Popular Posts

Monday 25 July 2016

சூனியதில் தேவையற்ற சந்தேகங்கள்

தேவையற்ற சந்தேகங்கள்

நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு வந்த வஹீச் செய்தியில் சந்தேகம் வரும். வஹீ வராமல் வஹீ வந்ததாக கூறியிருப்பார்கள் என்றால் இது குர்ஆனுடைய பாதுகாப்பை தகர்க்கிறது என்று வாதிடுகிறார்கள்.

ஹதீஸில் இருப்பதை அப்படியேக் கூறினால் எந்த குழப்பமும் வராது. ஹதீஸில் இல்லாத விசயங்களை கூறி மக்களுக்கு தேவையற்ற சந்தேகங்களை இவர்கள் கிளப்புவதே மொத்த குழப்பத்திற்கும் காரணம்.

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தனக்கு வஹீ வராத நிலையில் வஹீ வந்ததாகக் கூறினார்கள் என்று உள்ளதா? நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது உடல் பாதிப்பு என்பதும் உடலுறவு விசயத்தில் தான் அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெளிவாக ஹதீஸில் இருக்கும் போது இப்படி அநியாயமாக ஹதீஸை திரிவுபடுத்திக் கூறலாமா?

நபி (ஸல்) அவர்கள் சிறப்புக்குரியவர்கள் என்றாலும் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர் தான். சாதாரண மனிதருக்கு ஏற்படும் பலவீனங்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் இருந்தது. உலக விசயங்களில் அனைத்து மனிதர்களைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டது.

அல்லாஹ் இந்த பலவீனங்கள் இல்லாதவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை படைக்கவில்லை. அல்லாஹ் நினைத்திருந்தால் இது போன்ற பலவீனங்கள் இன்றி நபி (ஸல்) அவர்களை படைத்திருக்க முடியும். அல்லாஹ் இதை விரும்பவில்லை.

பலவீனங்கள் இருந்தாலும் இந்த பலவீனங்கள் வஹீ விசயத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு அல்லாஹ் பாதுகாத்தான். இதையே குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றாக அல்லாஹ் வைத்திருக்கிறான்.

பலவீனங்கள் உள்ளவரின் வாயிருந்து தவறில்லாத முரண்பாடில்லாத சிறந்த நேர்வழிகாட்டல் வருகிறதென்றால் இது அவருடைய கூற்றல்ல. மாறாக இறைவனின் சொல் என்று அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு புரியவைக்கிறான். எனவே நபி (ஸல்) அவர்களுக்கு இருந்த பலவீனங்கள் குர்ஆனின் பாதுகாப்பிற்கு வலுப்படுத்துகிறதேத் தவிர பலவீனப்படுத்தவில்லை.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9)15

நாமே இந்த உபதேசத்தை அருளினோம். இதை நாமே பாதுகாப்போம்.

அல்குர்ஆன் (15 : 9)

எல்லா மனிதர்களைப் போன்று நபி (ஸல்) அவர்களும் மறதியுள்ளவராகவே இருந்தார்கள். இந்த மறதி தொழுகையில் கூட நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது.

 401حَدَّثَنَا عُثْمَانُ قَالَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِبْرَاهِيمُ لَا أَدْرِي زَادَ أَوْ نَقَصَ فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ قَالَ وَمَا ذَاكَ قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ لِيُسَلِّمْ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள். (தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்களிடம், "இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)'' என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, "ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறினார்கள்.

புகாரி (401)

சுய விருப்பத்தை தெரிவிக்கும் போது அது தவறாகிவிட வாய்ப்புள்ளது. இந்த பலவீனம் நபி (ஸல்) அவர்களுக்கும் மற்ற மனிதர்களைப் போல் இருந்துள்ளது.

2461 حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ إِسْرَائِيلَ عَنْ سِمَاكٍ أَنَّهُ سَمِعَ مُوسَى بْنَ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ مَرَرْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَخْلٍ فَرَأَى قَوْمًا يُلَقِّحُونَ النَّخْلَ فَقَالَ مَا يَصْنَعُ هَؤُلَاءِ قَالُوا يَأْخُذُونَ مِنْ الذَّكَرِ فَيَجْعَلُونَهُ فِي الْأُنْثَى قَالَ مَا أَظُنُّ ذَلِكَ يُغْنِي شَيْئًا فَبَلَغَهُمْ فَتَرَكُوهُ فَنَزَلُوا عَنْهَا فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّمَا هُوَ الظَّنُّ إِنْ كَانَ يُغْنِي شَيْئًا فَاصْنَعُوهُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ وَإِنَّ الظَّنَّ يُخْطِئُ وَيُصِيبُ وَلَكِنْ مَا قُلْتُ لَكُمْ قَالَ اللَّهُ فَلَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ رواه إبن ماجه

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பேரீச்சமரங்களுக்கு அருகில் சென்றேன். ஆண் மரங்களையும் பெண் மரங்களையும் இணைத்து சூள்கொள்ளச் செய்யும் வேலையை செய்யும் ஒரு கூட்டத்தை கண்டார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஆண் மரத்தை பெண் மரத்துடன் இணைப்பதாக கூறினர். இது பயனுள்ள காரியமாக எனக்குத் தெரியவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த செய்தி மக்களுக்கு எட்டிய போது மரங்களிருந்து இறங்கி இதை கைவிட்டனர். இது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது நான் கூறியது யூகம் தான். நீங்கள் செய்துகொண்டிருந்த காரியத்தால் நன்மை ஏற்படும் என்றால் அவ்வாறே செய்யுங்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். யூகம் தவறாகவும் இருக்கலாம். சரியாகவும் இருக்கலாம். ஆனால் நான் அல்லாஹ் கூறினான் என்று உங்களிடம் சொன்னால் (அவ்விசயத்தில்) அல்லாஹ்வின் மீது நான் பொய்யுரைக்கமாட்டேன் என்று கூறினார்கள்.

இப்னு மாஜா (2461)

வஹீ விசயத்தில் மட்டுமே நபி (ஸல்) அவர்களுக்கு தவறு ஏற்படாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு மறதியே வராது என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக வஹி விசயத்தில் மறதி வராது என்றே கூறுகிறான்.

سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى (6)87

நாம் உமக்கு ஓதிக்காட்டுவோம். நீர் மறக்கமாட்டீர்.

அல்குர்ஆன் (87 : 6)

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ (16) إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ (17) فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ (18) ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ (19)75

உன் நாவை அசைத்து இதில் அவசரப்பட்டு நீர் ஓத வேண்டாம். இதை (உன் உள்ளத்தில்) சேர்ப்பதும் ஓதவைப்பதும் நம் கடமையாகும். எனவே அதை நாம் ஓதினால் அதைப் பின்தொடர்வீராக. இதன் பின் அதை விளக்குவதும் நம் கடமை.

அல்குர்ஆன் (75 : 19)

நபி (ஸல்) அவர்களும் மனிதர் தான். அவருடைய பேச்சுக்களிலும் தவறு வரும் என்பது உண்மை. ஆனால் மார்க்கம் தொடர்பாக அவர்கள் பேசும் விசயங்களில் தவறிழைக்கமாட்டார்கள். இந்த விளக்கத்தை முஃமின்கள் ஏற்பார்கள். காஃபிர்கள் ஏற்கமாட்டார்கள். காஃபிர்களுக்காக இந்த உண்மையை நாம் மறுக்க முடியாது.

3161 حَدَّثَنَا مُسَدَّدٌ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَا حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُغِيثٍ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كُنْتُ أَكْتُبُ كُلَّ شَيْءٍ أَسْمَعُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ حِفْظَهُ فَنَهَتْنِي قُرَيْشٌ وَقَالُوا أَتَكْتُبُ كُلَّ شَيْءٍ تَسْمَعُهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَرٌ يَتَكَلَّمُ فِي الْغَضَبِ وَالرِّضَا فَأَمْسَكْتُ عَنْ الْكِتَابِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَوْمَأَ بِأُصْبُعِهِ إِلَى فِيهِ فَقَالَ اكْتُبْ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا يَخْرُجُ مِنْهُ إِلَّا حَقٌّ رواه أبو داود

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறும் அனைத்து விஷயங்களையும் மனனம் செய்துகொள்வதற்காக எழுதிக்கொள்வேன். அப்போது குரைஷியர் நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவியுறும் அனைத்து விஷயங்களையும் எழுதிக்கொள்கிறாயா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலும் சந்தோஷமான நேரத்திலும் (தவறுதலாக எதையாவது) பேசிவிடும் மனிதர் தானே? என்று கூறி (எழுதுவதை விட்டும்) என்னைத் தடுத்தனர். எனவே நான் எழுதுவதை நிறுத்தினேன். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது தனது விரலால் தன்னுடைய வாயை சுட்டிக்காட்டி என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீதாணையாக இதிருந்து (அதாவது என்னுடைய வாயிருந்து) உண்மையைத் தவிர வேறெதுவும் வெளிப்படாது. நீ (நான் கூறுவதை) எழுதிக்கொள் என்று கூறினார்கள்.

அபூதாவுத் (3161)

எனவே வஹீ விசயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று நம்புவதால் வஹீ விசயத்தில் அவர்களுக்கு குழப்பம் வந்தது என்று எந்த முஃமினும் சந்தேகப்படமாட்டான்.

ஈமான் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வெறுமனே இஸ்லாத்தை குறைபடுத்தி விமர்சிக்க வேண்டும் என்ற தீய எண்ணம் உள்ளவனே இது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்துவான். இவன் ஏற்படுத்தும் குழப்பம் இறைநம்பிக்கையாளர்களிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

யூதன் நபிக்கு பாதிப்பை ஏற்படுத்தினானா?

ஒரு யூதன் தலைசிறந்த நம்முடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து பாதிப்பு ஏற்படுத்தினான் என்பதை நாம் எப்படி நம்ப முடியும்? என்று சிலர் உணர்ச்சிவசப்படுகின்றனர். இது அறிவீனமான உணர்ச்சியாகும்.

எதிரிகளால் நபிமார்கள் நிறைய துன்பங்களுக்கு ஆளானார்கள். இஸ்லாத்தின் விரோதிகள் பல நபிமார்களை கொலை கூட செய்தனர் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நபிமார்களை எப்படி கொல்ல முடியும் என்று கேட்டு குர்ஆன் வசனத்தை மறுக்க முடியுமா?

உஹத் போரில் நபி (ஸல்) அவர்களின் கண்ணம் வெட்டுபட்டு பல் உடைந்து. நபி (ஸல்) அவர்களின் முகவே இரத்தக்கறையானது. நபியை எப்படி காயப்படுத்த முடியும் என்று கேட்டு இந்த ஹதீஸ்களை மறுக்க முடியுமா?

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்டிறைச்சியில் விஷம் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அதன் பாதிப்பு இருந்தது என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றது. நபிக்கு எப்படி பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று கேள்வி கேட்டு இந்த ஹதீஸ்களை மறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மனிதர்களில் நபிமார்கள் தான் கடுமையான சோதனைக்கு ஆளானார்கள். எதிரிகளால் இவர்களுக்கு ஏற்படும் எந்தத் துன்பமானாலும் அதன் மூலம் இவர்களின் அந்தஸ்த்து அல்லாஹ்விடம் உயருமே அன்றி நபிமார்களின் கண்ணியத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் வராது.

யூதன் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அதன் மூலம் அவர்கள் பட்ட துன்பம் நபியவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் மெம்மேலும் சிறப்பைத் தருமேயன்றி இதனால் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கோ சிறப்பிற்கோ எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.

அல்லாஹ் தனது தூதருக்கு சூனியம் தொடர்பான விளக்கத்தை அளித்து நிவாரணம் அளித்தான். எனவே அல்லாஹ்வின் உதவியும் பாதுகாப்பும் நபி (ஸல்) அவர்களுக்கு என்றைக்கும் இருந்தது.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்பட்டதும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்தது. அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும். அதை குணப்படுத்தக்கூடிய அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று பல விசயங்களை அல்லாஹ் இதன் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறான்.

No comments:

Post a Comment