Popular Posts

Friday 4 November 2016

தொழுகையின் முன், பின் சுன்னத்கள் யாவை?

*முன் பின் சுன்னத்கள் யாவை?*

தொழுகையின் முன், பின் சுன்னத் தொழுகையின் அவசியம் மற்றும் ஒவ்வொரு தொழுகையிலும் எத்தனை ரக்கத் சுன்னதாகத் தொழ வேண்டும்.

பஜ்ருடைய சுன்னத்

பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

*"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.*

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 1163, முஸ்லிம் 1191

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அறிவிப்பவர் : கைஸ் (ரலி)

நூல் : இப்னுஹிப்பான் 2471

*சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சுன்னத் தொழுகை இல்லை. சுப்ஹுத் தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகைகளையும் தொழக் கூடாது.*

சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும், அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 581, முஸ்லிம் 1367

*லுஹருடைய சுன்னத்*

*லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழலாம்.*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்கள் : புகாரீ 937, முஸ்லிம் 1200

லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும், சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 1182, நஸயீ 1736, அபூதாவூத் 1062, அஹ்மத் 23204

*அஸருடைய சுன்னத்*

*அஸருடைய முன் சுன்னத் நான்கு* ரக்அத்களாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமின்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல் : திர்மிதீ 394

*மஃரிபுடைய சுன்னத்*

*மஃரிப் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு  ரக்அத்கள், பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.*

*மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை விரும்பியவர் தொழட்டும் என்றார்கள்.*

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல்: புகாரீ 1183, அபூதாவூத் 1089,அஹ்மத் 19643

அபூதாவுதின் (1089) அறிவிப்பில் மஃரிபிற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுங்கள் என்று இடம் பெற்றுள்ளது.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரீ 937

*இஷாவுடைய சுன்னத்*

இஷாத் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் ஆகும். இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.

*ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி

நூல்கள் : புகாரீ 624, முஸ்லிம் 1384

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று கூறியுள்ளார்கள். ஆனால் எத்தனை ரக்அத்கள் என்று தெளிவுபடுத்தவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளைக் கவனித்தால் இரண்டும், நான்கும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் அடிப்படையில் நாம் இஷாவுடைய சுன்னத்தை இரண்டாக அல்லது நான்காகத் தொழுது கொள்ளலாம்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 937

No comments:

Post a Comment