Popular Posts

Sunday, 1 January 2017

விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் 02

#குத்பு_நாயகத்தின்_கராமத்_தொடர்_02

¶"*விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் *"¶

♦ ஒரு தினம் கௌதுல் அஃலம் முஹ்யதீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது கடும் காற்று வீசிக்கொண்டிருந்தது. அது வேளை ஒரு பருந்து கீச்சிட்டவாறு பறந்து சென்றது. இது சபையோருக்கு ஒரு வித சலனத்தை ஏற்படுத்தியது. உடனே கௌதுல் அஃழம் அவர்கள்,காற்றே! பருந்தின் தலையைப் பிடி! என்றார்கள். உடனே பருந்தின் தலை ஒரு பக்கமும் அதன் உடல் வேறு பக்கமுமாக கிடந்தது.கௌதுல் அஃழமவர்கள் ஆசனத்தை விட்டுமிறங்கி வந்து பருந்தை கையால் எடுத்தார்கள். மறு கையால் அதைத் தடவிக் கொண்டு‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்’ என்று கூறினார்கள். உடனே உயிர் பெற்று,மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது பறந்து சென்றது.

♦ ஒரு பெண்மணி கௌதுல் அஃழம் கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அவர்களது சமுகத்திற்கு வந்து, எனது மகனின் மனம் தங்கள் மீது அபார பற்றைக் கொண்டிருப்பதாகக் காண்கின்றேன். அதனால் அல்லாஹ்வுக்காகவும்,தங்களுக்காகவும் தனது பொறுப்பிலிருந்து அவரை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்கின்றேன். என்று கூறி மகனை கௌதுல் அஃழமிடம் ஒப்படைத்தார்.அவரைப் பொறுப்பேற்ற கௌதுல் அஃழம் அவர்கள் தீவிர பயிற்சியிலும்,ஆத்மீக வழியிலான இறைவணக்க முறைகளையும் கற்றுக் கொடுத்து அதன்படி செயல்படுமாறு கட்டளையிட்டார்கள்.ஒரு தினம் அவரின் தாய் மகனை பார்ப்பதற்கு அங்கு வந்தார். மகன் மெலிந்தும் பசியின் கொடுமையால் வெளிறி மஞ்சணித்தும், மேலும்,வெறும் தொலிக் கோதுமை ரொட்டி மாத்திரம் உண்பதையும் கண்டார். மறுபுறம் கௌதுல் அஃழமவர்கள் பக்கம் சென்று பார்த்த போது சாப்பிட்ட கோழியின் எலும்புகள் ஒரு பாத்திரத்திலிருப்பதைக் கண்டார்.

♦ யா செய்யிதி! நாயகமே! நீங்கள் கோழி சாப்பிடுகிறீர்கள்! எனது மகனோ வெறும் தொலிக் கோதுமையையே சாப்பிடுகின்றாரே என்று அத்தாய் கூறியதும்,சாபிட்டு எச்சமாக பாத்திரத்திலிருந்த கோழி எலும்பில் கையை வைத்து, இத்து இறந்த எலும்புகளை உயிப்பிக்கும் அல்லாஹ்வின் உத்தரவுடன் எழும்பு என்றார்கள். கோழி உயிர்பெற்றெழுந்து நேரே நின்று கூவியது. உன் மகன் இந்த நிலைக்கு வந்தபின் அவர் விரும்பியதைச் சாப்பிடட்டும் என்று கூறினார்கள் கௌதுல் அஃழமவர்கள். (நூல் : பஹ்ஜதுல் அஸ்றார், பக்கம் - 128)

http://www.mailofislam.com/tm_article_-_kuthbu_nayagam_karamath.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் 01

#குத்பு_நாயகத்தின்_கராமத்_தொடர்_01

¶"*விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் *"¶

♦ ஆரம்பத்தில் கல்வியை தம் சொந்த ஊரான ஜீலான் நகரிலேயே கற்றார்கள். பதினெட்டு வயதை அடைந்த பொழுது உயர்கல்வி கற்பதற்காக பகுதாது நகர் செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக தம் அன்னையிடம் அனுமதி கோரினார்கள். அவரின் இந்த முடிவைக் கேட்டு மனம் மகிழ்ந்து, உடனே அனுமதி அளித்தார்கள் அன்னாரின் தாயார் அவர்கள். தந்தையார் அபூசாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் குடும்பத்தினருக்காக விட்டுச் சென்ற 80 பொற்காசுகளில் 40 பொற்காசுகளை நாயகம் அவர்களின் சட்டைப் பையில் வைத்து தைத்து கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள் தாயார் அவர்கள்.அச்சமயம் தம் மைந்தரை நோக்கி, எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று உபதேசித்து அனுப்பி வைத்தார்கள்.

♦ பகுதாதிற்காக பயணமாகிச் செல்லும் வியாபாரிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் நாயகமவர்கள். இவ்வியாபாரிகள் ஹமதான் எனும் நகரைக் கடந்து செல்லும் போது வழிப்பறித் திருடர்கள் அறுபது பேர் இவர்களை வளைத்துக் கொண்டார்கள். நாயகமவர்களை கொள்ளையர்கள் சோதித்து கேட்டபோது, தம்மிடம் நாற்பது பொற்காசுகள் இருப்பதாக உண்மையை சொன்னார்கள். ஆனால் திருடர்கள் நம்பவில்லை. இறுதியாக திருடர்கள் தலைவரிடம் கொண்டு சென்றனர். அங்கும்  அவர்கள் உண்மையே பேசினார்கள். நாயகமவர்களை சோதித்துப் பார்த்த போது, அவர்கள் சொன்னது உண்மை என்று தெரியவந்தது. வியப்புற்ற கள்வர்கள், காரணம் கேட்டபோது, தாயாரிடம் கொடுத்த வாக்குறுதி படி நான் உண்மையையே பேசினேன் என்றுரைத்தார்கள். இதைக்  கேட்டு கள்வர்கள் திருந்தி, இனிமேல் பாவச் செயல்களில் ஈடுபட போவதில்லை என்று நாயகமவர்களிடம் சத்தியம் செய்து கொடுத்தனர். இறைவனிடமும் பாவமன்னிப்புத் தேடினர். பிற்காலத்தில் இவர்கள் அனைவரும் வலிமார்களாக திகழ்ந்தனர் என சரித்திரம் கூறுகிறது.(நூல்: கலாயிதுல் ஜவாஹிர்)

http://www.mailofislam.com/tm_article_-_kuthbu_nayagam_karamath.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

விலாயத்தின் அரசர் குவலயம் போற்றும் குத்புல் அக்தாப் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை சரிதை

🌾 *"விலாயத்தின் அரசர் குவலயம் போற்றும் குத்புல் அக்தாப் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை சரிதை"🌾*

♦''வந்தது வசந்தம்'' ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டால் வலிமார்களின் தலைவர் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் மீது நேசம் கொண்ட முஸ்லீம்கள் மாத்திரம் அவர்களின் பெயரால் கோர்வை செய்யப்பட்ட "முஹியத்தீன் மெளலிது" ஷரீபு ஓதத் தொடங்கிவிடுவார்கள் ஆனால் அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்களை பிடிக்காத அவர்கள் மீது அன்பு கொள்ளாதவர்கள் "முஹியத்தீன் மௌலித்" ஓதுவது ஷிர்க் என முஸ்லீம் பெயர் கொன்ட வழிகெட்ட வஹ்ஹாபி கூட்டம் நாடி நரம்புகள் வெடிக்க கூக்குரலிடத் தொடங்கி விடுவார்கள்.

*♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றிய அறிமுகம்*

மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். "காதிரியா தரீக்கா" என்னும் ஆத்மீக பள்ளியை உருவாக்கிய செம்மல் இவர்கள். இதன் மூலம் எத்தனையோ நேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது.

♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்பு*

ஜனனம் எமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, காதிரியா தரிக்காவின் ஸ்தாபகர், மாபெரும் தவசீலர் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹிஜ்ரி 470 (கிபி1077) ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள்.ஜனனத்தின் மகத்துவம் பெரும் தவசீலர் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை வழிப்பரம்பரையும், தாய் வழிப் பரம்பரையும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போய்ச் சேருகின்றன.

அந்த வகையில் பார்க்கும் போது செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 13ம் தலைமுறைப் பேரராகின்றனர். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ரலியல்லாஹு அன்ஹு. தாயாரின் பெயர் உம்முல் கைர் பாத்திமா தம்பதியருக்கு கௌதுல் அஃலம் மகனாகப் பிறந்தார்கள் இவர்கள் பிறக்கும்போது இவர்களின் தாயாருக்கு வயது அறுபது. இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள்.

இந்த மகான் பிறந்தபோது பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்தேறின. இவர் பிறந்த தினத்தன்று அவர் தந்தையின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அபூசாலிஹே! உமக்கு அல்லாஹுத் தஆலா அருந்தவப்புதல்வரை அளித்திருக்கிறான். அவர் எனக்கும் அல்லாஹ்வுக்கும்  மிகப் பிரியமானவர். வலிகள், குதுபுகள்  ஆகியோரிடையே அந்தஸ்து மிக்கவர்' என அறிவித்தார்கள்.
இவர்கள் கருவிலிருக்கும் போது இவரது அன்னையின் கனவில் ஹழ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி 'உமது  கர்ப்ப அறையில் இருப்பவர் எல்லா வலிமார்களுக்கும் தலைவரான முஹ்யித்தீன் என்பவராவார் என்று நன்மாராயம் கூறிச் சென்றனர். இவர்கள் பிறந்த இரவில் ஜீலான் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண் குழந்தைகள் பிறந்தன. பெண்குழந்தைகள் ஒன்றுகூட இல்லை. இக்குழந்தைகள் யாவும் பிற்காலத்தில் பரிபூரணமான வலிகளாகவே திகழ்ந்தார்கள்.

*♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின்  கல்வி, ஞானம்*

சுல்தானுல் அவ்லியா முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள்.
அந்த அடிப்படையில் ஐந்தாம் வயதில் பாடசாலையில் சேர்க்கப்பட்டார்கள். ஏழாம் வயதில் குர்ஆனை மனனம் செய்தார். பத்தாம் வயதில் “வலித்தனம்” வழங்கப்பட்டதை வானவர் மூலம் அறிந்து குத்பு நாயகத்தின் கல்வித் தாகம் மேலும் அதிகரித்தது. இதனால் ஞான த்தைத் தேடி பக்தாத் நகர் சென்றார்கள். செல்லும் வழியில் திருடர் கூட்டத்தை திருக்கலிமாஹ் மொழியச் செய்து புனித இஸ்லாத்தில் இணைத்தார்கள். பக்தாதில் பல துறைகளிலும் கல்வி பயின்று ஆத்மீக உயர்வு பெற்றார்கள். என்றாலும் ஆத்மீகத் துறையில் இன்னும் முன்னேறிச் சென்று “பாதின்” என்னும் அக நிலையை அறியும் பாதையில் ஒரு ஞான குருவை தேடியலைந்து இறுதியில் அஷ்-ஷெய்கு ஹம்மாது (றழி) அவர்களின் சீரடானார்கள்.

இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி ரலியல்லாஹு அன்ஹுமா போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள். ஷைக்கின் சகவாசம்  எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள்

எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞான குருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் 'தஸவ்வுஃப்' என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், "இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்" என்று கூறினார்கள்.

*♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் துறவு நிலை*

மாபெரும் தவசீலர் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம் செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள்.அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள்.(நூல் காயிதுல் ஜவாஹித்  பக்கம் 7,8)

*♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின்
காதிரியா தரீக்காவின் உருவாக்கம்*

ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11 ஆம் இரவன்று கௌஸுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, "அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்" எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "யா ரசூலல்லாஹ்! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்" என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸுல் அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத் தொடங்கியது.

அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் ரலியல்லாஹு அன்ஹு இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள்.அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் இவைகளை தொகுத்து கொடுத்த கிதாபிற்கு "ராத்திப்" என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ராத்திப்புகளையே இன்றும் காதிரி தரீக்காவை பின்பற்றுவோர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஓதி வருகிறார்கள்.

*♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின்
"முஹியித்தீன்" என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை*

ஸைய்யதுனா முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார். அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: "நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹிய்யதீன் (மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) ஆவீர்கள்." என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார்.அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல்கௌஸுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 89 ஆம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : "எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது" என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள்.

*♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் திருமணம்*

குத்பு நாயகம் அவர்கள் தமது 51 வது வயதில் திருமணம் செய்தார்கள். இஸ்லாம் அனுமதித்தபடி 4 பெண்களை திருமணம் செய்து மொத்தமாக 49 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். இவர்களில் 20 ஆண்களும், 29 பெண்களும் ஆவர்.

*♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின்
குடும்ப வாழ்க்கை*

கௌஸுல் அஃலம் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521 இல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51 ஆம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் அதாவது மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள்.(நூல்: கலாயிதுல் ஜவாஹிர், தாரிக் பக்தாத்)

*♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இயற்றிய நூல்கள்*

குன்யத்துத் தாலிபீன், புத்தூஹுல் கைப், பத்ஹுர் ரப்பானீ, கஸீதா கௌதிய்யா, பஷாயிருல் கைராத், அல்பவாயிது வல் ஹிந்து, அழ்ழயூலாதுர் ரப்பானிய்யா, அல் மவாஹிபு ரஹ்மானிய்யா...

*♣ முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மறைவு*

90 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த குத்பு நாயகம் அவர்கள் தனது 91 ஆம் வயதில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோயுற்றிருந்தார்கள். கௌஸுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்த்தியதும் "சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக" என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91 வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று இம்மாய உலகை விட்டும் மறைந்து “தாறுல் பகாவை” அடைந்தார்கள். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.”அன்னாரின் புனித ஸியாரம் ஈராக் நாட்டின் பக்தாத் மா நகரில் அமைந்துள்ளது. எனவே நாமும் அவர்களது புனித ஸியாரத்திற்க்குச் சென்று அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவோமாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

http://www.mailofislam.com/muhiyadeen_jilani_history_tamil.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY :- Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*