Popular Posts

Monday 25 July 2016

சூனியம் விசயத்தில் இறைமறுப்பாளர்கள் கூறியது என்ன?

இறைமறுப்பாளர்கள் கூறியது என்ன?

நபி (ஸல்) அவர்களைப் பார்த்து இவர் சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று காஃபிர்களே கூறினர். இவ்வாறு கூறியவர்களை அல்லாஹ் அநியாயக்காரன் என்று கண்டிக்கிறான்.

نَحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَى إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا (47) انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا (48) 17

(நபியே) அவர்கள் உன்னிடம் செவியேற்ற போது அவர்கள் எதை செவியேற்றார்கள் என்பதையும் நீங்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்று அநியாயக்காரர்கள் இரகசியமாக பேசிக்கொண்டதையும் நாம் அறிவோம். அவர்கள் உமக்கு எவ்வாறு உதாரணங்களைக் கூறி வழிகெட்டுப் போகிறார்கள் என்பதை (நபியே) பார்ப்பீராக. அவர்கள் (நேரான) வழிக்கு வரவேமாட்டார்கள்.

அல்குர்ஆன் (17 : 47)

وَقَالَ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا (8) انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا (9) 25

நீங்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்று அநியாயக்காரர்கள் இரகசியமாக பேசிக்கொண்டதையும் நாம் அறிவோம். அவர்கள் உமக்கு எவ்வாறு உதாரணங்களைக் கூறி வழிகெட்டுப் போகிறார்கள் என்பதை (நபியே) பார்ப்பீராக. அவர்கள் (நேரான) வழிக்கு வரவேமாட்டார்கள்.

அல்குர்ஆன் (25 : 9)

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக கூறுவது அல்லாஹ்வின் இந்த வசனங்களுக்கு முரணானது. எனவே நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக கூறும் ஹதீஸை நிராகரிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.

இந்த வசனங்களில் வரும் மஸ்ஹுர் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளது. ஆனால் அவற்றை விட்டுவிட்டு சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்பட்டவர் என்ற பொருளை இங்கே இவர்கள் கொடுப்பதற்கு காரணம் அப்போது தான் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை மறுக்க முடியும் என்பது தான்.

இந்த வசனங்களில் மஸ்ஹுர் என்ற சொல்லுக்கு இவர்கள் கொடுக்கும் அர்தத்தை கொடுத்தாலும் சூனியம் தொடர்பான ஹதீஸை எந்த வகையிலும் நிராகரிக்க முடியாது.

குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் இடையே முரண்பாட்டை கற்பிப்பதில் இவர்கள் வல்லவர்கள். இந்த வசனங்களில் காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கூறிய தகவலும் சூனியம் தொடர்பான ஹதீஸ் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கூறும் தகவலும் ஒரே அம்சமாக இருந்தாலே காஃபிர்கள் சொன்னதை அப்படியே ஹதீஸ் கூறுகிறது. எனவே ஹதீஸை நிராகரிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடலாம்.

ஆனால் காஃபிர்கள் சொன்னதை இந்த ஹதீஸ் அங்கீகரிக்கவில்லை. இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்தை காஃபிர்கள் கூறவில்லை. இரண்டும் முற்றிலும் வெவ்வேறான விசயங்கள் என்றால் அப்போது இந்த வசனங்களை காட்டி ஹதீஸை மறுக்கக்கூடாது.

மேலுள்ள வசனங்களை முழுமையாக நன்கு படித்துப்பாருங்கள். காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களின் உடல்நிலையை பார்த்துவிட்டு இவருக்கு சூனியத்தால் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சொல்லவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறிய குர்ஆன் வசனங்களை கேட்ட பிறகு இந்தக் குர்ஆன் இறைவனின் வார்த்தையல்ல. இவருக்கு பைத்தியம் பிடித்து அதன் காரணத்தால் உளறும் உளறலாகும் என்று கூறி குர்ஆனை ஏற்க மறுத்தனர். நபி (ஸல்) அவர்களை சூனியம் செய்யப்பட்டவர் என்று அவர்கள் கூறியது இந்தக் கருத்தில் தான்.

சூனியம் தொடர்பான ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் பைத்தியமானார்கள் என்றோ நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த குர்ஆன் இறைவனின் வார்த்தையல்ல. பைத்திய பாதிப்பால் நபி (ஸல்) அவர்கள் உளறிய உளறல் என்றோ சொல்லவில்லை.

மாறாக சூனியத்தால் நபி (ஸல்) அவர்களுக்கு உடல் பாதிப்பு தான் ஏற்பட்டது. இந்த நேரத்தில் தெளிவான மனநிலையில் உள்ளவர் எப்படி நடந்துகொள்வாறோ அது போன்று நபி (ஸல்) அவர்களின் நடத்தையும் அமைந்திருந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இறைச்செய்தியும் வந்தது. வானவர்களின் தொடர்பும் ஏற்பட்டது. இறையருளால் அந்த பாதிப்பு நீங்கியது என்று கூறி நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் தான் என்று சான்று பகர்ந்துகொண்டிருக்கிறது.

அவ்வாறிருக்க இந்த ஹதீஸை நம்பினால் காஃபிர்கள் சொன்னது உண்மையாகிவிடும் என்று சித்தரிப்பது நியாயமா?

ஒரு சீர்திருத்தவாதி தலையில் பட்ட காயத்துடன் நல்லுபதேசங்களை சுய நினைவோடு போதிக்கிறார். இதை ஏற்க மறுத்தவன் இவருக்கு மண்டையில் அடிபட்டுள்ளது. எனவே தான் இவ்வாறு தவறாகப் பேசுகிறார் என்று கூறி நல்லுபதேசத்தை ஏற்க மறுக்கிறான் இவனை அநியாயக்காரன் என்று கூறுவோம்.

இவனை அநியாயக்காரன் என்று நாம் கூறுவதால் அந்த நல்ல மனிதருக்கு தலையில் அடிபட்டதை நாம் மறுக்கிறோம் என்று அர்த்தமா? அவருக்கு தலையில் அடிபட்டதை நாம் மறுக்கமாட்டோம். ஆனால் தலையில் அடிபட்டதை கூறி பைத்தியமாகிவிட்டார் என்று அவன் அவதூறு சொல்வதையும் நல்லுபதேசத்தை அவன் ஏற்க மறுப்பதையும் கண்டிப்போம்.

இது போன்று தான் அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியம் ஏற்பட்டது என்று காஃபிர்கள் கூறியதையும் இந்தக் குர்ஆனை அவர்கள் ஏற்க மறுத்ததையும் கண்டிக்கும் விதமாகவே அவர்களை அநியாயக்காரர்கள் என்று குறிப்பிடுகிறான்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவன் மறுக்கவில்லை. மாறாக காஃபிர்கள் சொன்ன பாதிப்பு நபிக்கு இல்லை என்றே மறுக்கிறான். காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களை பைத்தியம் என்று சொன்னார்கள். சூனியம் தொடர்பான ஹதீஸ் இதைக் கூறவில்லை. எனவே இந்த வசனங்களுக்கும் சூனியம் தொடர்பான ஹதீஸிற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. முரண்பாடு கற்பிப்போரின் சிந்தனையில் தான் கோளாறு உள்ளது.

காஃபிர்கள் செய்த விமர்சனத்தை முழுமையாக கவனிக்க வேண்டும். வசனத்தை அரைகுறையாக விளங்கிக்கொண்டு வார்த்தை ஜாலம் காட்டினால் தவறான முடிவுகளையே நாம் எடுக்க வேண்டிவரும்.

காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களை இவர் நம்மைப் போன்ற மனிதர் தான். இவரிடத்தில் கவர்ச்சியைத் தவிர சத்தியம் எதுவும் இல்லை என்று விமர்சனம் செய்தனர்.

لَاهِيَةً قُلُوبُهُمْ وَأَسَرُّوا النَّجْوَى الَّذِينَ ظَلَمُوا هَلْ هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبْصِرُونَ (3)21

அவர்களின் உள்ளங்கள் அலட்சியமாக உள்ளன. இவர் உங்களைப் போன்ற மனிதரே அன்றி வேறில்லை. எனவே நீங்கள் (இதை) தெளிவாக காண்பதுடன் சூனியத்திடமா செல்கிறீர்கள்? என்று அநியாயக்காரர்கள் இரகசியமாக பேசினார்கள்.

அல்குர்ஆன் (21 : 3)

இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் என்று அநியாயக்காரர்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். அநியாயக்காரர்கள் இவ்வாறு கூறியதால் நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் இல்லை என்று சொல்ல முடியுமா? நபி (ஸல்) அவர்களும் மனிதர் தான் என்று நாம் கூறுவதால் இந்த வசனத்தில் காஃபிர்கள் சொன்னதை உண்மைபடுத்திவிட்டோம். எனவே நாம் அநியாயக்காரர்களாகி விட்டோம் என்று கூறலாமா?

இங்கே காஃபிர்கள் சொன்னதும் நாம் சொல்வதும் வார்த்தையில் ஒன்றாக இருந்தாலும் காஃபிர்கள் சொன்னதின் நோக்கத்தையும் முழு விமர்சனத்தையும் கவனிக்கும் போது நாம் வேறு அர்தத்தில் சொல்கிறோம். காஃபிர்கள் இதை வேறு அர்தத்தில் சொன்னார்கள். எனவே நாம் நபி (ஸல்) அவர்களை நம்மைப் போன்ற மனிதர் என்று சொல்வது தவறில்லை என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரில்லை. மற்றவர்களைப் போன்ற சாதாரண மனிதர். அவருக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த இறைச்செய்தியும் வரவில்லை. அவர் இறைச்செய்தி என்று கூறும் குர்ஆனும் இறைச்செய்தி

அல்ல என்ற அர்தத்தில் நபி (ஸல்) அவர்களை இவர் உங்களைப் போன்ற மனிதர் என்று சொன்னார்கள். ஆனால் நாம் இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்களை மனிதர் என்று சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரும் மனிதரும் ஆவார்கள். அவர்கள் கொண்டு வந்தது குர்ஆனாகும் என்றே நம்புகிறோம்.

இந்த வசனத்தை இவ்வாறு சரியாக விளங்குவது போன்று நபி (ஸல்) அவர்களை சூனியம் செய்யப்பட்டவர் என்று காஃபிர்கள் கூறியதையும் புரிந்துகொண்டால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் உடல் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறும் ஹதீûஸ மறுக்க வேண்டியதில்லை.

ஃபலக் அத்தியாயத்தில் முடிச்சுகளில் ஊதுபவர்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகிறான்.

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) مِنْ شَرِّ مَا خَلَقَ (2) وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4) وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5)

அதிகாலையில் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் இருள் பரவும் போது ஏற்படும் தீங்கை விட்டும் முடிச்சுகளில் ஊதுபவர்களின் தீங்கை விட்டும் பொறாமைக்காரன் பொறாமைகொள்ளும் போது ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக.

அத்தியாயம் (113)

அல்லாஹ் முடிச்சுகளில் ஊதக்கூடியவர்கள் என்று சூனியக்காரர்களையே கூறுகிறான். இதை முன்னர் அறிந்துகொண்டோம். இந்தத் தீங்கிருந்து பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகிறான். அப்படியானால் சூனியத்தின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதை அல்லாஹ் இங்கே சுட்டிக்காட்டுகிறான்.

நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் செய்த சூனியத்தில் முடிச்சுகள் எங்கே இருந்தது? என்ற கேள்வியை கேட்கின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் செய்த சூனியத்தில் முடிச்சுகள் இருந்தது என பல ஹதீஸ்கள் உள்ளது. ஆனால் அந்த ஹதீஸ்கள் பலவீனமானவையாக உள்ளது. எனவே அவற்றை நாம் ஆதாரம் காட்ட முடியாது. சரியான அறிவிப்புகளில் முடிச்சுகள் பற்றி வரவில்லை என்றாலும் இதனால் யூதன் செய்த சூனியத்தில் முடிச்சு இல்லை என்று கூறமுடியாது. யூதன் செய்த சூனியத்தில் முடிச்சுகள் இருந்திருக்கும். ஆனால் அந்தத் தகவல் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வழியாக நமக்கு கிடைக்கவில்லை.

மேற்கண்ட வசனத்தில் சூனியத்தில் முடிச்சுகள் போடப்படும் என்று அல்லாஹ் கூறுவதால் நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் செய்த சூனியத்திலும் முடிச்சுகள் இருந்திருக்கும் என்பதை அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment