Popular Posts

Wednesday, 20 July 2016

களா தொழுகை உண்டா? ​

களா தொழுகை உண்டா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

இஸ்லாத்தின் பார்வையில் களாத் தொழுகை உண்டா? என்பது பற்றி ஓர் ஆய்வு
​​
♣ களாத் தொழுகை பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

ஒருவன் தூங்கிவிட்டு தொழுகையின் நேரம் முடிந்த பிறகு எழுந்தான் என்றான், எழுந்த உடனே அதைத் தொழ வேண்டும். அது போல் மறதியின் காரணமாக ஒரு தொழுகையை நேரம் தவறவிட்டு விட்டால், நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுதிட வேண்டும் என கூறி விட்டு, இந்த இரண்டு காரணங்கள் தவிர வேறு எந்த ஒரு காரணங்களுக்காகவும் அதாவது ஒருவர் அலட்சியமாக வேண்டுமென்று தொழுகையை விட்டவர் அத் தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை என்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படை அறிவே இல்லாமல் சுய அறிவை பயன்படுத்தி ஈமானை இழந்து நஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

தூக்கமும் மறதியும் நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களாக உள்ளன. எனவே இந்தக் காரணங்களுக்காக மட்டும் ஞாபகம் வந்தவுடன் தொழுவதற்கு அதாவது களா செய்வதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள். உறக்கத்துக்கும் மறதிக்கும் மட்டுமே இந்தப் பரிகாரம் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒருவர் அலட்சியமாக வேண்டுமென்றே தொழுகையை விட்டால் அவர் அத்தொழுகையை களாச் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் அவர் செய்த குற்றத்துக்கு இது பரிகாரம் ஆக முடியாது. மாறாக அவர் தொழுகையை விட்ட குற்றத்துக்குரியவர். இக்குற்றம் அடுத்து நம்மிடத்தில் ஏற்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். மேலும் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸ்க்கு முரணாகவே வழிகெட்ட வஹாபிகள் விளக்கம் சொல்கிறார்கள்.

♦இவ்வாதத்தை முதன் முதலில் முஸ்லிம்கள் மத்தியில் புகுத்தியவர் வழிகெட்ட கொள்கயைையை பின்பற்றி வந்த இப்னு ஹஸ்மு என்பவராகும் இவர் அகீதா, பிக்ஹ் போன்ற துறைகளில் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முரண்பட்ட விளக்கத்தைக் கொண்டிருந்தார். எல்லாம் தனக்குத் தெரியும் என்ற தோரணையில் இவர் எழுதி வந்தார். 

​​இவருக்குப் பின் இவர் விட்டுச் சென்ற குறை மாத சிசுவான வழி கேட்டு வாதங்களையும், பிழையான சட்டங்களையும் தூக்கி தத்தெடுத்து வளர்த்தவர் இப்னு தைமியா ஹர்ரானி ஆவார். இதன் பின் இவர் நிழலாக வளர்ந்த இவரின் மாணவரான இப்னுல் கையூம் இதற்கு ஒத்தணம் வழங்கினார்.அதன் பிறகு இப்னு தைமியாவின் தீர்ப்பும், கோட்பாடும் முஹம்மட் இப்னு அப்துல் வஹாபி நஜ்தியிடம் தோன்றி மக்களை வழிகெடுத்தான்.

♦இவ்வாறு, சவூதியில் முளைத்த வஹாபிஸ நச்சு பிரசாரத்தில் தங்களைப் பறிகொடுத்தவர்களால்தான் வேண்டுமென்று விடுபட்ட தொழுகையைக் கழாச் செய்ய வேண்டியதில்லை என்ற வாதமும் இந்தியாவிலும், இலங்கையிலும் வழி கெட்ட வஹாபிசம் அறிமுகமாகியிருந்தம் விடுபட்ட தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை. என்ற கோஷம் முன்வைத்தனர் விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்ய தேவையில்லை என்றே கூறி வந்தனர்.  தற்காலத்தில் தமிழகத்திலும், இலங்கையிலும் இப்னு தைமியாவின் சாக்கடைவாதங்களுக்கும், வஹாபிஸ நச்சுக் கோட்பாடுகளுக்கும் உயிர் கொடுத்து ஊரையும், நாட்டையும் நாசப்படுத்தியவர்கள் பீ,ஜே குழுவினராகிய (TNTJ, SLTJ) வஹ்ஹாபிகள். வேண்டுமென்று விடுபட்ட தொழுகையைக் களாச் செய்ய வேண்டியதில்லை என்ற தவரான வாதத்தை முன்வைத்துள்ளார்கள்.


♣ களாத் தொழுகைப் பற்றி சுன்னத் வல் ஜமாஆத் நிலைப்பாடு 

' களாத்' தொழுகை என்றால் என்ன ?

தூக்கமும் மறதியும் ஏற்படும் போது அல்லது தொழுகை நேரம் வருவதைத் தெரிந்து கொண்டே அலட்சியமாக இருந்து விட்டு பின்னர் மொத்தமாகச் சேர்த்துத் தொழும் தொழுகைக்குப் பெயர் தான் ''களாத் தொழுகை'' ஆகும்.

♦ ஒருவருக்கு தொழுகை விடுபடுவதாக இருந்தால் அடிப்படை மூன்று காரணங்கள் காணப்படும். 1)மறதி. 2)தூக்கம். 3)அலட்சியமாக வேண்டுமென்று விடுபதாகும். இப்படி எந்த காரணத்தினாலும் தொழுகையை விட்டவர் அத் தொழுகையை களாச் செய்ய வேண்டும் என்பதே சரியான கருத்தாகும். ஆனால் வழிகெட்ட வஹ்ஹாபிகள் அலட்சியமாக வேண்டுமென்று தொழுகையை விட்டவர் அத் தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை என்று உலருகிறார்கள். ஆகவே அலட்சியமாக வேண்டுமென்று தொழுகையை விட்டவர் அத் தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை என்று குர்ஆன் ஹதீஸ்களில் இருக்கின்றதா? இல்லை.

♦ குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தொழுகையைக் களாவாக ஆக்குவதற்கு இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்க வில்லை. உரிய நேரத்தில் தொழுகையை தொழவேண்டும் என்பதை இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்திக் கூறுகின்றது. அந்த அடிப்படையில் சென்ற காலங்களில் விடுபட்ட தொழுகைகளையும் மேலும் தனது கவன குறைவாக, பொடுபோக்கின் காரணமாக களாவாக ஆக்கிவிட்ட தொழுகைகளையும், தூக்கம், மறதி போன்றவற்றால் தொழுகையைத் தவற விட்டவர்கள் தொழுகையைக் களாவாகத் தொழுவது கட்டாயம் செய்ய வேண்டும் என்பதாகும். இதற்கு ஹதீஸ்களில் இருந்து ஆதாரங்களை பார்ப்போம். எனவே தொழுகைகளை அவற்றுக்குரிய நேரங்களில் தொழுவதற்கே நாம் முயற்சிக்க வேண்டும். நமது அலட்சியமாக வேண்டுமென்று தொழுகையை விட்டவர்கள் மேலும் சக்திக்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாது சில காரணங்களுக்காக அதாவது (தூக்கம், மறதி) நேரம் தவறி விடுபடட்ட தொழுகைகளை களாவாக நிறைவேற்ற வேண்டும்.

♦ஷரீஅத்தில் ஒரு விடயம் கடமை (வாஜிபு) ஆவதற்கான நிபந்தனை பூரணமானதன் பின், அதனை விடுவதற்கான தடை வராவிட்டால், அதனை நிறைவேற்ற வேண்டியது அவரின் கடமையாகும். இதில் மாற்றுக் கருத்து கிடையாது. கடமையான விடயம் நேரம், காலம் குறித்ததாக இருப்பின், அந் நேரத்தில் அல்லது அக்காலத்தில் நிறைவேற்றினால் அவரின் கடமை அல்லது பொறுப்பு நீங்கிவிடும். நிர்ப்பந்தம் ஏதும் இல்லாத நிலையில் வேண்டுமென்று குறித்த நேரத்தில் அக்கடமையை நிறைவேற்றத் தவறினால் பிற்படுத்திய குற்றம் ஏற்படுவதுடன் அவர் மீதுள்ள பொறுப்பும், கடமையும் நீங்கிவிடாது, மனிதன் குற்றம் செய்யும் இயல்புள்ளவன் என்பதை அல்லாஹூத்தஆலா நன்கறிவான்.

♦அதனால் அவன் அருளையும், பொருத்தத்தையும் அடியான் பெறுவதற்குரிய வழியை அவன் ஏற்படுத்தியுள்ளான். பாவம் என்ற வியாதியை நீக்க வல்ல மருந்தாக தௌபாவையும், இஸ்திஃபாரையும் ஆக்கினான். அவன் மீதுள்ள கடமையிலிருந்து நீங்குவதற்கு 'அதாஃ' என்பதற்குப் பதிலாக களாவையும் ஏற்படுத்தினான். இந்த அடிப்படை விளக்கத்தை றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சஹீஹான ஹதிதுகள் மிகத் தெளிவான விளக்கத்தை நமக்குத் தந்துள்ளன. இது தொடர்பான பிரச்சனைகளுக்கான விடையை நேரடியாகவும், கியாஸ் அடிப்படையிலும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். காரணம், இது தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வை முஸ்லிம் சமுகத்திலிருந்து தீர்வாக எடுக்க வேண்டும் என்ற நோக்கிலாகும்.

♦ ஒரு மனிதர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதுரே எனது தாய் மரணித்து விட்டாள்! அவர் மீது ஒரு மாத நோன்பு நிறைவேற்றப்படாமல் உள்ளன. அவருக்காக நான் அதைக் களாச் செய்யலாமா? என்று கேட்டதற்கு ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு மிகக் தகுதியானதாகும். என்று விடை பகர்ந்தார்கள். 

​​அறிவிப்பவர் - ஹழ்ரத் இப்னு ஹப்பாஸ் றழியல்லாஹூ அன்ஹூ
நூல் - ஸஹீஹுல் புகாரி 

♦ ஜூஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எனது தாய் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டாள். ஆம் அவருக்காக நீர் ஹஜ் செய்யலாம் உன் தாயின் மீது கடன் இருந்தால் அதை நீர் நிறைவேற்ற மாட்டீரா? அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள், கடனை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்தான் பொருத்தமானவன் (முதலில் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுவதற்கு முற்படுத்த வேண்டும்)

​​அறிவிப்பவர் - ஹளரத் இப்னு ஹப்பாஸ் றழியல்லாஹூ அன்ஹூ
​நூல் - ஸஹீஹுல் புகாரி

♦ இதே கருத்தை ஒத்த பல அறிவிப்புக்கள் முஸ்லிம், ஸூனன் அபூதாவூத், திர்மிதி, நஸஈ உள்ளிட்ட ஹதீதுக் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நேரம் குறித்துக் கடமையாக்கப்பட்டுள்ள வணக்கங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் அது அவர் மீதுள்ள அல்லாஹ்வின் கடன் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். மனிதனுக்கு செலுத்த வேண்டிய பொருளாதார கடன் போன்றே இக் கடனும் உண்டு என ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள். 

​​மனிதனிடம் பட்ட கடனை உடன் செலுத்த வேண்டியது கடமை என்றும், அக் கடனை இறுக்கும் வரை அக்கடன் தன்னை விட்டும் நீங்காது என்பதை நன்கு அறிந்தவர்களிடம் கூறிவிட்டு முதலில் தீர்க்கப்பட வேண்டியது அல்லாஹ்வின் கடனாகும். என்று அதன் முக்கியத்துவத்தையும் கூறியுள்ளார்கள்.

அத்துடன் அதனை நிறைவேற்றுங்கள் என்று களாச் செய்வதை கட்டளையாகவும் கூறியுள்ளார்கள். கடன் நிறைவேற்றப்படுவதில் உடலினால் மட்டும் செய்யப்படும் நோன்பு போன்ற வணக்கத்தையும், உடலும், பொருளும் சேர்ந்த ஹஜ் போன்ற வணக்கத்தையும் நபியவர்கள் பிரிக்கவில்லை. இரண்டும் நிறைவேற்றப்பட வேண்டிய கடன் என்று கூறினார்கள். இதிலிருந்து கியாஸ் ஒரு சட்ட மூலாதாரம் என்பதற்கும், மனிதன் அனுபவத்தை வைத்து அனுபவத்திற்கு அப்பால் உள்ளதை விளங்கப்படுத்துவதும் சிறந்த முறை என்பதற்கும் இந்த ஹதீதை ஆதாரமாக அறிஞர்கள் எடுத்துக் கொண்டனர்.

​​நோன்பு உடலினால் மட்டுமே செய்யும் வணக்கம், இவ் வணக்கத்தை உரிய காலத்தில் நிறைவேற்றுவது கடமை. தவறினால் அது அல்லாஹ்வின் மீதுள்ள கடனாக இவர் பொறுப்பிலிருக்கும். கடன் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ்வின் கடனே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என சஹீஹான ஹதீதுகள் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றன.

♦ நபிகள் நாயகம் (ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்து விட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்.  

அறிவிப்பாளர்: ஹழ்ரத் ​​அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) 
​நூல் : முஸ்லிம் 1217, புகாரி 597

♦புத்தியுள்ள பருவமெய்திய ஒருவர் வேண்டுமென்று தொழுகையை விட்டவர் ,மரதியினால் விட்டவர், தூக்கத்தனால் விட்டவர் அத்தொழுகையை உடன் களாச் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான ஆதாரம் பின்வரும் சம்பவத்தில் உள்ளது.

அகல் போரின் போது சூரியன் மறைந்தபின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ‘அல்லாஹ்வின் தூதரே சூரியன் மறையும் வரை ? அஸர் தொழவில்லையே’ என்று கூற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘அல்லாவின் மீது ஆணையாக நானும் அஸர் தொழவில்லை’ என்றார்கள். நாங்கள் புத்ஹான் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூர் செய்தார்கள். நாங்களும் உளு செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மஃரிப் தொழுதார்கள்.

​​அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)
​நூல்கள் : புகாரி 596, முஸ்லிம், திர்மிதி 164, நஸயீ 1349

♦ (மேலும்) அகழ்ப் போரின்போது லுஹர், அஸர் ஆகிய தொழுகை போரில் ஈடுபட்டதனால் தவறிவிட்டது. சூரியன் மறைந்த பிறகு பிலாலை அழைத்து லுஹருக்கு இகாமத் சொல்லச் செய்து லுஹர் தொழுகையை நிறுத்தி நிதானமாக அதற்குரிய நேரத்தில் தொழுவதுபோல் தொழுதார்கள். பின்பு அஸர் தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து அஸரை, அதன் நேரத்தில் தொழுவது போல் அழகிய முறையில் நிறைவேற்றினார்கள். பின்பு மஃரிப் தொழுகையையும் இதே போல் தொழ வைத்தார்கள். பின்பு மஃரிப் தொழுகையையும் இதே போல் தொழ வைத்தார்கள்.  

அறிவிப்பவர்: ஹழ்ரத் ​​அபூஸயீத் (ரலியல்லாஹு அன்ஹு) 
​சுருக்கம் : நஸயீ, அஹ்மத், முஅத்தா ஆகிய நூல்களில் இந்த விபரம் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

♦  ஒரு தினம் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். இரவின் பெரும் பகுதியை கடந்து சென்ற பின் தங்குவதற்கான இடத்தை அடைந்தார்கள். எங்களை ஸுபஹ் தொழுகைக்கு எழுப்பும் பொறுப்பை எடுத்துக் கொள்பவர் யார்? என திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கேட்டதற்கு, பிலால் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். ஆயினும் தூக்கம் எல்லோரையும் ஆட்கொண்டது. எல்லோருக்குமே ஸூபஹூத் தொழுகை களாவாகிவிட்டது. காலையில் விழித்தெழுந்த பின் அனைவரையும் வுழுச் செய்யுமாறு பணித்தார்கள். பின் முஅத்தின் அதான் கூறினார் ஸூபஹூவின் சுன்னத்தான இரு ரகாஅத்துக்களையும் வழக்கமாகத் தொழுபவர்கள், இரண்டு ரகாஅத்துக்கள் ஸூபஹின் சுன்னத்தையும் தொழுதார்கள்.

பின்னர் எல்லோரையும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் களாவாகத் தொழுவித்தனர். இச் செயல் சஹாபாக்களுக்கு பெரும் கவலையைக் கொடுத்தது. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்வர்களுக்கு இதனால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. இதனால் அவர்கள் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள், அவர்களைப் போன்று நமது நிலையும் அமையுமா? என்று அஞ்சினார்கள். 

​​ஷரீஅத்தில் குற்றம் செய்வதற்குரிய தண்டனையாக கப்பறா முறை நடைமுறையில் இருப்பதை அறிந்த சஹாபாக்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்களிடம் விரைந்து சென்று நாங்கள் செய்த இத்தவறுக்கான கப்றா-குற்றப் பரிகாரம் என்ன? என்று கேட்டனர். யாராவது தொழுவதை மறந்தால், அல்லது தொழாமல் உறங்கினால் அது பற்றிய நினைவு வந்ததும் தொழுது கொள்ளவும், அது தவிர வேறு கப்பறா கிடையாது. என்று விடை பகர்ந்தார்கள்.

ஆதாரம் - புகாரி, முஸ்லிம்

♦ முஸ்லிமில் வரும் மற்றுமொறு அறிவிப்பில் உங்களில் ஒருவர் தொழாமல் தூங்கினால், அல்லது அதை மறந்தால் அது பற்றிய நினைவு வந்ததும் தொழுது கொள்ளவும் என்னை நினைப்பதற்காகவே தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று அல்லாஹூத்தஆலா கூறியுள்ளான். அதாவது, தொழுகையிலும், தொழுகையைக் கொண்டும் அலலாஹ்வை திக்று செய்வதுதான் தொழுகையின் முக்கிய நோக்கமாகும், நீங்கள் தொழுகையை அதன் நேரத்தில் தொழத் தவறினால், அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு தவறி விட்டது. 

​​ஆதலால் நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காக தொழுகையைக் களாச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் களாவானது உரிய நேரத்தில் தொழுதது போன்றாகிவிடும். அதற்கு அதனை களாச் செய்வது தவிர வேறு கப்பறா கிடையாது என்பதன் பொருள் தூக்கத்தால், மறதியால், மதிமயக்கத்தால், தொழுகை வேண்டுமென்று தப்ப விட்டால் கப்பாறா கொடுத்துத் தீர்க்குமளவு குற்றமாகாது. அத் தொழுகையைக் களாச் செய்வதுததான் அதற்கு கப்பாறாவாகும்.

தொழுகையை வேண்டுமென்று பிற்படுத்தியவர் தூக்கம், மறதி போன்றவற்றால் தொழுகையைத் தவற விட்டவர் போன்று தொழுகையைக் களாச் செய்தல் வேண்டும். அத்தோடு இவர் மீது தொழுகையைப் பிற்படுத்தியதற்கான குற்றம் இருக்கும். இதற்கு அவர் தௌபாச் செய்தல் அதாவது, மனம் வெதும்பிக் கவலைப்பட்டு இதன் பின் இக் குற்றத்தைச் செய்யமாட்டேன் என்று மன உறுதி கொள்ளல் வேண்டும். தௌபா இவர் குற்றத்திற்கு கப்பாறாவாக அமையும். தூக்கம், மறதி உள்ளிட்ட காரணத்தால் தொழுகையை விட்டவருக்கு களாச் செய்வது மட்டுமே கடமை! ஆனால் வேண்டுமென்று தொழுகையை விட்டவர் மீது களாவும், தௌபாவும் கடமையாகும். தூக்கம், மறதி ஆகிய காரணத்தால் தொழுகையை விட்டவர் தொழுகையைக் களாச் செய்ய வேண்டும் என்றுதான் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.

♦  வேண்டுமென்று தொழுகையை விட்டவர் களாச் செய்ய வேண்டும் என்று கூறவில்லையே! அப்படிக் கடமையெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பார்களே! என்று வாதிக்கும் முட்டாள்களைப் பார்த்து: நாம் கேட்கின்றோம். பெற்றோரைப் பார்த்து 'சீ' என்று கூறாதீர்கள் என்று திருக் குர்ஆன் கூறுகின்றது. அடிப்பது, கன்னத்தில் ஓங்கி அறைவது பற்றிக் கூறவில்லை. ஆதலால்'சீ 'என்று மட்டும் சொல்லாமல் ஏனையவைகளைத் தாராளமாகச் செய்யலாமா? களாத் தொழுகைபற்றி ஹதீது, சட்டக்கலை அறிஞர்கள் கூறுவதைக் கேளுங்கள். எவனுக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவனது பொருளும் குடும்பமும் தவறி விட்டது போன்றாகும். என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள்.

​​ஆதாரம் - புகாரி, முஸ்லிம்

♦  மேற் கண்ட ஹதீதுக்கு புகழ் பெற்ற ஹதீஸ்கலை மேதையான ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் புகாரி சரீபுக்கு எழுதிய புகழ் பூத்த விரிவுரையான பத்ஹூல் பாரியில் இவ்வாறு வரைகின்றார்கள். தொழுகையைக் களாவாக்கியவனுக்கு இரண்டு வகையான நஷ்டங்கள் உண்டு. என்ற எச்சரிக்கை இந்த ஹதீஸ் மூலமாக இருக்கின்றது.

01. உரிய வேளையில் தொழுவதால் கிடைக்கும் நன்மை

02. உரிய நேரத்தில் தொழாமல் விட்டதற்கான தண்டனை

உலகம் அற்பமானது கொஞ்சம் அமல் உலகின் மூலம் கிட்டும் அதிக நண்மையை விட மேலானது. என்ற விளக்கமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, என்று ஹாபிழ் அப்துல் பர்ரு அவர்கள் கூறுகின்றார்கள்.

​நூல் - பத்ஹுல் பாரி பாகம் -02, பக்கம் 171

♦ ஸஹிஹூல் முஸ்லிமுக்கு சிறப்பான விரிவுரை எழுதிய இமாம் நவவி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள். தவறிப் போன தொழுகையைக் களாச் செய்வது வாஜிப், தூக்கம், மறதி போன்ற காரணத்தால், தப்பினாலும் சரி, அல்லது காரணமின்றி தப்பினாலும் சரி காரணத்துடன் இருப்பதால் தூக்கத்தைப்பற்றி ஹதீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரணத்துடன் தப்பிய தொழுகையை நிறைவேற்றுவது வாஜிபு எனில், காரமிண்றி தவறியதை களாச் செய்வது கண்டிப்பாக கடமையாகும். இது தாழ்ந்ததைக் கொண்டு கடுமையானதின் மீது எச்சரிக்கையாகும. 

​​ஆதாரம் - ஷறஹூ முஸ்லிம் பாகம் 01, பக்கம் 238

♦புகாரி ஷரீபுக்கு எழுதப்பட்ட விரிவுரைகளுள் சிறப்பான இடத்தை வகிக்கும் உம்ததுல் காரி என்ற நூலில் இமாம் பதுறுதீன் ஜனி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதுகின்றார்கள்.வேண்டு மென்று தொழுகையைக் களாவாக்கினால் அதை நிறைவேற்றுவது வாஜிபு, பெரும்பாலான அறிஞர்களின் கூற்று இதுவாகும். தாவுது ளாஹிரியும் மிகச் சொற்பமான சிலரும் கழாச் செய்ய வேண்டியதில்லை என்கின்றனர். இக் கருத்து தவறானதாகும். 

​(ஆதாரம் உமத்துல் காரி பாகம் 02, பக்கம் 608

ஆகவே அன்று தோன்றிய வழிகெட்டவர்கள் கூறியதற்கு இன்றைய வழிகெட்ட வஹாபிகள் முலாம் பூச முனைகின்றனர். இது இவர்களின் புதுக் கண்டு பிடிப்பல்ல. மக்களைக் குழப்புவதற்கு எடுத்துக் கொண்ட ஓர் ஆயுதம் மாத்திரமே! வழி கேடர்கள் காலத்துக்கு காலம் பழையதுகளைக் கிண்டியெடுத்து சந்தியில் காயப்போடுகின்றனர். அதிலிருந்து பரவும் வைரஸ் கிருமிகள் பலவீனமான ஈமான் கொண்டோரைப் பாதித்துள்ளது, ஆதலால் வைரஸ் கிருமிகள் தொற்றிக் கொள்ளாமல் இருக்க மத்ஹபு என்ற தற்காப்பு அங்கியை அணிந்து கொள்ளுங்கள் பாதுகாக்கப்படுவீர்க - See more at: http://www.mailofislam.com/tm_article_-_kala_tholugai_unda.html#sthash.8KQrDSE1.dpuf

Thursday, 14 July 2016

இஜ்திஹாத்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

         இஜ்திஹாத்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

          اநபி (ஸல்)    
அவர்கள் மு ஆத் பின் ஜபல் (ரழி) அவர்களை யமனுக்கு (கவர்னராக) அனுப்பிய போது "மு ஆதே உன்னிடம் வழக்கு வந்தால் எதைக் கொண்டு தீர்ப்பு வழங்குவீர்"? எனக் கேட்டார்கள். அதற்கு மு ஆத் (ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் வேதத்தை வைத்து தீர்ப்பு வழங்குவேன்" என பதிலளித்தார்கள். அதற்கு நபியவர்கள் "அதில் நீர் (தீர்ப்பைக் ) காணாவிட்டால்? எனக் கேட்டபோது "நபியின் வழிகாட்டலைக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன்" என்றார்கள். அதிலும் நீர் காணாவிட்டால்" என நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கேட்க " நான் சுய ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவேன், அதில் குறைவு செய்யமாட்டேன்" என பதிலளித்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் மு ஆத் (ரழி) அவர்களுடைய நெஞ்சில் அடித்து "அல்லாஹ்வின் தூதர் பொருந்திக்கொள்ளும் வகையில் அவரின் தூதரை (மு ஆத் (ரழி) அவர்களை) ஆக்கிய அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்" எனக் கூறினார்கள்.

      இஜ்திஹாத் இன்று நேற்று அல்ல நபியுடைய காலத்திலையே உண்டானது தான்!

“தீர்ப்புச் சொல்பவர் (ஹாகிம்), இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக அமைந்தால் அவ ருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ருப்னுல் ஆஸ் (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸின் மூலம் இஜ்திஹாத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுவதை விளங்கலாம். உண்மையில் முஸ்லிம் சமூகம் அறிவியல் துறைகளில் முன்னேற்றமடைவதற்கு வழிவகுத்த காரணிகளில் முக்கியமானதாக இருப்பது இஸ்லாம் இஜ்திஹாதிற்கு அளித்த அங்கீகாரமும் உந்துதலுமே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் இஜ்திஹாதிற்கான அனுமதியை வழங்கியதனால்தான் நபித்தோழர்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும்போதே இஜ்திஹாதில் ஈடுபட்டார்கள்.

· அஹ்ஸாப் யுத்தம் முடிந்து திரும்பிய நபியவர் கள், ஸஹாபாக்கள் சிலரை பனூ குரைழாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை அனுப்பும்போது “ பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்” எனக் கூறினார்கள். பனூ குரைழாவை நோக்கி செல்லும் வழியில் சிலர் அஸர் தொழுகைக் கான நேரத்தை அடைந்து கொண்டார்கள். அப்போது “ பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்” என்ற நபியவர்களின் ஹதீஸைப் புரிந்து கொள்வதில் அவர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்றின. சிலர் பனூ குரைழாவுக்குச் சென்றுதான் அஸரைத் தொழ வேண்டுமெனப் புரிந்து கொண்டார்கள். மற்றும் சிலர் அவ்வாறல்ல, நேரமாகிவிட்டதால் இவ்விடத்திலேயே தொழ வேண்டுமெனக்கூறி அங்கு தொழுதனர். பின்னர் இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எத்தி வைக்கப் பட்டபோது இரு சாராரில் யாரையும் அவர்கள் கண்டிக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

“ பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்” என்ற ஹதீஸைப் புரிந்து கொள் வதற்காக அவர்கள் இஜ்திஹாத் செய்திருப்பதைக் காணலாம். சிலர் இந்நபிமொழியின் நேரடிக் கருத் தைப் புரிந்து கொள்ள, ஏனையோர் அது கூறும் உள்ளார்ந்த கருத்தைப் புரிந்தார்கள். அதாவது, அஸ ருத் தொழுகைக்கு அங்கு  சென்றடையக்கூடியவாறு வேகமாகச் செல்ல வேண்டுமென்பதே நபியவர்கள் அவ்வாறு கூறியதன் நோக்கம் என்பது அவர்களது நிலைப்பாடாகும்.

· ஸஹாபாக்களில் இருவர் குளிப்புக் கடமை யானவர்களாக இருந்தனர். அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களில் ஒருவர் தயம்மும் செய்து கொண்டு தொழுதார். மற்றவர் தொழவில்லை. இருவ ரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிய போது அவர்களில் எவரையும் நபியவர்கள் குறை கூற வில்லை என தாரிக் பின் ஷிஹாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்கள் : அஹ்மத், நஸாஈ )

· நபித் தோழர்கள் இருவர் ஒரு பயணத்தில் ஈடு பட்டிருந்தனர். தொழுகைக்கு நேரமாகியது. அவர்களி டம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே, தூய்மையான மண்ணினால் தயம்மும் செய்தனர். பின்னர் தொழு கையின் நேரம் முடிவடையும் முன்னரே நீரைப் பெற் றுக் கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகை யைத் திருப்பித் தொழுதார். அடுத்தவர் திருப்பித் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி (ஸல்) அவர்களி டம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி யவர்கள் திருப்பித் தொழாதவரைப் பார்த்து “ சரியாக ஸ§ன்னாவைச் செய்தீர். உனது தொழுகை உனக்குப் போதுமானதாகும்” என்றார்கள். திருப்பித் தொழுத வரைப் பார்த்து “ உனக்கு இரண்டு கூலிகள் கிடைக் கும்” என்று கூறினார்கள் என்று அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அறிவிக்கிறார்கள். ( நூல்கள்  : அபூதாவூத், பைஹகீ, ஹாகிம், தபரானீ, தாரகுத்னீ )

மேற்படி மூன்று நிகழ்வுகளும் ஸஹாபாக்கள் இஜ்தி ஹாத் செய்திருப்பதையும் அதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பதையும் காண முடிகின்றது. இஜ்தி ஹாத் செய்வதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இருந்தத னாலேயே அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக் கும்போது இஜ்திஹாத் செய்தது போன்று அவர்கள் மரணித்த பின்னரும் மிகப்பரந்த அளவில் இஸ்லாமிய சட்டத்துறையில் இஜ்திஹாதைப் பிரயோகித்திருப்பதை ஆதாரபூர்வமான செய்திகளினூடாக அறிய முடிகின்றது.

Wednesday, 6 July 2016

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர்.

பலரும் ஒரே வார்த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர்.

சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது பொதுவாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சமாகும்.

தபூக் போரில் பின்தங்கிய கஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கிய போது நபித்தோழர்கள் அவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.
(புஹாரி: 4418)

எனவே, மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சமாகும்.

பெருநாள் தினத்தில் வாழ்த்துக் கூறும் பழக்கமும் காலா காலமாக இருந்து வந்துள்ளது.

முஹம்மத் இப்னு ஸியாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
’நான் அபூ உமாமதுல் பாஹிலீ மற்றும் சில நபித்தோழர்களுடன் இருந்தேன். அவர்கள் பெருநாள் திடலில் இருந்து வந்தால் ஒருவர் மற்றவருக்கு ‘தகப்பல்லாஹு மின்னா வமின்கும்’ என்று  கூறுவார்கள். என்று குறிப்பிடுகின்றார்கள். இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ஜையி’ நல்லது என இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.

பெருநாள் தினத்தில் ஒருவர் மற்றவரைப் பார்த்து ‘தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்’ என்று கூறுவதில் பிரச்சினையில்லை என இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டதாக இமாம் இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இப்படி வாழ்த்துக் கூறுதல் பற்றிக் கேட்ட போது நான் அதை அறியவும் மாட்டேன், அதை மறுக்கவும் மாட்டேன் என்று பதில் கூறினார்கள். இது குறித்து இப்னு ஹபீப் அல் மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் விளக்கம் கூறும் போது நான் அறியமாட்டேன் என்றால் அது ஸுன்னா என அறியவில்லை. அதைச் சொல் பவரை நான் எதிர்க்கவும் மாட்டேன். ஏனென்றால், அது ஒரு நல்லவார்த்தை. அத்துடன் அது துஆவாகவும் அமைந்துள்ளது என்பதனாலாகும் என்று கூறுகின்றார்கள்.

எனவே, பெருநாள் தினத்தில் ‘ஈத் முபாரக்’ என்ற வாழ்த்துக் கூறலாம். வாழ்த்துக் கூறும் போது இந்த வார்த்தையைத்தான் கூற வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வதில் தப்பும் இல்லை. மக்கள் இந்த வார்த்தையைக் கூறித்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என நினைத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது பித்அத்தாகும் என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.

Monday, 4 July 2016

🌾"இஸ்லாத்தின் பார்வையில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டிய சிறந்த இடம் மஸ்ஜிதா? திடல் எனும் மைதானமா?"🌾

🌾"இஸ்லாத்தின் பார்வையில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டிய சிறந்த இடம் மஸ்ஜிதா? திடல் எனும் மைதானமா?"🌾

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

பெருநாள் தொழுகையை மஸ்ஜித் (பள்ளி வாசல்) அல்லாத திறந்த திடல்களில் தான் தொழ வேண்டும். பள்ளி வாசல்களில் தொழுவது  பித்'அத்தான செயலாகும். என பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழ வேண்டும் என்று அடம்பிப்பது அவர்கள் குர்ஆன் ஷரீப், ஹதீஸ்களை சரியாக விளங்காத காரணமாகும்.  அன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இடவசதி இல்லை என்ற காரணத்தினால் மைதானத்திற்க்கு அழைத்துச் சென்று தொழுகையை நடாத்தினார்கள். இதனை புரிந்து கொள்ளாமல் ஏதோ உலருகிறார்கள்.

பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் தொழவேண்டுமா? அல்லது திடலில் (மைதானத்தில்) தொழவேண்டுமா? என்ற கேள்விக்கு இஸ்லாம் மார்க்கம் இரண்டுக்குமே அனுமதி வழங்கியுள்ளது. அவ்விரண்டில் எது சிறந்தது என்று வரும்போது பள்ளிவாசலில் தொழுவதுதான் சிறந்தது என்று இமாம்கள் கூறுகிறார்கள். குறிப்பாக இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி மேலும் ஷாபிஈ மத்ஹபை சார்ந்த அறிஞர்களில் பெரும்பாலானவர்களோ ஒரு மஸ்ஜிதில் ஊர் மக்களுக்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றப் போதுமான இடவசதி இருந்தால் மைதானத்தில் தொழுவதை விட அந்த மஸ்ஜிதில் தொழுவதுதான் சிறந்தது என்றும் மைதானத்தில் தொழுதாலும் தவறில்லை என்றும் ஃபத்வா வழங்கியுள்ளார்கள்.

♣ பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் நிறைவேற்றுவது சிறந்தது என்பதற்காக ஆதாரம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு மஸ்ஜிதில் ஊர் மக்களுக்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றப் போதுமான இடவசதி இல்லாதிருந்ததாலும் திடலில் தொழுதது ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டும் என்பதினாலாகும். அந்த இருநோக்கமும் மஸ்ஜிதில் கைகூடி விட்டால் அங்கு தொழுவதே சிறந்தது. பைஹகியில் இடம்பெரும் பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாகும். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மழைபெய்த போது பெருநாள் தொழுகயை மஸ்ஜிதில் நிறைவேற்றிவிட்டு பின்வருமாறு கூறினார்கள். “மக்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களை திடலுக்கு அழைத்துச் சென்று தொழுகை நடத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில் திடலே மக்களுக்கு இலகுவானதாகவும் விசாலமானதாகவும் (போதுமானதாகவும்) இருந்தது. மஸ்ஜிதோ அவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே மழை பெய்துவிட்டால் மஸ்ஜிதே மக்களுக்கு இலகுவானதாகும் (வசதியானதாகும்).”

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருந்த போது பள்ளிவாசலில்தான் பெருநாள் தொழுகையை  நடாத்தினார்கள். ஸஹாபாக்களும் பள்ளியில்தான் தொழுதார்கள். மாறாக மைதானத்திற்க்கு அழைத்துச் செல்லவில்லை. ஏனெனில் அன்று மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபவர்கள் குறைவானவர்களாக இருந்தார்கள். மக்கா பள்ளிவாசலும் விசாலமாக பெரிதாக இருந்தது. அதனால் மக்கா பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நடாத்தினார்கள்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்க்கு சென்றபோது அதிகமாகனவர்கள் இஸ்லாத்தில் நுழைந்து கொண்டார்கள். அன்று மதீனா பள்ளிவாசலும் சிறியதாக இடவசதி இல்லாமல் இருந்ததோடு மக்கள் தொகையும் அதிகமாக காணப்பட்டன. பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை தொழுவதற்க்கு போதுமான இடவசதி இல்லாமல் இருந்த காரணத்தினால்  மைதானத்திற்க்கு அழைத்துச் சென்று தொழுகையை நடாத்தினார்கள். அதே சமயம் மதீனாவில் மழைபெய்த போது பள்ளிவாசலில் தொழுகையை நடாத்தியுள்ளார்கள்.

குறிப்பு : வஹ்ஹாபிகள் திடலில்தான் தொழவேண்டும் என்று அடம்பிப்பது அவர்களின் அறியாமைதான் காரணம்.
பெருநாள் தொழுகை திடலில்தான் தொழவேண்டும் என்றிருந்தால் மேலே கூறியது போல், நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருந்த போது ஸஹாபாக்களை மைதானத்திற்க்குதான் அழைத்துச் சென்று தொழுகை நடாத்திருக்க வேண்டும். இன்னும் மதீனாவில் மழைபெய்ந்த போதும் மைதானத்திற்க்குதான் அழைத்துச் சென்று தொழுகை நடாத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை மாறாக பள்ளியில்தான் தொழுகை நடாத்தினார்கள்.

♦ எனவே இதிலிருந்து பள்ளிவாசல்களில் ஊரில் உள்ள அனைத்து மக்களும் தொழுவதற்க்கு விசாலமான போதுமான இடவசதி இருந்தால் பள்ளியில்தான் தொழுவது சிறந்ததாகும். பள்ளிவாசலில் இடம்மில்லை என்றால்தான் மைதானத்திற்க்குச் செல்ல வேண்டும். ஆகவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் மதீனா பள்ளிவாசல் சிறியதாக இருந்தது. எனவே மைதானத்தில் தொழுதார்கள். இப்போதெல்லாம் பள்ளிவாசலில் போதுமான இடவசதிகள் இருக்கின்றெதல்லவா? பின்பு ஏன் திடலில் தொழ வேண்டும்? அந்த அடிப்படையில் மாஷா அல்லாஹ் இன்று மக்கா, மதீனா பள்ளிவாசலில் போதுமான இடவசதிகள் உள்ள காரணத்தினால் பெருநாள் தொழுகையை பள்ளியில்தான் தொழுகிறார்கள்.

♣ பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் தொழுவதால் கிடைக்கும் நன்மைகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :ஒருவர் காலைலும், மாலையும் தொழுவதற்க்காக பள்ளிவாசளுக்கு  நடந்து சென்றால் அவருக்காக வேண்டி சுவர்கத்தில் ஒரு வீட்டை இறைவன் கட்டுகிறான். (நூல் : புகாரி)

இந்த ஹதீஸ் பிரகாரம் அதிகாலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக
பள்ளிவாசலுக்கு நடந்து சென்றால் சுவர்கத்தில் ஒரு வீடு கிடைக்கும் ஆனால் திடலுக்கு சென்றால் இந்த பாகியம் கிடைக்கமாட்டாது. ஆனால் தொழுகை கூடும்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் பள்ளிவாசலுக்கு தொழுவதற்காக நடந்து சென்றால் அவன் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. ஒரு நன்மை எழுதப்படுகிறது. (நூல் :புகாரி)

இந்த ஹதீஸ் பிரகாரம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக அதிகாலையில் பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதனால் ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது, ஒரு நன்மை எழுதப்படுகிறது. ஆனால் திடலுக்கு சென்றால் இந்த நன்மை கிடைக்காது ஆனால் தொழுகை கூடும்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :ஒருவர் பள்ளிவாசலுக்குள்ளே இருக்கும் போது அவருக்குகாக மலக்குமார்கள் துஆ செய்கிறார்கள். இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவருக்கு ரஹ்மத் செய்வாயாக!. ஆனால் திடலுக்கு தொழச் சென்றால் இந்த துஆ கிடைக்காது
ஆனால் தொழுகை கூடும்.

♣ நபிவழியில் "திடல் தொழுகை" என்று விளம்பரம் செய்கின்றார்கள். இந்த பெயரில் ஒரு தொழுகை உண்டா?

இஸ்லாத்தில் பல பெயர்களில் தொழுகை உள்ளது. பர்ளுத் தொழுகை, சுன்னத் தொழுகை, ஆனால் திடல் தொழுகை என்று ஒரு பெயரில் தொழுகை இல்லை.(நவூதுபில்லாஹ்) இந்த பெயரில் ஒரு தொழுகையை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிமுகப்படுத்தவுமில்லை.
இது நாமோ நமக்கு முன்னிருந்த நல்லோர்களோ கேட்டிராத ஒரு பெயர், இது போன்ற புதுமை பெயர்களைக்கூறி மக்களிடையில் பிரசாரம் செய்கின்றார்கள். பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் தான் தொழவேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுததாக ஒரு ஆதாரமும் இல்லை என்று மக்களிடத்தில் போலித் தவ்ஹீத் வஹ்ஹாபிகள் பொய் மூட்டை முடிச்சுகளை அவிழ்த்து விடுகின்றார்கள். இறைவனை பயந்து கொள்ளுங்கள்!

♦ ஆகவே வஹ்ஹாபிகள் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழ வேண்டும் என்று அடம்பிப்பது அவர்கள் குர்ஆன் ஷரீப், ஹதீஸ்களை சரியாக விளங்காத காரணமாகும்.  அன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இடவசதி இல்லை என்ற காரணத்தினால் மைதானத்திற்க்கு அழைத்துச் சென்று தொழுகையை நடாத்தினார்கள். இதனை புரிந்து கொள்ளாமல் ஏதோ உலருகிறார்கள். எனவே பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதை விட பள்ளிவாசலில் தொழுவதுதான் சிறப்பாகும். மாஷா அல்லாஹ் இன்று எமது ஊர்களில் விசாலமான பெரிய பள்ளிவாசல் உள்ளன. ஆகையினால் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி மேலே கூறப்பட்ட நன்மைகளை பெற்றுக்கொள்வோமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

http://www.mailofislam.com/tm_article_-_perunal_tholugai_tholavendiya_sirantha_idam_ethu.html

✳ BY :- Moulavi
S.L Abdhur Rahman Ghawsi