத்து விளக்கேற்றி எண்ணெய் ஊற்றி அந்த  எண்ணையை தலையிலும், நெற்றிலும் அல்லது நமது உடலில் நோய்வாய்பட்டால் அவ்விடத்தில் தடவி பூசி பரக்கத் பெறுவதற்கும் இஸ்லாத்தில் ஆதாரங்கள் உள்ளன.

அந்த அடிப்படையில் விளக்கு என்பது அல்லாஹ்வின் ஒளியின் அடையாளச் சின்னம் என்பதற்கு குர்ஆன் ஆதாரமும். அதனை அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய இதய கண் திறந்த அவ்லியாக்கள் உள்ள இடத்தில் ஏற்றுகிறோம். அந்த வகையில் அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணம் விளக்காகும். அந்த விளக்கில் உள்ள ஒளிச்சுடர் அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணமாகும் என்று இறைவன் குர்ஆனில் கூறியுள்ள காரணத்தினால் தான் அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்களின் தர்ஹாக்கள் உள்ள இடத்தில் ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்ற குத்து விளக்கு ஏத்தி பரக்கத் செய்யப்பட்ட ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிய விடுகிறோம்.

♦ அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
(அல்குர்ஆன் : 24:35)

♦ “இன்னமா யஃமுறு மஸாஜிதல்லாஹ்” என்ற திருமறை வசனத்திற்கு தப்ஸீர் றூஹுல் பயான் ஆசிரியரான அல்லாமா இஸ்மாயில் ஹக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு விளக்கம் எழுதும் போது இவ்வாறு எழுதுகின்றார்கள்: “கஷ்புன் நூர் அன் அஸ்ஹாபில் குபூர்” என்ற நூலில் அஷ்ஷெய்கு அப்துல்ஙனி நாபிலிஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு எழுதுகின்றார்கள்.(இந்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு “கஷ்பின் வெளிச்சத்தில் கபுறுவாசிகள்” (“உலமாக்கள் மற்றும் வலிமார்கள் சாலிஹீன்களுடைய கப்றுகள் மேல் குப்பாக்கள் கட்டுவதும், போர்வை போடுவதும், விரிப்புக்கள் போடுவதும், தலைப்பாகை சூடுவதும் ஆகுமான செயலாகும். பொதுமக்கள் பார்வையில் இவர்களை கேவலமாக நோக்காமல் கண்ணியத்தை வெளிப்படுத்துவதாகும். இது போன்றுதான் வலிமார்களின் கபுறுகளில் விளக்கேற்றுவதும், மெழுகுவர்த்தி எரியவைப்பதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும். இதன் நோக்கம் உயர்வானதாகும். வலிமார்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கிலும் அவர்கள் மீது அன்புவைத்தும் எண்ணெய், மெழுகுபத்தி உள்ளவற்றை நேர்ச்சை செய்வதும் ஆகுமானவையாகும். இதனைத் தடை செய்வது ஒருபோதும் கூடாது. (நூல் : தப்ஸீர் றூஹுல் பயான், பாகம் 03, பக்கம் 400)

ஆகவே , இத்தகைய காரணங்களால் சாதாரண கப்ருகளுக்குக் கூட செய்வது கூடும் என்றிருக்க அவுலியாக்களுடைய கப்ரு ­ஷரீபுகளுக்கு வலுப்பத்தையும் , ஒழுக்கத்தையும், மரியாதையையும் , நன்மையையும் நாடிச்செல்லுதல் ஆகுமானதுதான் என்பது ஹதீது,ஃபிக்ஹுகளைக் கொண்டு வெட்ட வெளிச்சமாகத் தெரிய வருகிறது .

♣ *தர்ஹா குத்து விளக்கில் ஷிபா உண்டா?*

தர்ஹா விளக்கில் உள்ள எண்ணெயை ஒரு மருந்து பொருளாகவே பயன் படுத்தப்படுகிறது ஏனெனில் அவ்விளக்கில் ஊற்றப்படும் எண்ணெய் பரக்கத் செய்யப்பட்ட ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னை என்று இறைவன் குர்ஆனில் கூறியுள்ளார் அந்த அடிப்படையில் ஜைத்தூன் மரத்தின் எண்ணெய் நமது நாடுகளின் விலை அதிகம் என்ற காரணத்தினாலும், ஜைத்தூன் எண்ணெய் பெற்றுக் கொள்வது குறைவு என்ற காரணத்தினாலும் சில தர்ஹாக்களில் ஜைத்தூன் எண்ணெய் அல்லாத வேறு எண்ணெய் அவ்விளக்கில் ஊற்றப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள் இருக்கின்ற இடத்தில் உள்ள பொருளுக்கு ஷிபா தரும் தன்மை உள்ளது ஏனெனில் அந்த பொருள் அவர்களுடன் தொடர்பு பட்டிருக்கிறது.

அதேபோன்று தான் நல்லடியார்களின் கப்ருகள் உள்ள இடங்களில் அவர்களுடன் சம்பந்தப்பட்ட அவர்களை சூழவுள்ள பொருட்களில் பரக்கத், ஷிபா தரும் தன்மை உள்ளது என்பது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். அந்த அடிப்படையில் இன்றும் கூட அனுபவ ரீதியாக அதிகமான மக்கள் வைத்தியர்கள் கைவிட்ட நோய்களுக்கு அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்களின் தர்ஹாக்களை நாடி வந்து பரக்கத் செய்யப்பட்ட தர்ஹா விளக்கில் உள்ள எண்ணெய் மூலம் நிவாரணம் பெற்றவர்கள் உள்ளார்கள். இன்றும் கூட அனுபவித்து கொண்டு நமது சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள், வலிமார்களின் புனிதமான கால்பாதம் பதிந்த பூமியின் மண்ணின் பரகத்தினால் நோயாளிகள் குணப்படுத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்களும் உள்ளன.

♦ அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி (பரக்கத்) செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான் (அல்குர்ஆன் : 17:1)

♦ ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அன்னவர்கள் கூறினார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோயாளிக்காக, “பிஸ்மில்லாஹி துர்பத்து அர்ளினா பிரீகத்தி பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா“ என்று கூறுவார்கள். பொருள்: அல்லாஹ்வின் பெயரால்... எங்களில் சிலரின் உமிழ் நீரோடு எம்முடைய இந்த பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின்பேரில் எங்களில் நோயுற்று இருப்பவரைக் குணப்படுத்தும். (நூல் புகாரி 5745, 5746)

♦ ஹழ்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு கைஸான் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக்கு சொன்னார்கள்: இது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய ஜுப்பா. இது ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்களுடைய மரணத்திற்கு பிறகு அதை நான் எடுத்து கொண்டேன். இதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அணியக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த ஜுப்பாவை நோயாளிகளுக்கு கழுவிக் கொடுத்து நாங்கள் நோய் நிவாரணத்தை தேடி கொள்வோம். அவர்கள் அதன் மூலம் சுகமும் பெறுகின்றனர் என கூறினார்கள். (நூல் முஸ்லிம் பாகம் 2, பக்கம் 190, மிஷ்காத் பக்கம் 374) ஆகவே இந்த ஹதீஸின் மூலம் ஸாலிஹீன்களின் உடைகளைக் கொண்டும், ஞாபகச் சின்னங்களைக் கொண்டும் அவர்களுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் மூலம் பரகத் பெற ஆதாரமிருக்கிறது.

♦ யூசுஃப் நபியின் பிரிவை நினைத்து கண் பார்வையை இழந்த அவர்களின் தந்தை எஃகூப் நபியின் முகத்தில் யூசுஃப் நபியின் பரக்கத் நிறைந்த கண்னியமான சட்டையை முகத்தில் போட்டபோது கண் பார்வை மீண்டும் வந்த நீண்ட வரலாற்று செய்தி

“என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்). (அல்குர்ஆன் : 12:93)

பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,(அல்குர்ஆன் : 12:96)

♦ ஹஸ்றத் அப்துல்லாஹ் பின் மவ்ஹிப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். எனது மனைவி ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை என்னிடம்கொடுத்து உம்மு சல்மா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அனுப்பிவைத்தாள். ஒருவனுக்கு கண் திரிஷ்டி அல்லது ஏதோ ஒன்று ஏற்படுமாயின் இவ்வாறு தண்ணீர்ப் பாத்திரம் ஒன்றை உம்மு சல்மாவிடம் என் மனைவி அனுப்புவது வழக்கம். அதேபோல் தான் என்னையும் அனுப்பிவைத்தாள் உம்மு சல்மா அவர்கள் எனது தண்ணீர்ப் பாத்திரத்தைக் கண்டதும் தன்னிடமிருந்த வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து அதில்வைக்கப்பட்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடியை எடுத்து நான் கொண்டு சென்ற தண்ணீர்ப் பாத்திரத்தினுள் அதைவிட்டு அசைத்தார்கள் அப்பொழுது நான் பாத்திரத்தினுள் எட்டிப்பார்த்தேன் அங்கு சிவந்த முடிகள் இருப்பதை கண்டேண் என்று சொன்னார்கள். (நூல் புகாரி -5896, மிஷ்காத்)

♣ *தர்ஹாக்களில் சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பது கூடுமா?*

அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்களின் தர்ஹா ஷரீபில் சந்தனம் பூசுவது, சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பதை அதிகமாகவே காண்பீர்கள். அந்த அடிப்படையில் சந்தனம் பூசுவது, சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பது ஒரு மனமான பொருள் என்பதனாலாகும். மக்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் மனமான பொருட்களை பாவிப்பது, பூசுவது பற்றவைப்பது விரும்பதக்க விடயமாகும். எனவே தர்ஹாக்களில் சந்தனம் பூசுவது ஊதுபத்தி பற்றவைப்பது "ஷிர்க் - ஹராம்" என்பதெல்ல இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த நல்ல காரியம் என்பதே சரியான கருத்தாகும். ஏனெனில் குர்ஆனில் கலிமா தய்யிபாவிற்கு உதாரணமாக மனம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்று என்று இறைவன் கூறியுள்ளார் அப்படிப்பட்ட மனம் கமலும் சந்தனம் மரத்தை அரைத்து நறுமனமாக பூசப்படுவதும் அல்லது ஊதுபத்தியாக பற்றவைப்பதும் நமது சமுதாயத்தில் குறிப்பாக அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்களின் தர்ஹாக்களில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட தத்துவங்களை வழிகெட்ட வஹ்ஹாபிகள் புரிந்து கொள்ளாமல் சந்தனம் பூசுவது ஊதுபத்தி பற்றவைப்பது ஷிர்க் என்றும் ஹறாம் என்றும் கூச்சலிடுவது குர்ஆன், ஹதீஸ்களின் சரியான அறிவு இல்லாததே காரணம் ஆகும்.

♦ நபியே! கலிமா தய்யிபாவிற்கு அல்லாஹ் எவ்வாறு நல்வாக்கியத்திற்கு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மனம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். (அல்குர்ஆன் : 14:24)

​​♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இந்த உலகத்தில் எனக்கு பிடித்தது மூன்று விடயங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று நறுமணம் என்றார்கள். (நூல் : நஸாயீ 3939, ஹாகிம் 2/174

​​எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடித்த ஒன்றை நாம் செய்வது சுன்னத்தான காரியமாகும். அந்த அடிப்படையில் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் மனம் பூசுவது அதோடு சம்மந்தப்பட்ட மனமான பொருள்களை பாவிப்பது சுன்னத்தான காரியமாகும். இன்று வலிமார்கள் அடங்கியுள்ள புனிதமான இடங்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று சாம்பிராணி போடும் காரணம் அன்றைய தினத்தில் மக்கள் அதிகமானவர்கள் ஒன்று கூடுவார்கள், திக்ர் மஜ்லிஸ் செய்வார்கள். அனைவரும் மனமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான். ஆகவே இஸ்லாத்தில் சந்தனம் பூசுவது, சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பது, சாம்பிராணி புகை பிடிப்பது இவைகள் அனைத்தும் மார்க்கத்தில் கூடும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் கூடாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

ஆகவே திருக்குர்ஆனையும், நபீமொழிகளையும் தூய மனதுடன் ஆழமாக ஆராய்ந்தால் வழிகெட்ட வஹ்ஹாபிகள் அனாச்சாரங்கள் என்று கூறுகின்ற எல்லாமே நல்ல விடயங்கள் என்பதும், அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டு என்பதும் தெளிவாகும். அவ்வாதாரங்களை இந்த இடத்தில் விபரமாக மேலே நான் எழுதியுள்ளேன். ஆயினும் ஒரேயொரு திருக்குர்ஆன் வசனத்தை மட்டும் இங்கு மறுபடியும் எழுதுகிறேன். இவ்வசனம் ஒன்றே வஹ்ஹாபிகளின் வாயை அடைப்பதற்குப் போதுமென்று நம்புகிறேன். 'எவன் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறானோ அது அவனுள்ளத்தின் “தக்வா” இறையச்சமாகும்' (திருக்குர்ஆன்) எந்தவொரு படைப்பு அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் எனப்படும். இது “அவாமுன்னாஸ்” என்னும் சாமானிய மனிதர்களுக்குப் பொருத்தமான கருத்து. ஆனால் இறைஞானிகளிடம் படைப்பு எதுவாயினும் அது அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சின்னமேயாகும்.

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment